Published : 15 Aug 2014 02:04 PM
Last Updated : 15 Aug 2014 02:04 PM
‘நாடாளுமன்றமும் அரசு நிர்வாக மும் நீதித் துறையின் சுதந்திரத்தில் தலையிடக் கூடாது’ என்று சுதந்திர தின விழாவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற வளாகத்தில் பார் அசோசியேஷன் சார்பில் நாட்டின் 68-வது சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை நடை பெற்றது. அப்போது தேசியக் கொடியை ஏற்றி வைத்த பின்னர் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா பேசியதாவது:
நாடாளுமன்றம், அரசு நிர்வாகம், நீதித்துறை ஆகிய மூன்று அமைப்பு களும் ஒன்றின் மீது மற்றொன்று மரியாதை வைத்துள்ளன. இவை அவற்றுக்குரிய அதிகாரத்துக்குட் பட்டு செயல்படும் வகையில் அரசியல் சாசனம் உருவாக்கப்பட் டுள்ளது. இவை ஒன்றின் சுதந்திரத் தில் இன்னொன்று தலையிடாத வகையில் நடந்து கொள்ள வேண்டும். நீதித் துறையின் சுதந்திரத்தில் மற்ற இரண்டு அமைப்புகளின் தலையீடும் இருக்கக் கூடாது.
உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் 1,000-க்கும் குறை வான நீதிபதிகளை நியமிக்கும் பொறுப்பு மட்டுமே நீதித்துறையிடம் உள்ளது. கீழமை நீதிமன்றங்களில் உள்ள 19,000-க்கும் அதிகமான நீதிபதிகளை நியமிக்கும் பொறுப்பு மாநில அரசுகளிடமே உள்ளது.
நீதித் துறையின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளவர் என்ற முறையில், குற்றவியல் நீதிமன்றங் களின் பணிச்சுமையை நினைத்து என் இதயத்தில் ரத்தம் கசிகிறது. குற்றவியல் நீதி பரிபாலன முறை கடும் நெருக்கடியையும், மனித உரிமை, சுதந்திர மீறலையும் சந்தித்து வருகிறது.
போலீஸாரிடம் போதுமான தொழில்நுட்ப வசதிகள் இல்லை. அவர்களால் ‘சைபர் கிரைம்’ போன்ற குற்றங்களைத் தடுக்க முடியவில்லை. போலீஸ் மற்றும் நீதித் துறையை நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்டவையாக மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
சிறைகளில் உள்ளவர்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் விசாரணைக் கைதிகள் என்பது வருந்தத்தக்க உண்மை. மாவட்ட சிறைகளில் 72 சதவீதம் பேர் விசாரணைக் கைதிகள் என்பது இன்னும் மோசமான நிலையை சுட்டிக் காட்டுகிறது என ஆர்.எம்.லோதா தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேசியதாவது:
இப்போது நீதித் துறை முழு சுதந்திரத்துடன் செயல்படுகிறது. பொருத்த மற்ற பழங்கால சட்டங்களை மத்திய சட்டத் துறை அமைச்சகம் பட்டியலிட்டு வருகிறது. இந்த வரிசையில் 200 முதல் 300 சட்டங்கள் அடுத்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் வாபஸ் பெறப்படும் என அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT