Published : 29 Jan 2024 03:54 PM
Last Updated : 29 Jan 2024 03:54 PM
புதுடெல்லி: அயோத்தி பிராண பிரதிஷ்டை விழா நேரடி ஒளிபரப்பு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு, தமிழக அரசை இந்து விரோதியாக சித்தரிக்கும் முயற்சி என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக டிஜிபி பதில் அளித்துள்ளார்.
அயோத்தி ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை விழா கடந்த 22-ம் தேதி நடைபெற்றது. இதனை தமிழக கோயில் வளாகங்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய பாஜகவும், இந்து அமைப்புகளும் முயன்றன. ஆனால், அதற்கு அனுமதி அளிக்க அரசு மறுத்துவிட்டதாக புகார் எழுந்தது. இது குறித்து பாஜகவைச் சேர்ந்த வினோஜ் பி செல்வம், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை அன்றைய தினம் விசாரித்த உச்ச நீதிமன்றம், நேரடி ஒளிரப்புக்கு அனுமதி கோரி விண்ணப்பித்தால் அதனை நிராகரிக்கக்கூடாது என உத்தரவிட்டது. மேலும், அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு வழக்கை விசாரித்தது. அப்போது, தமிழக காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் பதில் மனு அளித்தார். அதில், "பிராண பிரதிஷ்டை விழாவின் நேரடி ஒளிபரப்பு, கோயில் விழா, பஜனைகள், அன்னதானம், ஊர்வலங்கள், பூஜைகள் என அனைத்தும் காவல்துறை மற்றும் அதிகாரிகளின் எவ்வித குறுக்கீடுகளும் இன்றி நடைபெற்றன. உள்ளரங்க விழாவாகவும், வெளிப்புற விழாவாகவும் மொத்தம் 252 நிகழ்ச்சிகள் மாநிலம் முழுவதும் நடந்துள்ளன. பிராண பிரதிஷ்டை விழாவை நேரடி ஒளிபரப்பு செய்யவும், பஜனைகள், அன்னதானம், ஊர்வலங்கள், பூஜைகள் ஆகியவற்றை மேற்கொள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் வாய்மொழி உத்தரவு பிறப்பித்ததாகக் கூறப்படுவது ஆதாரமற்றது; தவறானது. தமிழக அரசை இந்து விரோதியாக சித்தரிக்கும் இந்த முயற்சி தவறானது மற்றும் கண்டிக்கத்தக்கது. அயோத்தி ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை விழா தமிழகத்தின் பல கோயில்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. பூஜைகள், அர்ச்சனைகள் ஆகியவை மாநிலம் முழுவதும் உள்ள பல கோயில்களில் நடைபெற்றுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT