Published : 31 Jan 2024 04:20 PM
Last Updated : 31 Jan 2024 04:20 PM
புதுடெல்லி: இண்டியா கூட்டணியிலிருந்து வெளியேறிய பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் மீண்டும் என்டிஏவில் இணைந்துள்ளார். இவரது வரவால் பிஹாரில் இருவருக்குமே லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், பிஹாரில் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) மீண்டும் தன்னுடன் இணைந்தமையால் பாஜக பலன் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய ஜனநாயக முன்னணிக்கு (என்டிஏ) பாஜகவே தலைமை ஏற்று, அக்கட்சியின் கைகள் ஓங்கும் சூழல் நிலவுகிறது.
பிஹார் தேர்தல் கணக்குகள்: கடந்த 2014 மக்களவை தேர்தலில் பாஜக, ஜேடியு மற்றும் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம்(ஆர்ஜேடி) தனித்தனியாகப் போட்டியிட்டன. இதில், ஜேடியுவுக்கு 16.04 சதவிகித வாக்குகளுடன் வெறும் 2 தொகுதிகள் கிடைத்தன. பிறகு 2019 மக்களவை தேர்தலில் மீண்டும் என்டிஏவுடன் இணைந்தார் முதல்வர் நிதிஷ்குமார். இதனால், 2019 மக்களவை தேர்தலில் ஜேடியுவுக்கு 16, பாஜகவுக்கு 17 மற்றும் ராம்விலாஸ் பாஸ்வானின் லோக்ஜன சக்திக்கு 6 தொகுதிகள் கிடைத்தன.இக்கூட்டணியின் மொத்த சதவிகித வாக்குகள் 54.40 சதவிகிதத்தில் ஜேடியுவின் பங்கு 22.3 சதவிகிதமாக இருந்தது. எனவே, நிதிஷின் மறுவரவால் லாலுவின் மெகா கூட்டணியை விட அதிக தொகுதிகளுடன், என்டிஏ கூட்டணி பலம் பெறும் என எதிர்பாக்கப்படுகிறது.
இதற்குமுன், 2009 மக்களவை தேர்தலிலும் என்டிஏவிலிருந்தபடி பிஹாரில் போட்டியிட்டிருந்தது நிதிஷின் ஜேடியு. அத்தேர்தல் முடிவுகளில் என்டிஏவுக்கு 37.97 சதவிகிதத்துடன் 32 தொகுதிகள் கிடைத்தன. அதில், 25 தொகுதிகளில் போட்டியிட்ட ஜேடியுவுக்கு 20, 15 இல் போட்டியிட்ட பாஜகவுக்கு 12 இடங்கள் கிடைத்தன. இதுவரையிலும் ஓங்கியிருந்த ஜேடியுவின் கை இனி ஓயும் எனக் கருதப்படுகிறது. 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவின் கைகள் ஓங்கி அக்கட்சியின் முடிவுகளின்படியே தொகுதிப் பங்கீடு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து 'இந்து தமிழ் திசை'யிடம் பிஹாரின் பாஜக மாநில நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, “அடிக்கடி அணி மாறியதால் நிதிஷின் புகழ், பிஹாரில் குறைந்து விட்டது. அதேசமயம், மாநிலத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சியாகவும், மத்தியில் தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியாலும் பாஜகவின் செல்வாக்கு பிஹாரில் கூடி விட்டது. எனவே, 2024 மக்களவையில் ஜேடியுவை விட பாஜக அதிக தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளது. இதை ஏற்பதை தவிர நிதிஷுக்கு வேறு வழியில்லை” எனத் தெரிவித்தனர்.
அகிலேஷ் மகிழ்ச்சி: இதனிடையே, ஜேடியுவின் தலைவர் நிதிஷ் மீண்டும் பாஜகவுடன் இணைந்ததால் உபியில் சமாஜ்வாதி தலைவர் மகிழ்ந்துள்ளார். ஏனெனில், உபியின் பூல்பூர் மக்களவை தொகுதியில் நிதிஷ் போட்டியிடத் திட்டமிட்டிருந்தார். ஏனெனில், பிஹாரின் எல்லையிலுள்ள பூல்பூரில் நிதிஷின் சமுகமான குர்மிகள் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இவரது போட்டியின் தாக்கம், பூல்பூரைச் சுற்றியுள்ள இதர சில தொகுதிகளிலும் இருக்கும் எனக் கருதப்பட்டது. இதன் காரணமாக இண்டியாவில் இருந்த நிதிஷ் தனக்கு உ.பி.,யில் ஓரிரு தொகுதிகள் ஒதுக்கும்படி சமாஜ்வாதியை வலியுறுத்தி வந்தார். இனி அந்த பிரச்சினை இல்லாதமையால் சமாஜ்வாதி பெருமூச்சு விடத் தொடங்கி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT