Published : 03 Feb 2024 01:23 PM
Last Updated : 03 Feb 2024 01:23 PM
புதுடெல்லி: காலத்துக்கு ஏற்ப சட்டங்களை இந்தியா நவீனப்படுத்தி வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். காமன்வெல்த் சட்டக் கல்விச் சங்கத்தின் காமன்வெல்த் தலைமை வழக்கறிஞர்கள் மற்றும் தலைமை சட்ட ஆலோசகர்கள் மாநாடு புதுடெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இன்று தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி மாநாட்டை தொடங்கிவைத்தார். சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய்.சந்திரசூட் ஆகியோர் இதில் பங்கேற்றனர். ஆசிய - பசிஃபிக், ஆப்பிரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளை உள்ளடக்கிய காமன்வெல்த் நாடுகளின் தலைமை வழக்கறிஞர்கள் மற்றும் தலைமை சட்ட ஆலோசகர்கள் மற்றும் பல்வேறு சர்வதேசப் பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்டனர்.
நீதி வழங்கலில் எல்லை தாண்டிய சவால்கள் என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறும் இந்த மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, காலத்துக்கு ஏற்ப சட்டங்களை இந்தியா நவீனப்படுத்தி வருகிறது. 100 ஆண்டுகள் பழமையான காலனிய கால குற்றவியல் சட்டங்களுக்குப் பதிலாக புதிய சட்டங்களை இந்தியா சமீபத்தில் நிறைவேற்றி இருக்கிறது. காலனிய காலத்தில் இருந்து சட்ட நடைமுறை இந்தியாவில் இருந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் அவற்றில் அதிக அளவில் சீர்திருத்தங்களை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். காலாவதியான ஆயிரக்கணக்கான காலனிய கால சட்டங்களை இந்தியா அகற்றி இருக்கிறது.
சில நேரங்களில் நீதியை உறுதிப்படுத்த ஒரு நாடு பிற நாடுகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டி உள்ளது. நாம் இணைந்து செயல்படும்போது, ஒரு நாட்டின் சட்ட வழிமுறையை மற்றவர்களும் புரிந்து கொள்ள முடியும். புரிதல் மேம்படும்போது, ஒருங்கிணைந்த சக்தி உருவாகிறது. இந்த ஒருங்கிணைந்த சக்தி சிறந்த, வேகமான நீதியை வழங்க ஊக்கமளிக்கிறது. 21ம் நூற்றாண்டின் சவால்களுக்கு, 20ம் நூற்றாண்டின் அணுமுறையைக் கொண்டு தீர்வு காண முடியாது.
ஆப்பிரிக்க ஒன்றியத்துடன் இந்தியா தனித்துவ உறவை கொண்டிருக்கிறது. ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமை வகித்தபோதுதான், அந்த அமைப்பில் ஆப்ரிக்க ஒன்றியம் இணைந்தது என்பதற்காக நாங்கள் பெருமை கொள்கிறோம் என தெரிவித்தார்.
இன்றைய மாநாட்டில், சட்டம் மற்றும் நீதி தொடர்பான முக்கியமான பிரச்சினைகள் மற்றும் சட்ட நடைமுறையின் நெறிமுறை பரிமாணங்கள், நிர்வாகப் பொறுப்பு, மற்றும் நவீன கால சட்டக் கல்வியை மறுபரிசீலனை செய்தல் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. சட்டக் கல்வி மற்றும் நாடுகடந்த நீதி வழங்கலில் உள்ள சவால்களை எதிர்கொள்ள விரிவான திட்டத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட பிரத்யேக வட்ட மேசை மாநாடும் இந்த மாநாட்டில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT