Published : 01 Feb 2024 10:25 AM
Last Updated : 01 Feb 2024 10:25 AM
கொல்கத்தா: வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு ஒரு தொகுதியை கூட ஒதுக்க முடியாது என மேற்கு வங்க மாநில முதல்வரும், திரணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் கூட்டணிக்காக திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைமையை சமாதானப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்ட அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது:
மேற்கு வங்க மாநில சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு எம்எல்ஏ கூட இல்லை. இருப்பினும், நான் அவர்களுக்கு மால்டாவின் இரு தொகுதிகளையும் ஒதுக்க முன்வந்தேன். ஆனால், அவர்கள் இன்னும் அதிகமாக விரும்பினர். அதனால், காங்கிரஸுக்கு ஒரு சீட்டை கூட ஒதுக்க கூடாது என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். மார்க்சிஸ்ட் மற்றும் அவர்களை ஆதரிப்பவர்களை ஒருபோதும் நான் மன்னிக்க மாட்டேன். ஏனென்றால் அவர்கள் உண்மையில் பாஜகவை ஆதாரிக்கிறார்கள். இதனை கடந்த பஞ்சாயத்து தேர்தலில் நான் பார்த்துள்ளேன்.
மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள் மக்களுக்கு இழைத்த கொடுமைகளை ஒருபோதும் மறக்க இயலாது. மன்னிக்கவும் முடியாது. மேற்கு வங்க மாநிலத்தில் பாஜகவை அரசியல் ரீதியாக எதிர்த்து போராடும் தைரியம் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே உள்ளது.
மேற்கு வங்கத்தில் ராகுல் காந்தி வாகனம் மீது கல் எறியப்பட்டதாக காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சொன்ன குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது. அதில் உண்மையில்லை. இதனை காங்கிரஸ் கட்சியே மறுத்துள்ளது. ராகுல் கார் விபத்தில் சிக்கிய தால்தான் கண்ணாடி உடைந்ததாக அக்கட்சி ஒப்புக் கொண்டுள்ளது. இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் சில நாட்களுக்கு முன்னர்தான் இண்டியா கூட்டணியிலிருந்து விலகி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார்.
இந்த நிலையில், மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தாவும் காங்கிரஸுக்கு ஒரு சீட் கூட ஒதுக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது இண்டியா கூட்டணிக்கு பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT