Published : 01 Feb 2024 07:30 AM
Last Updated : 01 Feb 2024 07:30 AM

1955 வரை ஆங்கிலத்தில் மட்டுமே அச்சிடப்பட்ட பட்ஜெட்: பல சுவாரஸ்ய வரலாறு

புதுடெல்லி: புதிய நாடாளுமன்றத்தில் இந்த ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்கிறார்.

பட்ஜெட் தயாரிப்பு என்பது பல்வேறு துறை சார்ந்த வல்லுநர் மற்றும் அதிகாரிகளின் உழைப்பில் உருவாக்கப்படுவதாகும். நாட்டின் பொருளாதார பாதையை வடிவமைப்பதிலும், அரசின் நலத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதிலும் பட்ஜெட் தாக்கல் ஒரு முக்கியமான நிகழ்வாகும். நாட்டின் சாதாரண குடிமகன் முதல் தொழிலதிபர்கள் வரை பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் திட்டங்கள், சலுகைககள் தாக்கத்தை ஏற்படுத்தும்.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இந்திய பட்ஜெட் பல சுவாரஸ்யமான வரலாறுகளை உள்ளடக்கியது. அதுகுறித்து பார்க்கலாம்.

  1. 1947 நவம்பர் 26-ல் இந்தியாவுக்கான முதல் பட்ஜெட்டை அப்போதைய நிதியமைச்சர் ஆர்.கே. சண்முகம் செட்டி தாக்கல் செய்தார்.
  2. 1955 வரை மத்திய பட்ஜெட் ஆங்கிலத்தில் மட்டுமே அச்சிடப்பட்டு வந்தது.
  3. 1955-56 பட்ஜெட் தாக்கலின் போது ஆங்கிலம் மற்றும் இந்தியில் அச்சிடும் நடை முறையை அப்போதைய நிதியமைச்சர் சி.டி.தேஷ்முக் தொடங்கி வைத்தார். சிறந்த பொருளாதார நிபுணரான தேஷ்முக் ஐந்தாண்டு திட்டங்களை உருவாக்குவதிலும், தொழில் வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான கட்டமைப்பை வகுத்ததிலும், ரிசர்வ் வங்கியை நிறுவியதிலும் முக்கியப் பங்காற்றியவர்.
  4. அதிக முறை பட்ஜெட்டை தாக்கல் செய்த பெருமை மொரார்ஜி தேசாயை சாரும். இந்தியாவில் இதுவரை எந்த நிதியமைச்சரும் செய்யாத அளவுக்கு 10 பட்ஜெட்டுகளை அவர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
  5. ரயில்வே பட்ஜெட்: இந்தியாவில் 2016-ம் ஆண்டு வரை மத்திய பட்ஜெட்டுக்கு சில நாட்களுக்கு முன்பாக தனியாக ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யும் நடைமுறை இருந்தது. அதன்பின்னர் மத்திய பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட் ஒன்றாக இணைக்கப்பட்டது.
  6. பொதுவாக பட்ஜெட் மாலை 5 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டு வந்தது. இந்த நடைமுறையை அப்போதைய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா காலை 11 மணிக்கு மாற்றியமைத்தார்.
  7. 1973-74-ல் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது நிதியமைச்சராக பெறுப்பு வகித்த யஷ்வந்த் ராவ் பி.சவான் தாக்கல் செய்த பட்ஜெட் கருப்பு பட்ஜெட் என்று அழைக்கப்பட்டது. ஏனெனில் நிதிப்பற்றாக்குறை ரூ.550 கோடியாக இருந்தே அதற்கு காரணம்.
  8. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021 பிப்ரவரி 1-ல் முதல் காகிதமில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதற்கு பதிலாக அவர் டேப்லெட்டை பயன்படுத்தினார்.
  9. இந்திய வரலாற்றில் மிக நீண்ட பட்ஜெட் உரையை (2 மணி நேரம் 42 நிமிடங்கள்) 2020-ல் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாசித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x