Published : 18 Feb 2018 12:34 PM
Last Updated : 18 Feb 2018 12:34 PM
மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி. பள்ளியின் கழிப்பறை அசுத்தமாக இருப்பதைப் பார்த்து எந்தவிதமான கருவிகளும் இன்றி அதை வெறும் கைகளால் சுத்தம் செய்தார்.
இந்த காட்சி டுவிட்டர், சமூக வலைதளங்களில் வைரலாகி, அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
மத்தியப் பிரதேச மாநிலம், ரேவா மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி. ஜனார்த்தன் மிஸ்ரா. மாநில பாஜகவில் மிகவும் எளிமையானவர், மக்களிடம் சகஜமாக பழக்ககூடியவர் என்று அந்த மாவட்ட மக்களால் பாரட்டப்படக்கூடியவர்.
பிரதமர் மோடியின் ஸ்வச் பாரத் இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்டு, மக்களிடமும், பள்ளி மாணவர்களிடமும் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஜனார்த்தன் மிஸ்ரா ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், ரேவா மாவட்டம், கஜுவா கிராமத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்துக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க நேற்று ஜனார்த்தன் மிஸ்ரா சென்று இருந்தார். அப்போது, அங்கிருந்த கழிப்பறையின் சுத்தம் குறித்து ஆய்வு செய்ய எம்.பி. மிஸ்ரா விரும்பினார். அங்கே சென்று பார்த்தவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
கழிப்பறை முழுவதும் மண், குப்பைகள் நிறைந்து அசுத்தமடைந்து இருந்தது. இதைப் பார்த்த எம்.பி ஜனார்த்தன் மிஸ்ரா, பள்ளி நிர்வாகத்தை சுத்தம் செய்ய பணிக்காமல், தானே கழிப்பறையை சுத்தம் செய்ய தொடங்கினார். இதைப்பார்த்த மற்ற அதிகாரிகள் வேண்டாம் எனக் கூறியும் அவர் மறுத்துவிட்டார்.
கழிப்பறையை கைஉறைகள் இன்றி, தன்னுடைய வெறும் கைகளால் சுத்தம் செய்தார், கழிப்பறையில் இருந்த மண், கல் உள்ளிட்ட பொருட்களை அள்ளி வெளியை வீசி அதை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தார். இதைப் பார்த்த மற்ற அதிகாரிகளுக்கு அதிர்ச்சியும், அதேசமயம், எம்.பி.மிஸ்ராவின் பணியை பாராட்டினர்.
அதன்பின் மாணவர்களிடம் சென்ற எம்.பி. மிஸ்ரா, கழிப்பிடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும், பள்ளியை குப்பைகள் இன்று பாராமரிக்க வேண்டும் என்று அறிவுரை கூறிச் சென்றார். எம்.பி. மிஸ்ரா கழிப்பிடத்தை சுத்தம் செய்த காட்சி சமூகஊடகங்களில் வைரலாகி வருகிறது.
ஜனார்த்தன் மிஸ்ரா இப்போது மட்டும் மக்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. இதற்கு முன் பள்ளிகளுக்கு சென்று ஸ்வச் பாரத் இயக்கம் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்யும், போது மாணவர்கள் சிலர் குளிக்காமல்,அழுக்கு ஆடைகளுடன் வருவதைப் பார்த்து வேதனை அடைந்துள்ளார். அவர்களுக்கு புதிய ஆடைகள் வாங்க உதவி செய்துள்ளார்.
கடந்த வாரம் ஒரு பள்ளிக்கூடத்துக்கு ஆய்வுக்கு சென்ற எம்.பி. மஸ்ரா, பல மாணவர்கள் பலநாட்களாக குளிக்காமல் அழுக்கடைந்து வந்துள்ளதைப் பார்த்தார்.
உடனடியாக, அந்த மாணவர்களை அழைத்து குளிப்பாட்டி மிஸ்ரா கவனத்தை ஈர்த்தார். மேலும், பள்ளிக்கு வரும் போது குளித்து சுத்தமாக வர வேண்டும் என்றும் மாணவர்களுக்கு மிஸ்ரா வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன் ராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் காளிச்சரண் ஜெய்பூர் நகரில் ஒரு சுவற்றின் மீது சிறுநீர் கழித்து அசுத்தம் செய்தது சமூக ஊடகங்களில் வைரலானதும் குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT