Published : 03 Feb 2024 10:25 AM
Last Updated : 03 Feb 2024 10:25 AM
அயோத்தி: அயோத்தியுடன் கோயில், மசூதி விவகாரங்கள் முடிவுக்கு வர வேண்டும் என பாபர் மசூதி தரப்பின் முக்கிய மனுதாரராக இருந்த ஹாசீம் அன்சாரியின் மகன் இக்பால் அன்சாரி தெரிவித்துள்ளார். இக்பால் அன்சாரி தற்போது ராமர் கோயிலின் முக்கிய வாசலுக்கு முன் குடியிருக்கிறார். தன் வீட்டுக்கு எதிரே இருசக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் பணியை செய்து வருகிறார். ‘இந்து தமிழ் திசை’ இணையத்துக்கு இக்பால் அன்சாரி அளித்த சிறப்பு பேட்டி பின்வருமாறு:
அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்ட பின் முஸ்லிம்கள் உணர்வு என்ன?
இந்திய முஸ்லிம்கள் நாட்டில் அமைதியை விரும்புகின்றனர். இதற்கு மதக்கலவரங்கள் முடிவுக்கு வருவது அவசியம். அப்போதுதான் முஸ்லிம்களால் பிழைப்புக்காக அவர்தம் பணிகளை செய்ய முடியும். இதற்காகத்தான் நான் நவம்பர் 9, 2019 இல் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று ராமர் கோயில் விழாவுக்கும் சென்று வந்தேன். அயோத்தியில் இந்து - முஸ்லிம் என மதவித்தியாசம் பாராமல் அனாதையாக இறப்பவர்கள் உடல்களுக்கு இறுதிச்சடங்கு செய்யும் ஷெரீப் சாச்சாவும் வந்திருந்தார்.
பாபர் மசூதி - ராமர் கோயில் விவகாரத்தில் முக்கிய மனுதாராரக இருந்து மறைந்த உங்கள் தந்தை ஹாசிம் அன்சாரியின் கருத்து என்னவாக இருந்தது?
எனது தந்தை உயிருடன் உள்ளவரை பாபர் மசூதி-ராமர் கோயில் விவகாரம் பிரச்சினையாகக் கிளம்பியதற்கு காரணம் காங்கிரஸ்தான் எனப் புகார் கூறி வந்தார். காங்கிரஸ் ஆட்சியில் பாபர் மசூதியில் குழந்தை ராமர் சிலை வைக்கப்பட்டது. தொடர்ந்து மதக்கலவரங்களும் ஏற்பட்டு வந்தது. அக்கட்சியின் ஆட்சியாளர்கள்தான் பாபர் மசூதியில் பூட்டை மாட்டினர். பிறகு அதை பூசைக்காகத் திறந்தும் விட்டனர். காங்கிரஸ் ஆட்சியில்தான் பாபர் மசூதியும் இடித்து தரைமட்டமானது. பாஜக இடிக்கப்பட்ட இடத்தில் கோயிலை கட்டி அயோத்தி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
மசூதியை இடித்த கரசேவகர்கள், ‘ராம் மந்திர் தூட்டி ஹை! காசி மத்துரா பாக்கி ஹை!’ என இட்டக் கோஷம் உண்மையாகும் வகையில், காசியின் கியான்வாபி, மதுராவின் ஷாயி ஈத்கா ஆகிய மசூதிகளும் இழக்கும் சூழல் உருவாகி விட்டதே?
நம் நாட்டில் அரசியல் கட்சிகள் உள்ளவரை இதுபோன்ற பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். இதுபோன்ற பிரச்சினைகளுக்கு முடிவு கட்ட ராமர் கோயில் விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறியதை நடைமுறைப்படுத்த வேண்டும். அவர், நமக்கு உள்ள அனைத்து கருத்துவேறுபாடுகள் களையப்பட வேண்டும் எனவும், ஒவ்வொருவர் மனதிலும் ராமர் இடம்பெற்றுள்ளதை வைத்து நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டி வலியுறுத்தினார். இதற்கு, அயோத்தியுடன் நாட்டில் கோயில்-மசூதிக்கு இடையிலான விவகாரங்கள் முடிவுக்கு வர வேண்டும் என்பது அனைவரது விருப்பம்.
தற்போது கட்டப்படும் ராமர் கோயிலால் அயோத்தியில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் என்ன? இதன் பலனாக இந்து, முஸ்லிம் உள்ளிட்ட உள்ளூர்வாசிகளுக்கு கிடைக்கும் பலன்கள் என்ன?
அயோத்திவாசிகள் சிறிதும் எதிர்பார்க்காத விமானநிலையம் இங்கு கட்டப்பட்டு விட்டது. சாலைகள் விரிவுபடுத்தப்பட்டு, கோயிலால் அனைவருக்கும் வியாபாரம், சம்பாத்தியங்கள் பெருகி விட்டன. இனி, தம் பிழைப்பிபுக்காக அயோத்திவாசிகள் தம் நகரை விட்டு புலம்பெயர்வது முடிவு பெறும்.
ராமர் கோயில் தரப்பின் திகம்பர அஹாடாவின் மறைந்த தலைவர் ராமச்சந்திர பரமஹம்ஸுடன் தங்கள் தந்தையின் நட்பு வழக்கை மீறி தொடர்ந்தது எப்படி?
அயோத்தி நகரின் இந்து, முஸ்லிம், சீக்கியர் என அனைத்து மதத்தினரும் நட்புடன் பழகும் வழக்கம் இன்றுவரை தொடர்கிறது. வெளியிலிருந்து வந்தவர்களால்தான் பிரச்சினை உருவாகி வளர்ந்தது. இவர்களில் கண்களில் தப்ப எனது தந்தை லக்னோ நீதிமன்றத்துக்கு செல்ல ஊருக்கு வெளியே காத்திருப்பார். அதே வழக்குக்கு செல்லும் எதிர்தரப்பு வாதிகளில் ஒருவரான துறவி பரமஹன்ஸ் எனது தந்தையை தனது காரில் ஏற்றிக் கொண்டு நீதிமன்றம் சென்று வருவார். இவர் உள்ளிட்ட அயோத்தியின் பல துறவிகளும், மடாதிபதிகளும் என் தந்தையைக் காண வீட்டிற்கு வந்துசெல்வதை நான் சிறுவயது முதல் கண்டுள்ளேன்.
பாபர் மசூதி இடிப்புக்குப் பின் அதை கட்டுவதாகக் கூறி அமைக்கப்பட்ட பல முஸ்லிம் அமைப்புகளின் நிலை என்ன?
இதில், முக்கியமான பாபர் மசூதி ஆக்ஷன் கமிட்டி உள்ளிட்ட அனைத்தும் கலைக்கப்பட்டு விட்டன. இடிக்கப்பட்டதற்கு இணையாக அரசு 25 கி.மீ தொலைவிலுள்ள தனிப்பூரில் உபி சன்னி மத்திய வக்பு வாரியத்திற்கு அளித்த நிலத்தில் இன்னும் மசூதியின் பணி துவக்கப்படாதது ஏன்? என்றுகூட எவரும் இப்போது கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
ராமர் கோயில் கட்டி முடிப்பதற்குள் அயோத்தி விட்டு வெளியேறும்படி முஸ்லிம்களுக்கு மிரட்டல் விடுக்கப்படுவதாகத் சமூவலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறதே?
இதன் மீது நான் எந்த கருத்தையும் கூறவிரும்பவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT