Published : 31 Jan 2024 10:01 AM
Last Updated : 31 Jan 2024 10:01 AM

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டு தாக்குதல்: சிஆர்பிஎஃப் வீரர்கள் மூவர் பலி; 15 பேர் காயம்

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் பகுதியில் நேற்று மாலை மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மூவர் கொல்லப்பட்டனர். இவர்களில் ஒருவர் கோப்ரா [CoBRA] எனப்படும் சிறப்பு அதிரடிப் படையைச் சேர்ந்தவராவார். மேலும், இந்தத் தாக்குதலில் 15 சிஆர்பிஎஃப் வீரர்கள் காயமடைந்தனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் அண்மையில் பாஜக ஆட்சி அமைந்த பின்னர் நடைபெற்ற முதல் பெரிய தாக்குதல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் சுக்மா - பிஜாபூர் மாவட்ட எல்லையில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. சத்தீஸ்கரில் கடந்த 2021-ல் நடந்த தாக்குதலில் 23 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். நேற்றைய தாக்குதலும் அதே இடத்தில் நடந்துள்ளது கவனிக்கத்தது.

முன்னதாக, கடந்த ஜனவரி 26 ஆம் தேதி சுக்மா - பிஜாபூர் பகுதியில் முதன்முறையாக குடியரசு தின விழாவை ஒட்டி தேசியக் கொடி ஏற்றப்பட்டது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மாவோயிஸ்டு ஆதிக்கம் நிறைந்த அப்பகுதியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று (ஜன.30) ஜோனாகுடா - அலிகுடா பகுதியில் கோப்ரா படையினர், சிஆர்பிஎஃப் சிறப்பு அதிரடிப் படையினர் கூட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அடர்ந்த வனப்பகுதியில் பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். எந்தப் பக்கமிருந்து தாக்குதல் நடக்கிறது என்று சுதாரிப்பதற்குள் மூன்று வீரர்கள் பலியாகினர். நிலைமையை உணர்ந்து பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். ஆனால் அதற்குள் சேதம் அதிகரிக்கத் தொடங்கியது. தாக்குதல் நடத்திய மாவோயிஸ்டுகள் வனத்துக்குள் தப்பிச் சென்றுவிட்டனர். பின்னர், ஏர் ஆம்புலன்ஸ் மூலம் உயிரிழந்த மூன்று பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. அவர்கள் தேவன்.சி, பவன் குமார், லம்ப்தார் சின்ஹா என அடையாளம் காணப்பட்டுள்ளது.

முன்னதாக இம்மாத தொடக்கத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சத்தீஸ்கரில் மாவோயிஸ்டு தாக்குதல் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “அடுத்த மூன்று ஆண்டுகளில் சத்தீஸ்கரில் மாவோயிஸ்டு இடர் களையப்படும்” என்று உறுதியளித்தார். இந்நிலையில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

இருப்பினும், ஜனவரியில் மட்டும் இரண்டு பெண்கள் உள்பட ஐந்து நக்சல்கள் மாநிலத்தில் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவோயிஸ்டு - பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூட்டில் 6 மாத குழந்தை ஒன்று உயிரிழந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x