Published : 30 Jan 2024 11:23 AM
Last Updated : 30 Jan 2024 11:23 AM
புதுடெல்லி: மகாத்மா காந்தியின் நினைவு நாள் இன்று (ஜன.30) நாடு முழுவதும் அனுசரிக்கப்படும் நிலையில், “வெறுப்பு மற்றும் வன்முறை நிறைந்த சித்தாந்தம் காந்தியை இதேநாளில் பறித்துச் சென்றது. இப்போது, வெறுப்பு எனும் புயலில் உண்மை மற்றும் நல்லிணக்கத்தின் சுடர் அணைந்துவிடக் கூடாது” என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
இந்திய விடுதலைக்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து அறவழியில் போராட்டம் நடத்தியவர் மகாத்மா காந்தி. இவர் டெல்லி பிர்லா மாளிகையில் கோட்சேவால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த நாள் இந்திய வரலாற்றில் மிகப்பெரிய துக்க நாளாக அமைந்தது. அதையொட்டி, அன்றைய தினம் ஒவ்வோர் ஆண்டும் நினைவு கொள்ளப்படுகிறது. அன்றைய தினமே இந்தியாவில் ‘தியாகிகள் தினம்’ என்று கொண்டாடப்படுகிறது. அந்தவகையில், மகாத்மா காந்தியின்நினைவு நாள் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
மகாத்மா காந்தி நினைவு நாளையொட்டி, அவரது உருவப்படத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இது குறித்து தனது எக்ஸ் தளத்தில், “வெறுப்பு மற்றும் வன்முறையும் நிறைந்த சித்தாந்தம் காந்தியை இதேநாளில் பறித்துச் சென்றது. அதே வெறுப்பு சித்தாந்தம் காந்தியின் கொள்கைகள், லட்சியங்களை நம்மிடமிருந்து பறிக்க முயல்கிறது. வெறுப்பு என்னும் புயலில் உண்மை மற்றும் நல்லிணக்கத்தின் சுடர் அணைந்துவிடக் கூடாது. இதுவே காந்திஜிக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்” எனப் பதிவிட்டுள்ளார்.
வேற்றுமையில் ஒற்றுமை கண்ட இந்தியாவைப் பாதுகாப்போம்... காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில், “ தியாகிகள் தினத்தில், நமது தேசத்தின் நன்னெறிக்கான திசைகாட்டியான மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்துகிறேன். அவருடைய லட்சியங்களையும், சிந்தனைகளையும் அழிக்க நினைப்பவர்களுக்கு எதிராக நாம் போராட உறுதியேற்க வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவைப் பாதுகாக்கவும், நமது மக்களிடையே நீதி, சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை உறுதிப்படுத்தவும் அனைத்தையும் செய்வோம்” எனப் பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT