Published : 28 Jan 2024 07:34 PM
Last Updated : 28 Jan 2024 07:34 PM

“நீதியை எளிதாக பெறுவது குடிமக்களின் உரிமை” - உச்சநீதிமன்ற வைர விழாவில் பிரதமர் மோடி பேச்சு

தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், பிரதமர் மோடி

புதுடெல்லி: நீதியை எளிதாகப் பெருவது என்பது ஒவ்வொரு குடிமக்களின் உரிமை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற வைர விழா கொண்டாட்டத்தின் தொடக்க விழாவில் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

டெல்லியில் உள்ள உச்சநீதிமன்ற கலையரங்கில் உச்சநீதிமன்றத்தின் வைர விழா கொண்டாட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி வைத்தார். டிஜிட்டல் உச்ச நீதிமன்ற அறிக்கைகள் (டிஜி எஸ்சிஆர்), டிஜிட்டல் நீதிமன்றங்கள் 2.0 மற்றும் உச்ச நீதிமன்றத்தின் புதிய வலைத்தளம் உள்ளிட்ட குடிமக்களை மையமாகக் கொண்ட தகவல் மற்றும் தொழில்நுட்ப முயற்சிகளையும் பிரதமர் தொடங்கி வைத்தார். கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் கூறியதாவது: இரண்டு நாட்களுக்கு முன்பு இந்திய அரசியலமைப்பு அதன் 75-வது ஆண்டில் அடியெடுத்து வைத்ததது. உச்சநீதிமன்றம் இன்று அதன் 75-வது ஆண்டைத் தொடங்கும் போது வருகை தந்த உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

சுதந்திரம், சமத்துவம், நீதி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட சுதந்திர இந்தியா என்ற கனவை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் கண்டனர். இந்தக் கோட்பாடுகளைப் பாதுகாக்க உச்சநீதிமன்றம் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. கருத்து சுதந்திரம், தனிநபர் சுதந்திரம் அல்லது சமூக நீதி என எதுவாக இருந்தாலும், உச்சநீதிமன்றம் இந்தியாவின் துடிப்பான ஜனநாயகத்தை வலுப்படுத்தியுள்ளது. தனிநபர் உரிமைகள் மற்றும் பேச்சு சுதந்திரம் குறித்த மைல்கல் தீர்ப்புகள் நாட்டின் சமூக - அரசியல் சூழலுக்கு ஒரு புதிய திசையை அளித்துள்ளன.

இன்றைய பொருளாதாரக் கொள்கைகள் நாளைய துடிப்பான இந்தியாவுக்கு அடிப்படையாக அமையும். இன்று வகுக்கப்படும் சட்டங்கள் இந்தியாவின் பிரகாசமான எதிர்காலத்தை வலுப்படுத்தும். உலகளாவிய புவிசார் அரசியலில் மாறி வரும் நிலப்பரப்புக்கு இடையே, உலகின் கண்கள் இந்தியாவின் மீது இருக்கிறது. அதன் நம்பிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் நமக்குக் கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். வாழ்க்கையை எளிதாக்குதல், எளிதாக வர்த்தகம் செய்தல், பயணம், தகவல் தொடர்பு மற்றும் நீதியை எளிதாக்குதல் ஆகியவை நாட்டிற்கான முன்னுரிமைகள். நீதியை எளிதாகப் பெறுவது ஒவ்வொரு இந்திய குடிமகனின் உரிமை மற்றும் அதன் ஊடகமான இந்திய உச்ச நீதிமன்றத்தின் உரிமை.

நாட்டின் ஒட்டுமொத்த நீதி அமைப்பும் இந்திய உச்சநீதிமன்றத்தால் நிர்வகிக்கப்பட்டு வழிநடத்தப்படுகிறது. மின்னணு நீதிமன்ற இயக்கத் திட்டத்தின் மூன்றாம் கட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் கட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு இரண்டாம் கட்டத்தை விட நான்கு மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களின் டிஜிட்டல் மயமாக்கலை இந்திய தலைமை நீதிபதியே கண்காணித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. அவரது முயற்சிகளுக்கு என்னுடைய வாழ்த்துகள். நீதிமன்றங்களின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் அரசு உறுதி பூண்டிருக்கிறது. இதற்காக 2014-ம் ஆண்டுக்குப் பிறகு 7,000 கோடி ரூபாய்க்கு மேல் ஏற்கனவே விநியோகிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற கட்டிட வளாகத்தின் விரிவாக்கத்திற்கு ரூ. 800 கோடிக்கு கடந்த வாரம் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இன்று தொடங்கப்பட்ட உச்ச நீதிமன்றத்தின் டிஜிட்டல் முன் முயற்சிகள் மூலம் உச்சநீதிமன்றத்தின் முடிவுகள் டிஜிட்டல் வடிவத்தில் கிடைப்பது குறித்தும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை உள்ளூர் மொழியில் மொழிபெயர்க்கும் திட்டம் தொடங்கப்பட்டிருப்பது குறித்தும் மகிழ்ச்சி கொள்கிறேன். நாட்டின் மற்ற நீதிமன்றங்களிலும் இதேபோன்ற ஏற்பாடுகள் செய்யப்படும் என்று நான் நம்புகிறேன்.

எளிதான நீதிக்கு தொழில் நுட்பம் உதவிகரமாக இருப்பதற்கு இன்றைய நிகழ்ச்சி சரியான உதாரணம். செயற்கை நுண்ணறிவு உதவியுடன் நிகழ் நேரத்தில் எனது உரை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுகிறது. அதை பாஷினி செயலி மூலமாகவும் கேட்க முடிகிறது. ஆரம்பத்தில் சில பிரச்சினைகள் எழுந்தாலும், இது தொழில்நுட்ப பயன்பாட்டின் எல்லைகளை விரிவுபடுத்துகிறது. நமது நீதிமன்றங்களிலும் கூட, சாமானிய மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்கு இதுபோன்ற தொழில்நுட்பத்தை செயல்படுத்த முடியும். மக்களின் சிறந்த புரிதலுக்காக எளிமையான மொழியில் சட்டங்களை உருவாக்க வேண்டும் என்று நான் ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்தேன். நீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் உத்தரவுகளை உருவாக்குவதில் இதே போன்ற அணுகுமுறையை நாம் பின்பற்ற வேண்டும்.

நமது சட்டங்கள் இந்திய நெறிமுறைகள் மற்றும் சமகால நடைமுறைகள் இரண்டையும் பிரதிபலிக்க வேண்டியது அவசியம். இந்திய விழுமியங்களும், நவீனத்துவமும் நமது சட்ட விதிகளில் சமமாக இருப்பது இன்றியமையாதது. தற்போதைய சூழ்நிலை மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கு ஏற்ப சட்டங்களை நவீனமயமாக்குவதில் அரசாங்கம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

காலாவதியான காலனித்துவ குற்றவியல் சட்டங்களை ஒழிப்பது, பாரதிய நாக்ரிக் சுரக்ஷா சம்ஹிதா, பாரதிய நியாய சம்ஹிதா, பாரதிய சாக்ஷயா அதினியம் போன்ற புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாற்றங்கள் மூலம், நமது சட்டம், காவல்துறை மற்றும் விசாரணை அமைப்புகள் ஒரு புதிய சகாப்தத்தில் நுழைந்துள்ளன. பழைய சட்டங்களிலிருந்து புதிய சட்டங்களுக்கு மாறுவது தடையற்றதாக இருக்க வேண்டும், இது கட்டாயமாகும். இது தொடர்பாக, மாற்றத்தை எளிதாக்குவதற்காக அரசு அதிகாரிகளுக்கு பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன.

வளர்ச்சியடைந்த பாரதத்தின் அடித்தளமாக வலுவான நீதி அமைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. நம்பகமான சட்டக் கட்டமைப்பை உருவாக்குவதற்காக அரசு தொடர்ந்து முயற்சிக்கிறது. ஜன் விஸ்வாஸ் மசோதா இயற்றப்பட்டது அதன் சரியான திசையின் ஒரு படி, இது நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையையும் குறைத்து, நீதித்துறையின் தேவையற்ற அழுத்தத்தை தணிக்கும். சமரசம் மூலம் மாற்றுத் தீர்வுக்கான ஏற்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இது குறிப்பாக கீழமை நீதிமன்றங்களில் சுமையைக் குறைப்பதற்கு பங்களித்துள்ளது. 2047-க்குள் வளர்ந்த இந்தியாவாக மாற வேண்டும் என்ற இந்தியாவின் கனவை நனவாக்குவதில் அனைத்து குடிமக்களுக்கும் கூட்டு பொறுப்பு உள்ளது. அடுத்த 25 ஆண்டுகளில் நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் உச்சநீதிமன்றம் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கும்." இவ்வாறு பிரதமர் பேசினார்.

தனது உரையில் பாத்திமா பீவிக்கு மரணத்திற்குப் பின் பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டதை குறிப்பிட்ட பிரதமர், இந்த வாய்ப்பு குறித்து பெருமிதம் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டாக்டர் டி.ஒய். சந்திரசூட், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, நீதிபதி பூஷண் ராமகிருஷ்ண கவாய், இந்திய அட்டர்னி ஜெனரல் ஆர் வெங்கடரமணி, உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷன் தலைவர் டாக்டர் ஆதிஷ் சி அகர்வால் மற்றும் இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x