Published : 01 Feb 2024 07:13 AM
Last Updated : 01 Feb 2024 07:13 AM
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் போக்குவரத்து போலீஸார் அகற்றிய தள்ளுவண்டி கடைகளை மீண்டும் அதே இடத்தில் நடத்த தெலங்கானா முதல்வர் அனுமதி வழங்கியுள்ளார்.
ஹைதராபாத்தின் துர்கம் செருவு பகுதியில் ஐ.டி. நிறுவனங்கள் அதிகம் உள்ளன. எனவே இப்பகுதியில் தள்ளுவண்டி உணவகங்களில் விடிய விடிய வியாபாரம் நடைபெற்று வருகிறது. இந்த இடத்தில் 'குமாரி ஆன்ட்டி' என்பவரின் கடை மிகவும் பிரப லம். இவர் மிக குறைந்த விலைக்கு சைவம் மற்றும் அசைவ உணவு வகைகளை சுவையாக வழங்குவ தால் இதனை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கினர்.
இதனால் பிரபலம் ஆன குமாரியின் தள்ளுவண்டி கடைக்கு அதிக வாடிக்கையாளர்கள் வருவது வழக்கம். இவரை பார்த்து மேலும் பலர் அந்த இடத்தில் தள்ளுவண்டி கடைகளை வைத்தனர். இதனால் அப்பகுதியில் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து, போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இந்நிலையில் இங்குள்ள தள்ளுவண்டி கடைகள் அனைத்தையும் போக்குவரத்து போலீஸார் நேற்று முன்தினம் அகற்றினர்.
இதனால் குமாரி ஆன்ட்டி உள்ளிட்ட கடைக்காரர்கள் தங்களுக்கு வேறு வாழ்வாதாரம் இல்லை என கண்ணீர் சிந்தினர். இதுவும் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. குமாரிக்கு ஆதரவு பெருகியது.
இந்நிலையில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, தள்ளுவண்டி கடைக்காரர்களின் உடைமைகளை உடனடியாக திரும்ப ஒப்படைக்கவும். அவர்கள் அதே இடத்தில் மீண்டும் கடைகள் நடத்த அனுமதி அளிக்கவும் போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதுபற்றி சமூக வலைதளத்தில் பதிவிட்ட ரேவந்த் ரெட்டி தனது ஆட்சியில் அடித்தட்டு மக்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்று கூறியுள்ளார். முதல்வரின் உடனடி நடவடிக்கைக்கு சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT