Published : 02 Feb 2024 05:38 PM
Last Updated : 02 Feb 2024 05:38 PM

கியான்வாபி மசூதி பாதாள அறையில் இந்துக்கள் வழிபட இடைக்கால தடை விதிக்க அலகாபாத் ஐகோர்ட் மறுப்பு

புதுடெல்லி: வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதியின் தரைத்தளத்தின் கீழ் உள்ள பாதாள அறையில் இந்துக்கள் வழிபாடு நடத்த வாரணாசி நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க அலகாபாத் உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தை ஒட்டி உள்ள கியான்வாபி மசூதி, கோயிலை இடித்து கட்டப்பட்டது என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த மசூதிக்குள் உள்ள கோயிலின் அர்ச்சகருடைய வாரிசுதாரர் சைலேந்திர குமார் பதக் என்பவர் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர், ‘கியான்வாபி மசூதியில் கீழ்தளத்தில் உள்ள 7 அறைகளில் ஓர் அறையில் உள்ள தெய்வங்களுக்கு தனது தாத்தா சோம்நாத் வியாஸ் பூஜை செய்து வந்தார். 1993-ம் ஆண்டு முதல் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. எனவே, அங்கு மீண்டும் பூஜைகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட வேண்டும்’ என்று தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த மாவட்ட நீதிபதி அஜய் கிருஷ்ண விஸ்வேஷா, நேற்று முன்தினம் அளித்த தீர்ப்பில், கியான்வாபி மசூதியின் கீழ்த்தளத்தில் உள்ள வியாஸ் கா தேகனா என்ற இடத்தில் இந்துக்கள் வழிபாடுகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. வழிபாடுகளை நடத்த தேவையான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் 7 நாட்களுக்குள் மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை அடுத்த 1 மணி நேரத்தில் மாவட்ட ஆட்சியர் எஸ்.ராஜலிங்கம், போலீஸாருடன் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு வந்தார். அவரது உத்தரவின்படி கியான்வாபி மசூதியை ஒட்டி அமைந்த வியாஸ் மண்டபத்தின் இரும்புத் தடுப்புகள் அகற்றப்பட்டன. இதையடுத்து தினமும் 5 வேளை பூஜைக்கான ஏற்பாடுகள் தொடங்கின. முதல் பூஜை நள்ளிரவு நடைபெற்றது. நீதிமன்ற உத்தரவினைத் தொடர்ந்து இந்துக்கள் இரண்டாவது நாளாக இன்றும் மசூதி வளாகத்தில் வழிபாடு நடத்தினர்.

இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து மசூதி தரப்பில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், மசூதியின் கீழ்த்தளத்தில் உள்ள வியாஸ் கா தேகனா என்ற இடத்தில் இந்துக்கள் வழிபாடு மேற்கொள்ள அளிக்கப்பட்ட அனுமதிக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது. இதையடுத்து, வழக்கு விசாரணை வரும் 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x