Published : 02 Feb 2018 10:30 AM
Last Updated : 02 Feb 2018 10:30 AM
ராஜஸ்தானில் ஒரு சட்டப்பேரவை, 2 மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை ஸ்ரீ ராஜ்புட் கர்னி சேனா அமைப்பினர் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த அமைப்புதான் பத்மாவத் திரைப்படத்துக்கு ஆரம்பம் முதல் பயங்கர எதிர்ப்பு தெரிவித்துவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், காங்கிரஸின் வெற்றியைக் கொண்டாடிய கர்னி சேனா, "இந்த வெற்றி ஒரு தனிப்பட்ட கட்சியின் வெற்றியல்ல. இது எங்கள் போராட்டக் குழுவிக்கு கிடைத்த வெற்றி. மக்கள் எங்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். அதனாலேயே பாஜகவுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். பாஜக தனது போக்கை மாற்றிக் கொள்ளாவிட்டால் அடுத்தடுத்த தேர்தல்களிலும் இதே நிலை தொடரும்" எனத் தெரிவித்துள்ளது.
அமோக வெற்றி:
ராஜஸ்தானில் ஒரு சட்டப்பேரவை, 2 மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது. ஆளும் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் ஆல்வார், ஆஜ்மீர் மக்களவைத் தொகுதி மற்றும் மண்டல்கர் சட்டப்பேரவைத் தொகுதிகளின் பாஜக எம்பிகள் மற்றும் எம்எல்ஏ காலமானதால் கடந்த திங்கட்கிழமை இடைத்தேர்தல் நடந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை நேற்று (பிப் 1) நடந்தது.
ஆல்வார் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கரண் சிங் யாதவ் 1,94,905 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் ஜஸ்வந்த் சிங் யாதவை தோற்கடித்தார். ஆஜ்மீர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரகு சர்மா 80,059 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் ராம் ஸ்வரூப் லம்பாவை தோற்கடித்தார். மண்டல்கர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விவேக் தனத் 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
இந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இடைத்தேர்தல் முடிவுகள்ஆளும் பாஜகவுக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT