Published : 03 Feb 2024 06:18 AM
Last Updated : 03 Feb 2024 06:18 AM

பாரத் ஜோடோ யாத்திரையின் போது தனக்கு பதில் ‘டூப்’ பயன்படுத்திய ராகுல் காந்தி: விரைவில் அம்பலப்படுத்துவதாக அசாம் முதல்வர் தகவல்

ராகுல் காந்தி

குவாஹாட்டி: `பாடி டபுள்` எனப்படும் டூப் ஆட்களை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பயன்படுத்துகிறார். அந்த ‘டூப்’ நபரின் பெயர் விவரங்களை விரைவில் அம்பலப்படுத்துவோம் என்று அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

திரைப்பட நடிகர், பிரபலமான அரசியல்வாதிகள், நாட்டுத் தலைவர்கள் `பாடி டபுள்’ எனப்படும்டூப் நடிகர்களை பயன்படுத்துவார்கள். அவர்களது உயிருக்கு அச்சுறுத்துதல் இருக்கும் நிலையில் வெளியில் தோன்றும்போது அவர்கள் `பாடி டபுள்’ ஆட்களை பயன்படுத்துவர். தற்போது காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியும் அதேபோன்று `பாடி டபுள்’ ஆட்களை பயன்படுத்துவதாக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது:

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை அசாமில் கடந்த ஜனவரி 18-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெற்றது. அப்போது யாத்திரையின் பல இடங்களில் ராகுல் காந்தியைப் போன்ற ஒரு நபர், ராகுலுக்குப் பதிலாக யாத்திரையில் இடம்பெற்றார். இதன்மூலம், ராகுல் காந்தி தனது யாத்திரையில் `பாடி டபுள்’ டூப் ஆட்களை பயன்படுத்துகிறார் என்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம்.

அசாமுக்கு பிரதமர் மோடி வரும் 4-ம் தேதி வருகிறார். அவர் வந்து சென்றதும் ராகுல் காந்தியின் `பாடி டபுள்’ யார் என்பதை நாங்கள் வெளி உலகுக்கு தெரியப்படுத்துவோம்.

அசாமில் யாத்திரை நடத்தியபோது ராகுல் காந்தியைப் போன்றே இருக்கும் நபர் தொண்டர்களை நோக்கி கையசைத்தபடியே வேனில் சென்றார். யாத்திரை முடிந்த நிலையில் `பாடி டபுள்’ நபர், குவாஹாட்டியிலிருந்து புறப்பட்டு, மேற்கு வங்கத்துக்குச் சென்றுவிட்டார். அவர் யாரென்பதை விரைவில் தெரிவிக்கிறோம்.

இவ்வாறு அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x