Last Updated : 02 Feb, 2024 04:20 PM

1  

Published : 02 Feb 2024 04:20 PM
Last Updated : 02 Feb 2024 04:20 PM

ஹேமந்த் சோரனுக்கு அடுத்து அரவிந்த் கேஜ்ரிவாலா? - இக்கட்டான சூழலில் ‘இண்டியா’ கூட்டணி!

‘பாஜகவை ஆட்சியிலிருந்து இறக்க வேண்டும்’ என்ற நோக்கில் நாடு முழுதும் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து தொடங்கிய ‘இண்டியா’ கூட்டணி நாளுக்கு நாள் பின்னடவைச் சந்தித்து வருகிறது. ஒருபுறம் கூட்டணியிலிருந்து மூன்று மாநில கட்சிகள் வெளியேறின. மற்றொரு புறம் கூட்டணி கட்சித் தலைவர் மீது சிபிஐ, அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன், அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டிருக்கிறார். அடுத்ததாக, ‘அரவிந்த் கேஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்படுவார்’ என பாஜக தலைவர்கள் வெளிப்படையாகக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இதனால், கடும் பின்னடைவைச் சந்தித்துள்ள ‘இண்டியா’ கூட்டணி மீளுமா என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

ஜார்க்கண்ட் மாநில முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன், சுரங்க முறைகேட்டுடன் தொடர்புடைய பண மோசடி வழக்கு விசாரணை முடிந்த பின், ஜனவரி 31-ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். அவரை, ஒரு நாள் நீதிமன்ற காவலில் விசாரிக்க, நீதிமன்றம் உத்தரவு வழங்கியது. அதேவேளையில், கைது நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் ஹேமந்த தரப்பில் வழக்குப் பதியப்பட்டது. இன்று, இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இதை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனிடையே, ஹேம்ந்த் சோரனை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது ஹேமந்துக்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

யார் இந்த சம்பாய் சோரன்? - அமலாக்கத் துறையால் கைது செய்யப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, ஜார்க்கண்ட் முதல்வராக சம்யாய் சோரனை அறிவித்துவிட்டு தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். பின் அவர் கைது செய்யப்பட்டார். ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் மனைவி நியமிக்கப்படுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், அக்கட்சியின் போக்குவரத்து, பட்டியல் மற்றும் பழங்குடியின அமைச்சரான சம்பாய் சோரன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் முதல்வராகவும் பதவியேற்றுவிட்டார்.

பழங்குடியின அமைப்பின் முக்கியமான தலைவராக அறியப்படுபவர் சம்பாய் சோரன். ஜார்க்கண்ட் தனி மாநில கோரிக்கைக்குத் தீவிரமாகப் போராடியதைத் தொடர்ந்து இவருக்கு ‘ஜார்க்கண்ட் டைகர்’ என்னும் அடைமொழியும் கொடுக்கப்பட்டது. 1991-ம் ஆண்டு முதல் 30 ஆண்டுகளுக்கும் மேலாக செரிகேலா சட்டமன்றத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார். மேலும், ஹேமந்த் சோரனின் தந்தை சிபு சோரனின் தீவிர விசுவாசியாக அறியப்படுபவர்தான் சம்பாய் சோரன்.

ஹேமந்த் மனைவி முதல்வர் ஆகாதது ஏன்? - பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் துபே, 29 எம்எல்ஏக்களில் 18 பேர் ஹேமந்தின் மனைவி கல்பனாவுக்கு ஆதரவாக இல்லை. ஹேமந்த் சோரனின் சகோதரரும், தும்காவின் எம்எல்ஏ பசந்த் சோரனை முதல்வராக நியமிக்க மற்ற உறுப்பினர்கள் விருப்பம் தெரிவித்ததாக கூறினார். ஹேமந்த் சோரனின் மூத்த சகோதரர் துர்கா சோரனின் மனைவி சீதா சோரனும் முதல்வர் பதவியை ஏற்க ஆர்வமாக இருப்பதாக செய்திகள் வெளியாகின. சீதா சோரன் ஜமா சட்டமன்ற தொகுதியின் சிட்டிங் எம்எல்ஏவாக இருப்பவர். எம்எல்ஏவாகக் கூட இல்லாத கல்பனா சோரனுக்கு முதல்வர் பதவி கொடுப்பதில் சீதா சோரனுக்கு விருப்பம் இல்லை என தகவல் சொல்லப்படுகிறது. இந்த நிலையில்தான், பல ஆண்டுகளாகக் கட்சியில் இருக்கும் சம்பாய் சோரனுக்கு முதலமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.

கைதுக்கு முன்பு என்ன நடந்தது? - ஹேமந்த் சோரன் விசாரணைக்கு செல்லும் முன்பாகவே, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘நான் கைது செய்யப்பட்டால், ஆட்சியை சம்பாய் சோரன் வழிநடத்துவார்’ எனக் கூறப்பட்டுள்ளார். அவர் கைது செய்யப்படுவதற்கு முன்னதாக வெளியிட்ட வீடியோவில், “கிட்டத்தட்ட 7 மணி நேரம் என்னிடம் அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டது. எனக்கு தொடர்பே இல்லாத ஒரு வழக்கில் அவர்களின் ’அஜெண்டா’ படி என்னை கைது செய்துள்ளனர். ஆனால், அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. என் பெயரைக் கெடுக்க வேண்டும் என்னும் ஒரே நோக்கத்தில் டெல்லியிலும், சோதனை நடத்தியிருக்கிறார்கள்” எனப் பேசியிருக்கிறார்.

ஹேமந்த் சோரன் கைதுக்குப் பின்னர் ‘இண்டியா’ கூட்டணி டெல்லியில் அவசர ஆலோசனை நடத்தியது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே வீட்டில் நடந்த இந்தக் கூட்டத்தில் சோனியா காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு ஆகியோர் பங்கேற்றனர். இதில் ஹேமந்த சோரன் கைது குறித்தும், அங்கு தேர்தலைச் சந்திக்கவிருப்பது குறித்தும் பேசப்பட்டதாக சொல்லப்படுகிறது.

அடுத்த டார்கெட் கேஜ்ரிவாலா? - ஹேமந்த் சோரன் போலவே டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலும் அமலாக்கத் துறையின் சம்மன்களைத் தொடர்ந்து புறக்கணித்து வருகிறார். டெல்லி மதுபான கொள்கை வழக்கு விசாரணைக்காக ஆஜராகும்படி, கடந்த நான்கு மாதங்களில் நான்கு முறை அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், சட்டவிரோதமாக சம்மன் அனுப்பப்பட்டதாகக் கூறி அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகவில்லை. ஐந்தாவது முறையாக சம்மனும் சமீபத்தில் அனுப்பி இருக்கிறது அமலாக்கத் துறை. அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராக மாட்டார் என்று அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாஜக மாநிலங்களவை எம்.பி ஹர்நாத் சிங் யாதவ், “ஹேமந்த் சோரன் மீதான அமலாக்கத் துறையின் நடவடிக்கை முற்றிலும் சரியானது. அடுத்து சிக்கப் போவது அரவிந்த் கேஜ்ரிவால்தான்” என வெளிப்படையாக கருத்து தெரிவித்தார்.

மேலும், லாலு பிரசாத் யாதவ் மீதான சிபிஐ வழக்கும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. எனவே, ஒருபக்கம் நிதிஷ்குமார், மம்தா பானர்ஜி என முக்கிய தலைவர்கள் வெளியேறும் சூழலில், மறுபக்கம் அமலாக்கத் துறை, சிபிஐ வழக்குகள் ‘இண்டியா’ கூட்டணி தலைவர்களை வட்டமடிப்பதால் ‘இண்டியா’ கூட்டணி சற்றே நிலை குலைந்துள்ளது. இதிலிருந்து இண்டியா கூட்டணி மீளுமா என்னும் சந்தேகம் வலுத்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x