Published : 29 Jan 2024 04:52 PM
Last Updated : 29 Jan 2024 04:52 PM

''வர இருக்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்படும்'' - உத்தராகண்ட் முதல்வர் தகவல்

உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி

புதுடெல்லி: உத்தராகண்ட்டில் வர இருக்கும் சட்டப் பேரவை கூட்டத்தொடரின்போது பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்படும் என்று அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது, ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை ரத்து செய்வது, பொதுசிவில் சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்துவது போன்ற வாக்குறுதிகள் பாஜகவின் தேர்தல் அறிக்கைகளில் பலதசாப்தங்களாக உள்ளன. முதல்இரண்டு வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுவிட்ட நிலையில், எஞ்சியுள்ள பொது சிவில் சட்ட வாக்குறுதியையும் நிறைவேற்ற பாஜக தீவிரம் காட்டிவருகிறது. இதற்கான நடவடிக்கைகளில் சட்ட ஆணையம் ஈடுபட்டுள்ளது.

உத்தராகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி நடவடிக்கை எடுத்துள்ளார். பொது சிவில் சட்ட வரைவு மசோதாவை தயாரிப்பதற்காக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை மாநில அரசு நியமித்திருந்தது. இந்நிலையில், இதுகுறித்து முதல்வர் புஷ்கர் சிங் தாமி தனது எக்ஸ் தளத்தில், “உத்தராகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதில் எங்கள் அரசு உறுதியுடன் இருக்கிறது. வரவிருக்கும் சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில் அதற்கான மசோதா கொண்டு வரப்பட்டு, சட்டமாக இயற்றப்படும். இதன் மூலம் மாநிலத்தில் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம். உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான 5 பேர் கொண்ட குழு, பிப்ரவரி 2 ஆம் தேதி மாநில அரசிடம் தனது வரைவு மசோதாவை (draft bill) சமர்ப்பிக்கும். அதன்பிறகு பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பதிவிட்டுள்ளார்.

பொது சிவில் சட்டம்: திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை மற்றும் தத்தெடுத்தல் உள்ளிட்ட விவகாரங்களில் மத வேறுபாடு இல்லாமல் அனைத்து குடிமக்களுக்கும் ஒரே மாதிரியான சட்டத்தை அமல்படுத்த பொது சிவில் சட்டம் வகை செய்கிறது. இந்தச் சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என்பது பாஜக.வின் முக்கிய கொள்கையாக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x