Published : 02 Feb 2024 01:05 PM
Last Updated : 02 Feb 2024 01:05 PM
புதுடெல்லி: சண்டிகர் மேயர் தேர்தலில் முறைகேடு நடந்ததாகக் கூறி பாஜக தலைமையகத்துக்கு வெளியே ஆம் ஆத்மி கட்சி இன்று (வெள்ளிக்கிழமை) போராட்டம் நடத்தி வரும் நிலையில், டெல்லியில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள், கட்சி தொண்டர்கள் கைது செய்யப்பட்டு வருவதாக முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சண்டிகர் மேயர் தேர்தலில் முறைகேடு நடந்ததாகக் கூறி பாஜக தலைமையகத்துக்கு வெளியே ஆம் ஆத்மி கட்சி இன்று வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், டெல்லி முதல்வா் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சியில் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய ஊழல் வெளிச்சத்துக்கு வருகிறது என்றும், ஆம் ஆத்மி அரசின் ஊழலுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி தலைமை அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகவும் பாஜக தெரிவித்துள்ளது. இதற்கிடையே மத்திய டெல்லியில் கூடுதல் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, சண்டிகர் மேயர் தேர்தலில் நடந்த முறைகேட்டுக்கு எதிராக பாஜக தலைமையகத்துக்கு வெளியே 11 மணிக்கு ஆம் ஆத்மி நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க பஞ்சாபில் இருந்து ஆம் ஆத்மி கட்சியினர் வருகை தருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலீஸார் உரிய கவனத்துடன் நிலைமையை கண்காணித்து வருகின்றனர். ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தனது கட்சியினரின் ட்வீட்டை தனது எக்ஸ் தளத்தில் ரீட்வீட் செய்து வருகிறார். அதில், “ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள், கவுன்சிலர்கள் மற்றும் தொண்டர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்படுகிறார்கள்....இங்கு என்ன நடக்கிறது?” என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இரு கட்சிகளின் போராட்டத்தை கருத்தில் கொண்டு மத்திய டெல்லியில் பண்டிட் தீன் தயாள் உபாத்யாயா மார்க் செல்லும் பல சாலைகளில் போலீஸார் தடுப்புகள் அமைத்தும், சாலைகளை வெள்ளிக்கிழமை காலை முதல் மூடியும் உள்ளனர். அதோடு, பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் தலைமையகம் அருகே தடுப்புகள் அமைத்தும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் பிரியங்கா கக்கர், “எங்கள் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இது ஜனநாயகத்திற்கு மிகவும் ஆபத்தானது” என்றார்.
டெல்லியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு: சட்டம்-ஒழுங்கு நிலையைப் பராமரிக்க தேசிய தலைநகரின் பல பகுதிகளில் கிட்டத்தட்ட 1,000 போலீஸார் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் போராட்டத்திற்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை நாங்கள் செய்வோம் மற்றும் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துவோம். சட்டம் ஒழுங்கை மீற யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது. டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோரும் போராட்டத்தில் கலந்து கொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT