Published : 02 Feb 2024 11:22 AM
Last Updated : 02 Feb 2024 11:22 AM

5-வது சம்மனையும் புறக்கணிக்கும் கேஜ்ரிவால்; அரசை கவிழ்ப்பதே மோடியின் நோக்கம் என ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

அர்விந்த் கேஜ்ரிவால்

புதுடெல்லி: டெல்லியில் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக ஜனவரி 2-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்த நிலையில், அவர் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு ஆஜராக மாட்டார் என்று அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி அரசின் 2021- 2022ம் நிதியாண்டின் புதிய மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தன. இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு, 3-வது முறை அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி இருந்தது. சம்மனை வாங்க மறுத்த அர்விந்த் கேஜ்ரிவால், தனக்கு எதிராக சம்மன் அனுப்புவது சட்டவிரோதம். இந்த சம்மனை அமலாக்கத்துறை திரும்பப் பெற வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

சில வாரங்களுக்கு முன்னதாக 4-வது முறையாக சம்மன் அனுப்பியது. அப்போதும் அவர் ஆஜராகாத நிலையில், அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டு கைது செய்யப்படலாம் என ஆம் ஆத்மியின் கட்சி தரப்பில் அஞ்சப்பட்டது. இந்த நிலையில்தான் புதன்கிழமை 5-வது முறையாக சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை.

அந்த சம்மனில் வருகிற 2-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்நிலையில், அவர் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு ஆஜராக மாட்டார் என்றும் அரவிந்த் கேஜ்ரிவாலை கைது செய்து டெல்லி அரசை கவிழ்ப்பதே பிரதமர் மோடியின் நோக்கம் என்று ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது. தற்போது டெல்லியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. முன்னதாக 2023 ஆம் ஆண்டு நவம்பர் 2, டிசம்பர் 21 மற்றும் இந்த ஆண்டு ஜனவரி 3 மற்றும் ஜனவரி 18 ஆம் தேதிகளுக்கான அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன்களை அரவிந்த் கேஜ்ரிவால் தவிர்த்துள்ளார்.

வழக்கின் பின்னணி: டெல்லி அரசு, மதுபான விற்பனையை தனியாரிடம் வழங்க ஏதுவாக 2021-22 நிதியாண்டுக்கான புதிய மதுக்கொள்கையை கொண்டு வந்தது. இதில் ஊழல் நடந்துள்ளதாக குற்றம்சாட்டிய துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார். இதையடுத்து புதிய மதுபான கொள்கையை டெல்லி அரசு கடந்த ஆண்டு (2022) ஆகஸ்ட் மாதம் ரத்து செய்தது. இது தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றன.

இந்த வழக்கில் அமலாக்கத் துறை 2 குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. இதுவரை டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரத்து செய்யப்பட்ட மதுபான கொள்கை மூலம் கிடைத்த ரூ.100 கோடி லஞ்சப் பணத்தை, அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மிகட்சி கோவாவில் கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தியதாக ஒரு குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x