Published : 03 Feb 2024 03:15 PM
Last Updated : 03 Feb 2024 03:15 PM
புதுடெல்லி: எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டதை அடுத்து பல்வேறு தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தங்கள் உற்சகத்துக்கான ஊற்று எல்.கே. அத்வானி என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். அத்வானிக்கு பாரத ரத்னா விருது அளிக்கப்பட இருப்பது குறித்த அறிவிப்பை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எங்கள் உற்சாகத்தின் ஊற்றாக இருக்கக்கூடிய எல்.கே. அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருப்பது பெருமையான உணர்வை ஏற்படுத்துகிறது. எங்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டுக்கும் இது பெருமைக்குரிய தருணம். அவர் தனது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் அர்ப்பணித்தவர். பாஜகவை மிகப் பெரிய இயக்கமாக வளர்த்ததில், வாஜ்பாயும் அத்வானியும் மிகப் பெரிய பங்கை வகித்தார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அளித்துள்ள பேட்டியில், “நாங்கள் தாதா என்று அழைக்கக்கூடிய எங்கள் தலைவருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி இதனை அறிவித்துள்ளார். சரியான நேரத்தில் எடுக்கப்பட்டுள்ள மிக உயரிய முடிவு இது. 70 ஆண்டுகளுக்கும் மேலாக பொது வாழ்வில் இருப்பவர் அத்வானி. தனது வாழ்க்கையை நாட்டுக்காக அர்ப்பணித்தவர். அவருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருப்பதற்காக நாங்கள் பெருமை கொள்கிறோம்; மகிழ்ச்சி அடைகிறோம்” என தெரிவித்துள்ளார்.
அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருப்பது கோடிக்கணக்கான இந்தியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், “சுதந்திர இந்தியாவின் மிகப் பெரிய தலைவர் அத்வானி. ராமர் கோயிலுக்காக ரத யாத்திரை நடத்தியவர். பாஜகவை விரிவுபடுத்தியவர். அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்ற முடிவை பிரதமர் மோடி எடுத்துள்ளார். அவருக்கு எனது நன்றியையும், அத்வானிக்கு எனது வாழ்த்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என கூறியுள்ளார்.
மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அளித்துள்ள பேட்டியில், “இன்று நான் மகிழ்ச்சியால் நிறைந்துள்ளேன். தனது வாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் பாரத மாதாவுக்காக அர்ப்பணித்தவர் அவர். பாஜகவை இந்த உயரத்துக்குக் கொண்டு வந்ததில் அவர் அளித்துள்ள பங்களிப்பு இணையற்றது. சமூகத்தின் ஒவ்வொரு பிரிவுக்கும் அவர் மிகப் பெரிய பங்களிப்பை செய்துள்ளார். அவருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க முடிவு. இதற்காக பிரதமர் மோடிக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். அத்வானியிடம் இருந்து நாங்கள் கற்றவை ஏராளம்” என தெரிவித்துள்ளார்.
ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான என். சந்திரபாபு நாயுடு, தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், “நாட்டின் உயரிய குடிமகன் விருதான பாரத ரத்னா விருதுக்கு தேர்வாகி உள்ள எல்.கே.அத்வானிக்கு வாழ்த்துகள். முன்மாதிரியான கடின உழைப்பு மற்றும் தேசத்தின் மீதான பக்தி ஆகியவற்றின் மூலம் தன்னை வேறுபடுத்திக் கொண்டவர் எல்.கே. அத்வானி. அவர் ஓர் அறிஞர்; தேசிய தலைவர். நாட்டிற்கு விதிவிலக்கான பங்களிப்புகளை அத்வானி செய்துள்ளார். அவருடன் பணிபுரியும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. அவரது உண்மையான அரவணைப்பு மற்றும் பாசமுள்ள இயல்பு அனைவர் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது” எனத் தெரிவித்துள்ளார்.
பாரத் ரத்னா விருது அறிவிக்கப்பட்டதை அறிந்து தனது தந்தை மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாக எல்.கே. அத்வானியின் மகள் பிரதிபா அத்வானி தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அவர் அதிகம் பேசக் கூடியவர் அல்ல. ஆனால், அவரது கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது. நாட்டுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் அவர். இந்த தருணத்தில் குடியரசுத்
தலைவர் திரவுபதி முர்முவுக்கும், நாட்டு மக்களுக்கும் நாங்கள் எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்” எனக் கூறினார்.
பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியின் எம்பியும், தெலங்கானா முன்னாள் முதல்வர் கே. சந்திரசேகர ராவின் மகளுமான கவிதா, “பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருப்பதற்காக எல்.கே. அத்வானிக்கு எனது மனமார்ந்த நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டிருக்கிறது. அத்வானிக்கு பாரத ரத்னா விருது அளிக்கப்பட இருக்கிறது. இரண்டுமே நல்ல விஷயம். பாஜகவின் திட்டம் முழுமையடைந்திருப்பதாகக் கருதுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT