Published : 01 Feb 2024 05:05 PM
Last Updated : 01 Feb 2024 05:05 PM
புதுடெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட் ஏமாற்றமளிப்பதாகவும், இதில் செயல்கள் குறைவாகவும், லட்சியங்கள் மிகப் பெரிதாகவும் உள்ளது எனவும் காங்கிரஸ் எம்.பி சசி தரூர் விமர்சித்துள்ளார்.
இடைக்கால பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், "இடைக்கால பட்ஜெட்டில் பதிவு செய்யப்பட்ட மிகக் குறுகிய உரைகளில் இதுவும் ஒன்று. பட்ஜெட் உரையில் பெரிதாக எதுவும் இல்லை. வழக்கம் போல் வார்த்தை ஜாலங்கள் மிகுந்து காணப்பட்டன. செயல்பாடுகளில் மிகக் குறைவான உறுதிப்பாடே இருந்தது. அந்நிய முதலீடுகள் கணிசமான அளவு குறைந்துவிட்டது என்பதை ஒப்புக்கொள்ளாமல் அது குறித்து நிதியமைச்சர் பேசி உள்ளார். நம்புகிறோம், எதிர்பார்க்கிறோம் போன்ற தெளிவற்ற மொழியில் அவர் பலவற்றை பேசி இருக்கிறார்.
புள்ளிவிவரங்கள் என்று வரும்போது மிகச் சில புள்ளிவிவரங்களையே அவர் கொடுத்திருக்கிறார். பொருளாதாரத்தின் குறிப்பிட்ட சில பிரச்சினைகளுக்குத் தீர்வு காண போதிய தெளிவோ, விருப்பமோ இல்லாமல் முற்றிலும் பொதுமையில் பேசப்படும் வகையில் நிதி அமைச்சரின் உரை இருந்தது. இது மிகவும் ஏமாற்றமளிப்பதாக உள்ளது" என தெரிவித்துள்ளார்.
இடைக்கால பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம், "இந்த இடைக்கால பட்ஜெட்டை பொறுத்தவரை, நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டு புதிய அரசு அமையும் வரை இந்திய அரசு தனது வழக்கமான பணிகளை மேற்கொள்ள தேவையான நிதியை வைத்திருப்பதை உறுதி செய்வதற்கான வெறும் நிர்வாக நடவடிக்கை. தங்களைத் தாங்களே புகழ்ந்து கொள்வது, பாராட்டிக்கொள்வது என்பதைத் தவிர இதில் வேறு எதுவும் இல்லை" என குறிப்பிட்டுள்ளார்.
பட்ஜெட் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, "வேலையற்றோருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் பட்ஜெட்டா. இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மக்களைக் கவர்வதற்காகவே தவிர இதில் வேறொன்றும் இல்லை" என்று கூறியுள்ளார்.
"நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரை, தேர்தல் உரையைப் போன்று இருந்தது. நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய குடியரசுத் தலைவரின் பேச்சும் அப்படித்தான் இருந்தது" என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.
திமுக எம்பி திருச்சி சிவா பேசும்போது, "இந்த பட்ஜெட்டில் சுவாரஸ்யமாக எதுவும் இல்லை. நாட்டின் எதிர்காலத்திற்காக சிறிய அளவில்கூட வாக்குறுதிகள் அளிக்கப்படவில்லை. அவர்களைப் பொறுத்தவரை, முழு பட்ஜெட்டுக்காக காத்திருக்கிறார்கள். ஆனால், முழு பட்ஜெட்டை நாங்கள் தாக்கல் செய்வோம். இண்டியா கூட்டணி வெற்றி பெற்று, மிகச் சிறந்த பட்ஜெட்டை நாங்கள் வழங்குவோம். சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் நாட்டுக்கு மிக முக்கியமானவை. ஆனால், இந்த பட்ஜெட்டில் அதற்கு என்ன முக்கியத்துவம் இருந்தது? இதேபோல், பொதுத் துறை நிறுவனங்களுக்கான நிதியும் குறைக்கப்பட்டுள்ளது" என விமர்சித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT