Published : 29 Jan 2024 06:45 AM
Last Updated : 29 Jan 2024 06:45 AM
புதுடெல்லி: இஸ்ரேல் - ஹமாஸ் தீவிரவாதிகள் இடையே போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் ஏமனில் உள்ள ஹவுதி தீவிரவாதிகள், ஹமாஸுக்கு ஆதரவாக செங்கடல் பகுதியில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இஸ்ரேலுடன் தொடர்புள்ள சரக்கு கப்பல்கள் செங்கடல் வழியாக செல்லும் போது தொடர்ந்து ட்ரோன்கள், ஏவுகணைகள் மூலம் ஹவுதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பிரிட்டன் நிறுவனத்தை சேர்ந்த ‘மர்லின் லவுண்டா’ என்ற சரக்கு கப்பல் மீது, ஹவுதி தீவிரவாதிகள் கடந்த சனிக்கிழமை இரவு ஏவுகணை தாக்குதல் நடத்தினர். கச்சா எண்ணெய் ஏற்றி சென்ற அந்த கப்பல் தீப்பற்றி எரிந்தது. அதில் 22 இந்தியர்கள், வங்கதேசத்தை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 23 பேர் சிக்கிக் கொண்டனர்.
உடனடியாக அந்தக் கப்பலின் கேப்டன் அபிலாஷ் ராவத், இந்திய கடற்படை மற்றும் அமெரிக்க கடற்படைக்கு அவசர உதவி (எஸ்ஓஎஸ்) கேட்டு தகவல் அனுப்பினார். இதையடுத்து செங்கடலில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த சரக்குக் கப்பலுக்கு இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் போர்க் கப்பல் விரைந்து சென்றது. போர்க்கப்பலில் இருந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சரக்குக் கப்பலுக்கு சென்றனர். அங்கு தொடர்ந்து 6 மணி நேரம் போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த காட்சிகள் அடங்கிய வீடியோவை இந்திய கடற்படை தனது ‘எக்ஸ்’ சமூக வலைதள பக்கத்தில் நேற்று வெளியிட்டது. அந்த வீடியோவில் சரக்கு கப்பலின் கேப்டன் அபிலாஷ் ராவத், இந்திய கடற்படைக்கு உருக்கமாக நன்றி தெரிவிக்கிறார். அவர் கூறும்போது, ‘‘கப்பல் தீப்பற்றி எரிந்த போது, அதை அணைக்க முடியவில்லை. எங்களுக்கு நம்பிக்கை போய் விட்டது. ஆனால், எங்களுக்கு உதவி செய்ய இந்திய கடற்படையின் போர்க் கப்பல் விரைந்து வந்தது. அதில் இருந்த நிபுணர்கள் தீயை அணைத்து எங்களை காப்பாற்றினர். அதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT