Published : 31 Jan 2024 11:04 AM
Last Updated : 31 Jan 2024 11:04 AM
புதுடெல்லி: “2024 மக்களவை தேர்தலுக்கு பின் எனது அரசு முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும். மக்களின் ஆசியுடன் இந்தப் பயணம் தொடரும்.” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் தொடங்குகிறது. பிப்ரவரி 9-ம் தேதி முடிவடைய உள்ள இந்த கூட்டத்தொடரில், பிப்ரவரி 1-ம் தேதி (நாளை) நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
தொடர்ந்து குடியரசுத் தலைவர் உரை, இடைக்கால பட்ஜெட் தாக்கல் மீதான விவாதம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியின் பதிலுடன் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் ஆகியவையே இந்த சுருக்கமான அமர்வின் முக்கிய நிகழ்ச்சியாக அமையும். தற்போதைய அரசின் கடைசி கூட்டத்தொடர் என்பதால் இந்த அமர்வு எதிர்ப்பார்ப்புக்குரியதாக மாறியுள்ளது.
இதனிடையே, கூட்டத்தொடர் தொடங்குவதற்கு டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமர் மோடி, “இந்தப் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் கூடிய முதல் அமர்வில் நாரி சக்தி வந்தான் ஆதினியம் (மகளிர் இடஒதுக்கீடு மசோதா) நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகு, மகளிர் சக்தியின் திறன், வீரம், வலிமை ஆகியவற்றை நாடு எவ்வாறு அனுபவித்தது என்பதை குடியரசு தின விழா அணிவகுப்பில் கண்டோம். குடியரசு தின விழா அணிவகுப்பில் பெண் வலிமை பறைசாற்றப்பட்டுள்ளது.
மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது மகத்தான சாதனை. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழிகாட்டுதலில் இன்று, பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குகிறது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யவிருக்கிறார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியம். எனவே, எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபடுவோரை வரலாறு நினைவில் வைத்திருக்காது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் மனந்திரும்புவதற்கும் நேர்மறையான தடம் பதிப்பதற்கும் ஒரு வாய்ப்பாகும். இந்த வாய்ப்பை தவறவிட வேண்டாம் என்று அனைத்து எம்பிக்களையும் கேட்டுக்கொள்கிறேன். தங்கள் சிறந்ததைச் செய்ய வேண்டும். 2024 மக்களவை தேர்தலுக்கு பின் எனது அரசு முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும்.
ஒவ்வொரு நாளும் நமது நாடு முன்னேற்றத்தின் புதிய உச்சங்களைத் தாண்டி வருகிறது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சி நடைபெறுகிறது. மக்களின் ஆசியுடன் இந்த பயணம் தொடரும்” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT