Published : 31 Jan 2024 03:24 PM
Last Updated : 31 Jan 2024 03:24 PM

தெலங்கானாவில் சாலையோரக் கடையை மூடச் சொன்ன போலீஸார்; திறக்க உதவிய முதல்வர் ரேவந்த் ரெட்டி

ஹைதராபாத்: சமூகவலைதளம் மூலம் புகழடைந்த ‘குமாரி ஆண்டி’யின் சாலையோரக் கடையை மூடி வேறு இடத்துக்கு மாற்ற சொல்லிய போக்குவரத்து போலீஸாரின் உத்தரவைத் திரும்பப் பெறும்படி டிஜிபி, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகத்துக்கு தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த இரண்டு மாதங்களாக சமூக வலைதளம் மூலம் மிகவும் பிரபலமானது குமாரி ஆண்டியின் சாலையோர உணவுக்கடை. ஹைதராபாத்திலுள்ள மாதாப்பூரின் ஐடிசி கோஹினூர் தெருவில் உள்ள குமாரி ஆண்டியின் கடைக்கு ஐடி ஊழியர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் வாடிக்கையாளர்கள். கடையின் உரிமையாளர் சாய் குமாரி சாதத்துடன் சுவைமிகு கோழிக்கறி, ஆட்டிறைச்சி என அசைவ உணவு வகைகளை வழங்குவதாக பலரும் அவரைப் பாராட்டினர். இதன் மூலமாக அவர் மிகவும் பிரபலமானார்.

இந்தநிலையில் போக்குவரத்து நெரிசலைக் காரணம் காட்டி, மாதாபூரின் ராய்துராம் போக்குவரத்து போலீஸார் நேற்று (செவ்வாய்க்கிழமை) குமாரி ஆண்டியின் கடையை மூடி வேறு இடத்துக்கு மாற்றுமாறு உத்தரவிட்டனர். போக்குவரத்து நெரிசல் குறித்து பயணிகளிடமிருந்து புகார் வந்ததால் போலீஸார் கடையை மூட உத்தரவிட்டதாக போலீஸார் தெரிவித்தனர். ஆனால் அந்தப் பகுதியில் உள்ள மற்ற கடைகளை மூடச் சொல்லவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்தநிலையில் போலீஸாரின் உத்தரவைத் திரும்பப் பெறும்படி மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி டிஜிபி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகத்துக்கும் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

சாய் குமாரியின் சாலையோர உணவுக் கடையை மூடியதில் சந்திரபாபு நாயுடு மற்றும் ஜன சேனா கட்சி தலைவர் பவன் கல்யாண்-னின் பங்கு இருப்பதாக ஆந்திரப் பிரதேசத்தில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசு குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து இந்தக் கடை மூடல் விஷயம் அரசியல் விவகாரமாக மாறியது.

முன்னதாக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அதன் எக்ஸ் பக்கத்தில், “குமாரி ஆண்டி கடை முதலாளியான சாய் குமாரி, ஜெகன் ரெட்டி அரசால் வீடு கிடைத்தது என்று கூறியதைத் தொடர்ந்து அவரது கடையை மூடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று குற்றம்சாட்டியிருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x