Published : 30 Jan 2024 08:13 AM
Last Updated : 30 Jan 2024 08:13 AM
கொல்கத்தா: குடியுரிமை திருத்த சட்டம் ஒரு வாரத்துக்குள் அமல்படுத்தப்படும் என்று மத்திய இணை அமைச்சர் சாந்தனு தாக்குர் கூறியுள்ளார்.
பாஜக தலைமையிலான மத்திய அரசால் கடந்த 2019-ல் குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) கொண்டுவரப்பட்டது. வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து மத துன்புறுத்தல் காரணமாக கடந்த 2014 டிசம்பர் 31-ம் தேதிக்கு முன் இந்தியா வந்த இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிக்கள், ஜெயினர்கள் மற்றும் பவுத்தர்களுக்கு குடியுரிமை வழங்க இந்த சட்டம் வகை செய்கிறது. இந்த சட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. வரும் மக்களவை தேர்தலுக்கு முன் சிஏஏ-வுக்கான விதிமுறைகள் வெளியாகும் என தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், மத்திய துறைமுகம், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித் துறை இணை அமைச்சர் சாந்தனு தாக்குர்நேற்று கொல்கத்தாவில் செய்திசேனல் ஒன்றுக்கு பேட்டிஅளித்தார். அப்போது அவர், “சிஏஏ விரைவில் அமல்படுத்தப்படும், இந்த சட்டம் இன்னும் ஏழு நாட்களுக்குள் செயல்படுத்தப்படும். இது நான் அளிக்கும் உத்தரவாதம்” என்றார்.
சாத்தனு தாக்குர், மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம், போங்கான் தொகுதி பாஜக எம்.பி. ஆவார். மேலும் இவர், இத்தொகுதியில் பெரும்பான்மையாக வசிக்கும் மதுவா சமூகத்தின் தலைவர் ஆவார். இந்த சமூகத்தினர் வங்கதேசத்தில் இருந்து மத துன்புறத்தல் காரணமாக 1950-களில் இந்தியாவுக்கு வந்தவர்கள் ஆவர். இவர்கள் இந்த சட்டத்தால் பலன் அடைவார்கள் என கூறப்படுகிறது.
இதுகுறித்து திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. குணால் கோஷ் கூறும்போது, “மேற்கு வங்கத்தில் சிஏஏஅமல்படுத்தப்படாது என எங்கள்தலைவர் மம்தா பானர்ஜி தெளிவுபடுத்திவிட்டார். மக்களவை தேர்தலுக்கு முன் பாஜகவினர் இதுபோன்ற பொய்யான வாக்குறுதிகளை அளித்து, அரசியல் லாபம் பெற முயற்சிக்கின்றனர்” என்றார்.
குடியுரிமை விவகாரத்தை அரசியல் ஆதாயத்திற்காக பாஜக பயன்படுத்துவதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி. வருகிறார்.
இந்நிலையில் மத்திய அமைச்சர் அமித்ஷா கடந்த மாதம் கொல்கத்தாவில் பேசும்போது, “சிஏஏ இந்த மண்ணின் சட்டம். அதனை அமல்படுத்துவது தவிர்க்க முடியாதது. மக்களை மம்தா தவறாக வழிநடத்துகிறார்” என்றார்.
நாடாளுமன்ற நடைமுறைகளின்படி எந்தவொரு சட்டத்துக்கும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த 6 மாதங்களுக்குள் அதற்கான விதிகள் வகுக்கப்பட வேண்டும். ஆனால் சிஏஏ-வை பொறுத்தவரை இந்த காலக்கெடுவை மத்திய அரசு கடந்த 2020 முதல் தொடர்ந்து நீட்டித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT