Published : 01 Feb 2024 05:18 AM
Last Updated : 01 Feb 2024 05:18 AM

25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்பு: நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பெருமிதம்

புதுடெல்லி: அரசு நிர்வாகத்தின் சமூக, பொருளாதார கொள்கைகளால் கடந்த 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் சுமார் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர். தற்போது உலகின் மொத்த நிகழ்நேர டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் 46 சதவீதம் இந்தியாவில் நடைபெறுகிறது என்று நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பெருமிதத்துடன் தெரிவித்தார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இது 2024-ம் ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். அவர் பேசியதாவது: புதிய நாடாளுமன்றத்தில் இது எனது முதல் உரையாகும். அமிர்த காலத்தின் தொடக்கத்தில் இந்த புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் கொள்கைகள் தொடர்பான ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெறும் என்று நம்புகிறேன்.

‘வறுமையை ஒழிப்போம்’ என்ற முழக்கத்தை குழந்தை பருவம் முதல் இந்தியா கேட்கிறது. எனினும், பெரிய அளவில் வறுமை ஒழிக்கப்படுவதை தற்போதுதான் நம் வாழ்வில் முதல்முறையாக காண்கிறோம். கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர். அரசு நிர்வாகத்தின் சமூக, பொருளாதார கொள்கைகளுக்கு இது ஒரு சான்று.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது, பல நூற்றாண்டுகளின் கனவாக இருந்தது, அது இப்போது நிறைவேறியுள்ளது. நாட்டில் பாதுகாப்பு தளவாட உற்பத்தி ரூ.1 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. ‘இந்தியாவில் தயாரிப்போம்’, ‘தற்சார்பு இந்தியா’ ஆகிய திட்டங்கள் இந்தியாவின் பலமாக மாறியுள்ளன.

பெரிய பொருளாதாரம்: இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது. அதன் வளர்ச்சி விகிதம் தொடர்ந்து இரண்டு காலாண்டுகளில் 7.5 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது.

மிகப்பெரிய கடல் பாலமான ‘அடல் சேது’ திறக்கப்பட்டுள்ளது. அதிவேக மெட்ரோ ரயில் சேவையான ‘நமோ பாரத்’ ரயில் சேவை மற்றும் குறைந்த கட்டண ‘அமிர்த பாரத்’ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய விமான ஒப்பந்தத்தில் இந்தியாவின் விமான நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது.

தற்போது உலகின் மொத்த நிகழ்நேர டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் 46 சதவீதம் இந்தியாவில் நடைபெறுகிறது. கடந்த மாதம் யுபிஐ மூலம் 1,200 கோடி பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. இதன் மூலம் சாதனை அளவாக ரூ.18 லட்சம் கோடிக்கு பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது.

கட்டுக்குள் பணவீக்கம்: இரு பெரிய போர்கள், கரோனா வைரஸ் பரவல் போன்ற உலகளாவிய நெருக்கடிகள் இருந்தபோதிலும், நாட்டில் பண வீக்கத்தை அரசு கட்டுக்குள் வைத்திருந்தது, சாதாரண இந்தியனின் சுமை அதிகரிக்க அனுமதிக்கவில்லை. வலிமையான வங்கி அமைப்பை நாம் நாடு பெற்றுள்ளது.

தீவிரவாதமோ, எல்லை ஆக்கிரமிப்பு முயற்சியோ, எதுவாக இருந்தாலும் இந்திய படைகள் அதற்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றன. ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பான சூழல் நிலவுகிறது. வடகிழக்கில் பிரிவினைவாத சம்பவங்கள் பெரிதும் குறைந்துள்ளன. இவ்வாறு முர்மு பேசினார்.

முன்னதாக, குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் குடியரசுத் தலைவர் முர்மு, நாடாளு மன்றத்துக்கு வந்தார். செங்கோல் ஏந்திய ஒருவர் முன்னே செல்ல, பின்னே கம்பீரமாக அவர் அவைக்குள் வந்தார்.

தொடர்ந்து, சபாநாயகர் ஓம் பிர்லா, மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வந்தனர். காலை 11 மணிக்கு தொடங்கிய குடியரசுத் தலைவரின் உரை 1 மணி நேரம் 15 நிமிடங்களுக்கு பிறகு பகல் 12.15 மணி அளவில் நிறைவடைந்தது.

இடைக்கால பட்ஜெட்- நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல்: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2024-25 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இது அவர் தொடர்ச்சியாக தாக்கல் செய்யும் 6-வது பட்ஜெட் ஆகும். இந்திய நிதி அமைச்சர்களில் மிக அதிக எண்ணிக்கையில் பட்ஜெட் தாக்கல் செய்தவர் முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய்.

அவர் நிதி அமைச்சராக பதவி வகித்தபோது, மொத்தமாக 10 பட்ஜெட்கள் தாக்கல் செய்துள்ளார். இவற்றில் 1959–1964 வரை 5 முழு நிதி ஆண்டுக்கான பட்ஜெட், ஒரு இடைக்கால பட்ஜெட் என 6 பட்ஜெட்களை தொடர்ச்சியாக அவர் தாக்கல் செய்தார். இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வதன் மூலம் மொரார்ஜி தேசாயின் சாதனையை எட்டுகிறார் நிர்மலா சீதாராமன்.

ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. விரைவில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால், 2024-25 நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட், புதிய அரசு அமைந்த பிறகே அறிவிக்கப்படும். எனவே, இன்று தாக்கல் செய்யப்படுவது 2024-25 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் ஆகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x