Published : 31 Jan 2024 12:42 AM
Last Updated : 31 Jan 2024 12:42 AM

ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் பிரமுகர் மன்வேந்திர சிங் சாலை விபத்தில் படுகாயமடைந்தார்

விபத்தில் சிக்கிய கார்

அல்வார்: ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சியின் பிரமுகரும், முன்னாள் எம்.பி-யுமான மன்வேந்திர சிங், சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். இந்த விபத்தில் அவருடன் பயணித்த அவரது மனைவி சித்ரா சிங் உயிரிழந்தார்.

டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. இதில் அவரது 25 வயது மகன் ஹமிர் சிங் மற்றும் ஓட்டுநர் ஆகியோரும் காயமடைந்துள்ளனர். குடும்பத்துடன் டெல்லியில் இருந்து ஜெய்ப்பூருக்கு காரில் பயணித்த போது விபத்தில் சிக்கி உள்ளார். அவர்கள் பயணித்த காரினை மன்வேந்திர சிங் தான் ஓட்டி வந்துள்ளார். சாலையோர தடுப்பக்கட்டையில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. வேகமாக பயணித்த காரணத்தால் காரின் கட்டுப்பாட்டை ஓட்டுநர் இழந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் சிக்கிய மன்வேந்திர சிங்கின் நெஞ்சுப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது மகனுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த சித்ரா சிங்கின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதாக ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். காயமடைந்த மன்வேந்திர சிங் விரைந்து குணம் பெற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், ராஜஸ்தான் மாநில முதல்வர் பஜன் லால் சர்மா, சித்ரா சிங்கின் உயரிழப்புக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

கடந்த 2018 வரை பாஜக-வில் இருந்த அவர் அதன் பிறகு காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டு வருகிறார். மன்வேந்திர சிங்கின் தந்தை முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x