Published : 31 Jan 2024 02:52 PM
Last Updated : 31 Jan 2024 02:52 PM
‘இண்டியா’ கூட்டணியிலிருந்து மம்தா பானர்ஜி, அரவிந்த் கேஜ்ரிவால், நிதிஷ் குமார் என, அடுத்தடுத்து தலைவர்கள் வெளியேறி வருகின்றனர். இந்தக் கூட்டணி முறிவுக்கு, காங்கிரஸ் தான் காரணம் என, மூவரும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். உண்மையில் இந்தக் கூட்டணி முறிவுக்கு காங்கிரஸ்தான் காரணமா? என்பதைப் பற்றி ஒரு விரிவான அலசல்.
கடந்த வாரம், ‘இண்டியா’ கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார் மம்தா பானர்ஜி. அதுகுறித்து அவர், ‘‘நாட்டில் என்ன நடக்கும் என்பது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. நாங்கள் மதச்சார்பற்ற கட்சி. மேற்கு வங்கத்தில் பாஜகவை நாங்கள் தோற்கடிப்போம். நாங்கள் கொடுத்த அனைத்து முன்மொழிவுகளையும் காங்கிரஸ் நிராகரித்தது. அதனைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் தனித்துப் போட்டியிடும் முடிவை எடுத்துள்ளோம். நாங்கள் ‘இண்டியா’ கூட்டணியில் இருக்கும் நிலையிலும், ராகுல் காந்தியின் யாத்திரை மேற்கு வங்கம் வழியாக சென்றது. அதுகுறித்து மரியாதைக்காகக் கூட எங்களுக்குத் தெரிவிக்கவில்லை. அவர்களுக்கு எங்களுடன் எந்த உறவும் இல்லை” என்றார்.
மம்தாவைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியும் பஞ்சாபில் தனித்துப் போட்டியிட இருப்பதாக அறிவித்தது. ஆம் ஆத்மி கூட்டணியை ஏற்கும் மனநிலையில் காங்கிரஸ் இல்லை. தொகுதிப் பங்கீட்டிலும் காங்கிரஸ் முட்டுக்கட்டைப் போட்டதால் இந்த முறிவை அறிவிப்பதாக ஆம் ஆத்மியினர் கூறினர். தற்போது நிதிஷ்குமாரும் இண்டியா கூட்டணியிலிருந்து விலகிச் சென்றுள்ளார். கூட்டணிக் கட்சிகளின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யாதது. பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கேவை முன்னிறுத்த திட்டமிட்டது. தொகுதிப் பங்கீட்டில் காங்கிரஸ் மீதான அதிருப்தி ஆகிய காரணங்களால் கூட்டணியிலிருந்து வெளியேறியதாக நிதிஷ்குமார் தரப்பில் சொல்லப்பட்டது.
இப்படியாக, கூட்டணி முறிவுக்குப் பிரதான காரணமாக காங்கிரஸ் கட்சியும் அதன் தொகுதிப் பங்கீடுகளும்தான் என்ற குற்றச்சாட்டை இதுவரை விலகிய மூன்று கட்சியினரும் சொல்லியுள்ளனர்.
ஏன் இந்த முரண்பாடுகள்? - மேல்மட்ட அளவில் காங்கிரஸ் தலைவர்கள் ஒற்றுமையாக இருப்பதை உறுதிப்படுத்தினாலும், மாநில அளவில் கட்சிகளிடையே ஒற்றுமையை வலுப்படுத்த முடியவில்லை. குறிப்பாக, மாநிலத்தில் அதிகாரத்தில் உள்ள பிராந்தியக் கட்சிகளுடன் காங்கிரஸ் அணுசரித்து செல்ல வேண்டிய சூழல் உருவாகி இருக்கிறது. ஆனால், காலம் காலமாக பிராந்தியக் கட்சிகளுக்கு எதிராகக் களமாடிய, மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு, அந்தக் கட்சிகளுடன் இணக்கம் காட்டுவது இயலாததாகவுள்ளது. இதே மனநிலையில்தான் பிராந்தியக் கட்சிகளும் உள்ளன.
இந்நிலையில், பல மாநிலங்களில் மூன்றாம் நான்காம் இடத்தில் உள்ள காங்கிரஸ், அதிகப்படியான இடங்களில் போட்டியிட ஆர்வம் காட்டுகிறது. ஆனால், மாநிலத்தில் மிகக்குறைந்த வெற்றியைப் பதிவு செய்திருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு, அதிக ‘சீட்’ கொடுத்தால், தங்களுக்கான வெற்றி வாய்ப்பு குறைந்து விடுமோ? என்ற மனநிலையில் பிராந்தியக் கட்சிகள் இருப்பதால், தொகுதிப் பங்கீடு சிக்கலாகியுள்ளது. குறிப்பாக, மேற்கு வங்கத்தில் 42 மக்களைவைத் தொகுதிகள் உள்ளன. இதில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், 22 இடங்களில் திரிணாமூல் காங்கிரஸும், 18 இடங்களில் பாஜகவும், இரண்டே இடங்களில் காங்கிரஸும் வெற்றி பெற்றன. ஆனால் இம்முறை காங்கிரஸ் 10 - 12 இடங்கள் ஒதுக்கக் கோரியுள்ளது. ஆனால், ‘கடந்த தேர்தலைப் போல் 2 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் போட்டியிட வேண்டும்’ என திரிணாமூல் கட்சி கூறியுள்ளது. இதனால், காங்கிரஸ் மாநிலத் தலைவர்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது.
இதனால் மம்தாவை நேரடியாக விமர்சிக்கவும் செய்தனர் . குறிப்பாக, காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, “மம்தா பானர்ஜியின் தயவில் இந்த முறை தேர்தல் நடக்காது. மம்தா பானர்ஜி கொடுத்த இரண்டு இடங்களில் காங்கிரஸ் கட்சி பாஜகவையும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியையும் தோற்கடித்துள்ளது. மம்தா பானர்ஜி ஒரு சந்தர்ப்பவாதி. கடந்த 2011-ம் ஆண்டு காங்கிரஸின் கருணையால் அவர் ஆட்சிக்கு வந்தார்,’’ எனக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.
அப்போதே, நிதிஷ்குமார், “காங்கிரஸ் பழமையான கட்சி, அதனால் பெரிய மனதுடன் நடக்க வேண்டும்’” என அறிவுரை வழங்கினார். மேலும், காங்கிரஸ் கட்சி கூட்டணிப் பேச்சுவார்த்தையில் சுணக்கம் காட்டுவதையும் குற்றச்சாட்டாக வைத்து, ‘இண்டியா’ கூட்டணியிலிருந்து அவர் வெளியேறியதும் கவனிக்கத்தக்கது. மேலும், ‘கூட்டணிப் பேச்சுவார்த்தையைப் புறம் தள்ளிவிட்டு, யாத்திரையை நடத்தி தன்னைப் பலப்படுத்திக் கொள்ள காங்கிரஸ் எண்ணுவதாகவும் பிற கட்சிகளால் குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது.
உண்மையில் கட்சி முறிவுக்கு யார் காரணம்? இது குறித்து பத்திரிகையாளர்கள் ப்ரியன் பேசுகையில், “தொகுதிப் பங்கீட்டில் காங்கிரஸ் கட்சியை மட்டும் குறை சொல்வதை ஏற்க முடியாது. கடந்த மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் இரண்டு இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால், பாஜக வென்ற 18 இடங்களில், 4 இடங்களுக்கு மேலான தொகுதிகளில் காங்கிரஸ் - பாஜக இடையேயான வாக்கு வித்தியாசம் மிகவும் குறைவு. எனவே, காங்கிரஸுடன் திரிணாமூல் கூட்டணி அமைத்தால், அந்தத் தொகுதிகளிலும் வெற்றி பெறும். ஆனால், தனித்து தேர்தலைச் சந்தித்தால் சறுக்கலைத் தான் இரு கட்சிகளும் சந்திக்கும். இதனால் பாஜகவுக்குத் தான் வெற்றி வாய்ப்புக் கூடும்.
எனவே, இதில் மாநில கட்சிகளும் இணக்கமான போக்கை உறுதி செய்ய வேண்டும். இந்த முறிவுகள் பின்னடைவாகப் பார்க்கப்பட்டாலும், இதுவே முடிவல்ல. பேச்சுவார்த்தைகள் வாயிலாக விரைந்து சரிசெய்ய வேண்டும். மேலும், பாஜகவுக்கு மாற்றாக தேசிய அளவில் உள்ள ஒரே கட்சி காங்கிரஸ்தான். எனவே, இந்திய அளவில் கவனம் பெற யாத்திரைகளை நடத்துவது மிக முக்கியம். பல ஆண்டுகளாக சுணங்கியுள்ள காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைப்பது வாயிலாக இழந்த தன் மதிப்பை மாநிலத்தில் மீண்டும் பெற்றுவிடுவார்களோ? என, மம்தா போன்ற பெரிய தலைவர்கள் நிச்சயம் நினைப்பார்கள். ஆனால், அந்த எண்ணங்கள் அவர்களது வெற்றி வாயப்பைத் தான் குறைக்கும்.
மேலும், இண்டியா கூட்டணி யார் வெளியேறினாலும் பலமாக இருப்பதாக தலைவர்கள் சொன்னாலும், இந்த முறிவுகள் மக்கள் மத்தியில் இண்டியா கூட்டணியை பலம் இழக்கச் செய்யும்; இதனால், இண்டியாவின் வெற்றிப் வாய்ப்பு குறையும்” என்றார்.
தற்போது, பல மாநிலங்களில் ஆட்சியில் உள்ள பிராந்தியக் கட்சிகள், தங்கள் மாநிலத்தின் தேவை கருதி, காங்கிரஸ் கட்சியை எதிர்த்து உருவானவை தான். அந்த எதிர்ப்பு வலுப்பெற்ற மாநிலங்களில், காங்கிரஸ் முற்றிலுமாக தலைதூக்க முடியாத நிலையே உள்ளது. எனவே, பிராந்தியக் கட்சிகள் காங்கிரஸுடன் இணைந்து தேர்தலைச் சந்தித்தால், காங்கிரஸ் மதிப்பு மாநிலத்தில் உயர வாய்ப்புள்ளது. எதற்காகக் கட்சியைத் தொடங்கினார்களோ, அந்த நோக்கம் சிதையும் நிலை உருவாகும். எனவே, இப்படியான ஒரு வாய்ப்பைக் காங்கிரஸுக்குத் தர எந்தவொரு மாநிலக் கட்சியும் முன்வராது.
அதேபோல், பாஜகவின் சித்தாந்தத்தை அழித்து அவர்களை ஆட்சியிலிருந்து இறக்க வேண்டும் என்னும் கொள்கை அடிப்படையிலான கூட்டணி அமைத்தால் மட்டுமே, பாஜகவின் வெற்றி வாய்ப்பைக் குறைக்க முடியும். ஆனால், அதை அனைத்து மாநில கட்சிகளும் நினைப்பதில்லை. இதனால், மத்தியில் பாஜக வென்றாலும் வீழ்ந்தாலும் கவலையில்லை. மாநிலத்தில் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும் என, ஆம் ஆத்மி, திரிணாமூல் போன்ற கட்சிகள் நினைக்கின்றன. எனவே, காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து பயணிக்க தயக்கம் காட்டுகின்றன என்னும் பார்வையும் முன்வைக்கப்படுகிறது.
அதேபோல், மாநில கட்சிகள் இந்த முறிவைத் தேர்தலுக்குப் பிறகு இண்டியா கூட்டணியுடன் இணைந்து சரி செய்துகொள்ளலாம் என்றும் எண்ணலாம். ஆனால், தேர்தலுக்கு முன்பு இது மக்களிடையே இண்டியா கூட்டணியின் உறுதித் தன்மையைக் கேள்விக்குள்ளாக்கும். இதனால், மக்களுக்கு இண்டியா கூட்டணி மீதான நம்பிக்கை சிதையும். வாக்குகள் சிதறும். அது பாஜகவுக்கான வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
’பாஜகவை அரியணையிலிருந்து இறக்குவோம்’ என்னும் நோக்கத்தில் இணைந்து உருவாக்கப்பட்ட இண்டியா கூட்டணி நாளுக்கு நாள் வலுவிழந்து வருகிறது. இன்னும் மூன்று மாதங்களில் இந்தப் பிரச்சினைகளைக் களைந்து தேர்தலைச் சந்திக்குமா? என்பதைப் பொறுந்திருந்தான் பார்க்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT