Published : 02 Feb 2024 05:33 AM
Last Updated : 02 Feb 2024 05:33 AM
சென்னை: சென்னை பெரம்பூர் பின்னி மில் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டியபோது, 2015 - 2017 காலகட்டத்தில் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகளுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கைமாறியதாக எழுந்த புகார் தொடர்பாக, கட்டுமான நிறுவனங்களுடன் தொடர்புடைய 5 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர். முதல் தகவல் அறிக்கையில் சில எம்.பி., எம்எல்ஏக்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகள், தாசில்தார், விஏஓ மற்றும் அதிகாரிகளின் பெயர் பட்டியல் இடம்பெற்றுள்ளது.
அடுக்குமாடி குடியிருப்பு: சென்னை பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் பின்னி மில் இயங்கி வந்தது. பல்வேறு பிரச்சினைகள் காரணமாக இந்த மில் மூடப்பட்டது. இதையடுத்து, இங்குள்ள இடத்தின் ஒரு பகுதியை தனியார் நிறுவனங்கள் சார்பில் வாங்கி அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டது. முன்னதாக, சுமார் 14.16 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தையொட்டி குறுகலான சாலை இருந்ததால், குடியிருப்பு கட்ட சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் (சிஎம்டிஏ) அனுமதி பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டன.
இதையடுத்து, கவுன்சிலர் முதல் எம்எல்ஏ, எம்.பி. எனபல்வேறு அரசியல் பிரமுகர்களையும் தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்ட தனியார் கட்டுமான நிறுவனங்கள் உதவி கேட்டுள்ளன.
இதற்கு கைமாறாக பல்வேறு மக்கள் பிரதிநிதிகள், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு லஞ்சமாக மொத்தம் 50 கோடியே 86,125 ரூபாய் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 2015-2017 காலகட்டத்தில் அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு இந்த லஞ்ச பணம் கைமாறியுள்ளது. இந்நிலையில், இந்தலஞ்ச விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
நீதிமன்றம் உத்தரவு: இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு தமிழக காவல் துறையின் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, தமிழக லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஜிபி அபய்குமார் சிங் தலைமையிலான போலீஸார் விசாரணையில் இறங்கினர்.
ஏற்கெனவே வருமான வரி துறையிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், பலருக்கும் ரூ.50 கோடி லஞ்ச பணம்கைமாறியதற்கான முகாந்திரம் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, இதுகுறித்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
வழக்கு பதிவு: இதன் தொடர்ச்சியாக, புகாருக்கு உள்ளான கட்டுமான நிறுவனங்களான லேண்ட்மார்க் ஹவுஸிங் புராஜெக்ட்ஸ் நிறுவன மேலாண்மை இயக்குநர் உதயகுமார், கேஎல்பி புராஜெக்ட்ஸ் நிறுவன இயக்குநர்கள் சுனில்கெத்பாலியா, மனீஷ் பார்மர் உள்ளிட்டோர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் சென்னை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் கடந்த ஜனவரி 31-ம் தேதி வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சிஎம்டிஏ அனுமதி பெறவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் எம்.பி., எம்எல்ஏ, கவுன்சிலர், தாசில்தார், விஏஓஎன யார் யாருக்கு எவ்வளவு லஞ்சம் தரப்பட்டது என்றபட்டியல், முதல் தகவல்அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. இந்த விவரங்களை சம்பந்தப்பட்ட தனியார் கட்டுமான நிறுவனத்தினர் அளித்ததாக கூறப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக, பின்னி மில் பகுதியில் கட்டுமான பணிகளை மேற்கொண்ட 2 கட்டுமான நிறுவனங்களுடன் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புபிரிவு போலீஸார் நேற்றுதீவிர சோதனை மேற்கொண்டனர்.
தியாகராய நகர் உள்பட சென்னையில் 5 இடங்களில் இந்த சோதனை நடந்தது. இதில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT