Last Updated : 31 Jan, 2024 06:33 AM

5  

Published : 31 Jan 2024 06:33 AM
Last Updated : 31 Jan 2024 06:33 AM

‘காசி, மதுரா விவகாரங்களில் தலையிடப் போவதில்லை’ - விஸ்வ இந்து பரிஷத் தேசிய செய்தித் தொடர்பாளர் சரத் சர்மா தகவல்

அயோத்தி: உத்தரபிரதேசத்தின் காசி, மதுரா விவகாரங்களில் இப்போதைக்கு தலையிடப் போவதில்லை என்று விஸ்வ இந்து பரிஷத் (விஎச்பி) தேசிய செய்தித் தொடர்பாளர் சரத் சர்மா கூறியுள்ளார். ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு:

சுமார் 34 வருடங்களாக விஎச்பியில் தொண்டாற்றும் நீங்கள் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவதை எப்படி உணர்கிறீர்கள்? இந்த ராமர் கோயில் ஒரு தேசியக் கோயில். பகவான் ராமர் நம் அனைவரையும் ஒன்று சேர்த்துள்ளார். இதன் காரணமாக, நம் நாடு எல்லா சுகமும் பெற்று பிரகாசமாக ஒளிரும். இந்தக் கோயில் நமது நம்பிக்கையின் கேந்திரம்.ஒரு நீண்ட கால போராட்டம் முடிவுக்கு வந்து, இன்று அதன் நோக்கம் நிறைவேறி உள்ளது.

ராமர் கோயில் பணியை உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்ட அறக்கட்டளை செய்யும்போது, விஎச்பியின் தலையீடு ஏன்? ராமர் கோயிலுக்காக விஎச்பிதான் போராடியது, பொதுமக்கள் இடையே இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தியது. உச்ச நீதிமன்றதீர்ப்பின்படி அமைக்கப்பட்ட அறக்கட்டளையில் விஎச்பி.யின் பங்கு ஒன்றுமில்லை. நேரடியாகத் தலையிடுவதும் கிடையாது. கோயில் பணிக்காக வரும் தொழிலாளர்களுக்கும் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கும் உணவு, உறைவிட உதவி மட்டுமே செய்கிறது.

கோயில் திறப்பு விழாவை வைத்து உங்கள் தோழமை அமைப்பான பாஜக அரசியல் செய்வதாகஎழுந்துள்ள புகார் குறித்து தங்கள் கருத்து என்ன? பாஜக தனது தேர்தல் அறிக்கையில் ராமர் கோயிலை கட்டுவோம் என வாக்குறுதி அளித்து வந்தது. இது நீதிமன்ற தீர்ப்பின் மூலம் நிறைவேறினால் உத்தமம் எனக் கருதியது. அதேசமயம், சட்டத்தை மீறுவோம் என்று பாஜக எங்கும் இதுவரை கூறவில்லை. பாஜக, நமது சமூகத்தின் உணர்வை வெளிப்படுத்தும் வகையில்தான் ராமர் கோயிலுக்காகக் குரல் கொடுத்து வந்தது. அப்போது அதிர்ஷ்டவசமாக நீதிமன்றமே அனுமதி அளித்து விட்டது. இதன் தாக்கம், ராமர் கோயிலுக்கு குரல் கொடுத்த கட்சி பாஜக என்பதால் அதன் மீது விழுவது இயற்கையே. ராமர் கோயிலை வைத்து அரசியல் என்பது பாஜக மீதான தவறானப் புகாரே தவிர வேறொன்றும் இல்லை.

அயோத்தியின் கர்சேவக்புரத்தில் தங்கள் தலைமை அலுவலகம் அமைந்தது முதல் நடைபெற்ற சிற்பக் கல் தூண்கள் கோயிலில் பயன்படுத்தப்படுகிறதா? ராமர் கோயிலை எப்படி கட்ட வேண்டும் என 1989-ல் திட்டமிடப்பட்டது. இதன்படி கோயில் கட்டும் பணிக்காக செப்டம்பர், 1990-ல் கர்சாலா அமைத்து சிற்பச்சுவர்கள், தூண்கள் மற்றும் பீம்களுக்கான பணிகள் தொடங்கின. இதில், 1,75,000 கன அடி சலவைக் கற்கள் வந்திறங்கின. எனினும், தீர்ப்புக்கு பிறகு கோயில் வடிவமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, அதன் அளவு அதிகரிக்கப்பட்டு விட்டது. இதன் காரணமாக, கர்சாலாவில் செதுக்கப்பட்டவை கோயிலின் வேறுசில இடங்களில் பயன்படுத்தப்படுகின்றன. தூண்கள் இரண்டாவது அடுக்கில் பொருத்தப்பட உள்ளன. பல வருடங்களுக்கு முன் செதுக்கப்பட்ட இவற்றில் படிந்த கறைகள் தற்போது பாலீஷ் செய்யப்படுகிறது. இதற்கு முன் சிற்ப வேலைகள் கர்சாலாவில் செய்யப்பட்டன. கோயில் பணி தொடங்கி விட்டதால் ராஜஸ்தானின் பன்சி மலையிலிருந்து சலவைக் கற்கள் சிற்ப வேலைகள் முடித்து நேரடியாகக் கோயிலுக்கு அனுப்பப்படுகின்றன.

ராமர் கோயிலுக்காக விஎச்பியின் மறைந்த பொதுச் செயலாளர் அசோக் சிங்கால் நாடு முழுவதிலும் இருந்து சேகரித்த செங்கற்களின் நிலை என்ன? 1989-ல் இதற்கான கோரிக்கை விடுக்கப்பட்டதில் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் செங்கற்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அப்போது தமிழ்நாடு முதல்வராக இருந்த ஜெயலலிதாவும் கோயில் பணிக்காக தனது சார்பில் செங்கற்களை அனுப்பி வைத்தார். இதுபோல், மொத்தம் 2,75,000 செங்கற்கள் சேர்ந்தன. இவை கோயிலில் பொருத்தமான இடங்களில் பயன்படுத்தப்பட்டு உள்ளன.

ராமர் கோயில் பெயரில் உலகம் முழுவதிலும் விஎச்பி வசூலித்த நன்கொடை பற்றி கூற முடியுமா? நன்கொடை வசூலில் சுமார் ரூ.4.5 கோடி கிடைத்தது. இந்தத் தொகை, 1989 முதல் செலவிடப்பட்டு வந்தது. 2019-ல் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு மீதித்தொகை கோயில் அறக்கட்டளையிடம் அளிக்கப்பட்டு விட்டது. இத்துடன் ராமஜென்மபூமி நியாஸ் எனும் பெயரில் அமைக்கப்பட்ட அறக்கட்டளையும் கலைக்கப்பட்டு, அதில்மீதியிருந்த வசூல் தொகையும் அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. இவற்றின் சரியான தொகை தற்போது எனது நினைவில் இல்லை.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில்தான் ராமர் பிறந்ததாக வாதிடப்பட்டு வந்தது. தற்போது அந்த இடத்திற்கு சற்று தள்ளி கோயில் கட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளதே? இது முற்றிலும் தவறானக் குற்றச்சாட்டு. ராமர், அவர் பிறந்த இடத்தில்தான் இப்போது நிறுவப்பட்டுள்ளாரே தவிர வேறு எங்கும் மாற்றப்படவில்லை.

பாபர் மசூதி வழக்கும் முடிந்து ராமர் கோயில் திறக்கப்பட்டுள்ள நேரத்தில் அயோத்தி முஸ்லிம்களுக்கு விஎச்பி கூறும் செய்தி என்ன? அயோத்தி மற்றும் அதன் சுற்றுப் பகுதியிலுள்ள முஸ்லிம்கள் ராமர் கோயிலுடன் இணைந்திருப்பவர்கள். இவர்கள் தாங்கள் விளைவிக்கும் தானியங்கள், பூக்கள், தைக்கும் துணிகள் உள்ளிட்ட பலவற்றை ராமர் கோயிலுக்கு அனுப்பி வருகின்றனர். இதனால், இங்கு முஸ்லிம்கள் மற்றும் இந்துக்களுக்கு இடையே எந்தப் பிரச்சினையும் இல்லை. பிரச்சினை இருந்திருந்தால், வழக்கின் எதிர்மனுதாரரான இக்பால் அன்சாரி போன்ற முஸ்லிம்கள் கோயில் விழாவுக்கு வந்திருப்பார்களா என எண்ணிப் பார்க்க வேண்டும்.

அயோத்தியில் ராமர் கோயில் முழுமை பெறாமலே திறந்து வைக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளதே? கோயில்கள் இரு வகையாகக் கட்டப்படுகின்றன. ஒரு வகையில் கோயில் கட்டப்படும்போதே கருவறையில் சிலையின் பிராண பிரதிஷ்டை நடத்தப்படுகிறது. மற்றொன்றில், கட்டி முடித்த பிறகு பிரதிஷ்டை நடக்கிறது. அயோத்தியில் ராமர் ஏற்கெனவே பல வருடங்களாகக் கூடாரத்தின் கீழ் இருந்து பலவகை பூஜைகள் முழுமை பெறாமல் இருந்தது. இதன் காரணமாகவே கோயில் முடியும் முன்பே பிராண பிரதிஷ்டை முடிக்கப்பட்டது. இது, புதிய வீடு கட்டுவோர் அதன் ஒருபகுதி முடிந்தவுடன் அதில் குடிபுகுந்து பிறகு தொடர்ந்து வீட்டை கட்டுவது போலாகும்.

அயோத்தியை தொடர்ந்து காசி, மதுராவின் மசூதிகளுக்கும் விஎச்பி குறி வைத்துள்ளதா? அயோத்தியில் ராமர் கோயிலை கட்டி முடிப்பது எங்களின் தற்போதைய உத்தேசம் ஆகும். காசி, மதுரா பிரச்சினையை அந்தந்த பகுதியை சேர்ந்தவர்கள்தான் எழுப்புகின்றனர். இந்த விவகாரங்களில் விஎச்பியின் தலையீடு இப்போதைக்கு எதுவும் இல்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x