Published : 29 Jan 2024 10:06 AM
Last Updated : 29 Jan 2024 10:06 AM
புதுடெல்லி: “குறித்து வைத்துக் கொள்ளுங்கள் பிஹாரில் அமைந்துள்ள ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி நீண்ட காலம் நீடிக்காது” என்று பிரபல தேர்தல் உத்தி வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
பிஹாரின் மெகா கூட்டணி மற்றும் இண்டியா கூட்டணியின் செயல்பாடுகள் அதிருப்தியளித்ததால், முதல்வர் நிதிஷ் குமார் மீண்டும் பாஜக அணியில் இணைந்து புதிய ஆட்சியை அமைத்துள்ளார். இந்நிலையில் பிரசாந்த் கிஷோர் இவ்வாறாகக் கருத்து தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த பிரசாந்த் கிஷோர், ”பிஹாரில் அமைந்துஅள்ள ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி நீண்ட காலம் நீடிக்காது. 2025-ல் பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கிறது. அப்படியென்றால் இப்போது அமைந்துள்ள ஜேடியு - பாஜக கூட்டணி ஓராண்டு அல்லது அதற்கும் குறைவான ஆயுளே கொண்டிருக்கும்.
இந்தக் கூட்டணி பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் வரும்வரை கூட தாங்காது என்பதை நான் உங்களுக்கு எழுத்துபூர்வமாக கூட தருகிறேன். மக்களவைத் தேர்தல் முடிந்த 6-வது மாதமே அடுத்த மாற்றம் நிகழும். ஏற்கெனவே கடந்த 2020 சட்டப்பேரவைத் தேர்தல் வரை அப்போதைய காங்கிரஸ், ஆர்ஜேடி, ஜேடியு மகா கூட்டணி தாங்காது என்று கூறியிருந்தேன். அது நடந்தது. அதேபோல் இப்போதும் சொல்கிறேன் 2025 பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் வரை பாஜக - ஜேடியு கூட்டணி தாக்குப்பிடிக்காது” என்றார்.
முன்னதாக,பதவியேற்பு விழாவுக்கு முன்பு, ஆளுநர் மாளிகை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ்குமார், “பிஹாரில் தற்போதைய கூட்டணியோடு (ராஷ்டிரிய ஜனதா தளம்) இணைந்து அரசை நடத்த முடியவில்லை. அரசு நிர்வாகத்தில் பல்வேறு பிரச்சினைகள் எழுந்தன. இதனால், கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் கலந்து பேசினேன். கூட்டணியில் இருந்து வெளியேற அவர்கள் அறிவுறுத்தினர். அதன்படி, முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டேன். தேசிய அளவிலான இண்டியா கூட்டணியும் எனது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை. தற்போது பாஜகவுடன் இணைந்து புதிய கூட்டணி அரசை அமைத்துள்ளேன்” எனக் கூறியிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT