Published : 30 Jan 2024 01:41 PM
Last Updated : 30 Jan 2024 01:41 PM

“உங்கள் குழந்தைகளை அல்ல; முதல்வரை அடியுங்கள்” - மே.வங்க பாஜக தலைவரின் பேச்சால் சர்ச்சை: திரிணமூல் கண்டனம்

மேற்கு வங்க பாஜக தலைவர் சுகந்த மஜும்தார் | கோப்புப்படம்

கொல்கத்தா: மாநிலத்தின் கல்விக் கொள்கை தொடர்பாக மேற்குவங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியை அடிக்குமாறு, அம்மாநில பாஜக தலைவர் சுகந்த மஜும்தார் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து திங்கள்கிழமை திரிணமூல் காங்கிரஸ் கட்சியினரால் சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட வீடியோ ஒன்றில் மஜும்தார் முதல்வரை அடிக்கும் படி மக்களைக் கேட்டுக்கொள்வது பதிவாகியுள்ளது. வீடியோவில் அவர், “பள்ளியில் இருந்து திரும்பும் உங்கள் குழந்தைகளுக்கு எதுவும் தெரியவில்லை. எந்தக் கேள்விக்கும் அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. பள்ளியில் என்ன படித்தீர்கள் என நீங்கள் அவர்களை அடிக்கிறீர்கள். நீங்கள் குழந்தைகளை அடிப்பதற்கு பதிலாக மம்தா பானர்ஜியை அறையுங்கள். ஏனென்றால் அவர் கல்வி முறையை அழித்துவிட்டார்" என்று வங்காள மொழியில் பேசியுள்ளார். இந்த வீடியோ வேகமாக வைரலாகியது.

மஜும்தாரின் இந்தப் பேச்சுக்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மம்தா பானர்ஜிக்கு எதிராக பாஜக தலைவர் வன்முறையைத் தூண்டுவதாகவும், இத்தகைய பெண் விரோத பேச்சுக்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

திரிணமூல் கட்சியின் முன்னாள் எம்.பி., மஹுவா மொய்த்ரா இது மிகவும் வெட்கக்கேடான செயல் என்று சாடியுள்ளார். இதுகுறித்து சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் மேற்குவங்க பாஜக தலைவர், நமது முதல்வருக்கு எதிராக வன்முறையைத் தூண்டிவிட்டிருக்கிறார். இது மிகவும் வெட்கக்கேடானது. பாஜகவினுடைய சீரழிவின் ஆழத்தையும் எடுத்துக்காட்டுகிறது. இத்தகைய பெண் வெறுப்பு மற்றும் ஆணாதிக்க எண்ணம் கொண்ட பாஜக தலைமை மன்னிப்புகேட்க வேண்டும். கட்சி உறுப்பினர்கள் இந்தப் பேச்சை கண்டிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

திரிணமூல் காங்கிரஸின் மாநில அமைச்சரான சஷி பஞ்சா, “மேற்கு வங்க பாஜக தலைவர் சுகந்த மஜும்தார் மீண்டும் ஒருமுறை விஷமத்தனமாக பேசியுள்ளார். தரம்குறைவான வார்த்தைகள், அவமானகரமான பேச்சுக்கள் மூலம் முதல்வரை அறையும்படி மக்களைத் தூண்டிவிட்டுள்ளார். இது அக்கட்சியின் பெண் வெறுப்பு மற்றும் பெண்களுக்கு எதிரான அவமரியாதை செயலை எடுத்துக்காட்டுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே முதல்வர் மம்தா குறித்த மஜும்தாரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரைக் கண்டித்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மகளிர் பிரிவு இன்று பேரணி ஒன்றை நடத்த உள்ளது. இதுகுறித்து பாஜக சார்பில் அதிகாரபூர்வமாக அறிக்கைகள் எதுவும் வெளியிடப்படாத நிலையில், மாநிலத்தின் பாஜகவைச் சேர்ந்த தலைவர் ஒருவர் இந்தக் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x