Published : 28 Jan 2024 05:16 PM
Last Updated : 28 Jan 2024 05:16 PM
புதுடெல்லி: ‘இண்டியா’கூட்டணியில் இருந்து பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் வெளியேறியது குறித்து, "ராமர் வந்தார், சென்று விட்டார்" என்பது போல் நாட்டில் பலர் உள்ளனர்" என்று காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
பாட்னாவில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு இன்று காலை சென்ற பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், ஆளுநர் ராஜேந்திர அர்லேகரைச் சந்தித்து ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார். பின்னர் ஆளுநர் மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பிஹார் முதல்வர் பதவியை இன்று நான் ராஜினாமா செய்துவிட்டேன். அமைச்சரவையை கலைக்கவும் ஆளுநரிடம் பரிந்துரைத்துள்ளேன். இண்டியா கூட்டணியில் விஷயங்கள் சரியாக நடக்கவில்லை. நான் காயப்படுத்தப்பட்டேன். எனவே, இண்டியா கூட்டணியை விட்டு நான் வெளியேறிவிட்டேன்" என தெரிவித்தார்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "முன்பு நாங்களும் அவரும் ஒன்றாக இணைந்து போராடினோம். நான் லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வியுடன் பேசும் போது அவர்கள் நிதிஷ் குமார் வெளியேறுகிறார் என்று தெரிவித்தனர். அவர் விரும்பினால் இருக்கலாம் ஆனால் அவர் வெளியே செல்லவே விரும்புகிறார். இது எங்களுக்கு முன்பே தெரியும். ஆனால் இண்டியா கூட்டணியைக் காப்பாற்றுவதற்காக ஏதாவது கூறினால், அது தவறான தகவலாக போய்விடும். இந்த நாட்டில் ராமன் வந்தார் சென்றார் என்பது போல் பலர் உள்ளனர் என்று லாலு மற்றும் தேஜஸ்வி முன்பு சொன்னது இப்போது உண்மையாகியுள்ளது" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பச்சோந்தியுடன் போட்டி: இதனிடைய செய்தியாளர்கள் சந்திப்பின் போது, நிதிஷ் குமார் குறித்த கேள்விக்கு பதில் அளித்த காங்கிரஸ் ஊடக பிரிவு பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், "நிதிஷ் குமார் வெளியேறி இருப்பது இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. இந்தியா கூட்டணி மேலும் வலுப்படும். மம்தா பானர்ஜியே இதனைக் கூறியுள்ளார். நிதிஷ் குமாரின் வெளியேற்றம் மக்களை வருத்தமடையச் செய்யும். பிஹார் மக்கள் நிதிஷ் குமாருக்கும், பாஜக-வுக்கும் தேர்தலில் தக்க பதிலடி கொடுப்பார்கள். இன்னும் இரண்டு முன்று நாட்களுக்கு இது தலைப்புச்செய்தியாக இருக்கும் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். இண்டியா கூட்டணியின் முதல் கூட்டத்தை நிதிஷ் குமார் பாட்னாவில் கூட்டியது சரியில்லை. அவர் அனைத்து கூட்டத்திலும் பங்கேற்றார். என்றாலும் நான் இப்படி சொல்வேன் நிதிஷ் குமார் பஞ்சோந்திக்கே கடும் போட்டியாக உள்ளார்" என்று தெரிவித்தார்.
கேலி பொருளாக இருக்கிறார்: காங்கிரஸ் கட்சியின் பவன் கெரா இதுகுறித்து கூறுகையில், "வெளியேற வேண்டும் என்று விரும்புபவர்கள் ஏதாவது ஒன்றை அல்லது யாரையாவது பற்றி ஒன்றைச் செல்லிக்கொண்டே இருப்பார்கள். இதுபோன்ற ஒன்றைச் செய்து விட்டு மனசாட்சியுடன் வாழ்வது அவ்வளவு எளிதில்லை. 9 வது முறையாக நீங்கள் இப்படிச் செய்கிறீர்கள் என்றால் நீண்ட காலத்துக்கு முன்பே உங்கள் மனசாட்சி தொலைந்து விட்டது என்று அர்த்தம். அவர் என்ன வேண்டுமாலும் சொல்லலாம். நிதிஷ் குமார் வரலாற்றில் தனது பெயரை இன்னும் நல்ல முறையில் பதிவு செய்திருக்கலாம். ஆனால் அவர் தன்னை என்னமாதிரியான சூழ்நிலையில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார் என்று யோசியுங்கள். எல்லோருடைய வீடுகளிலும் அவர் ஒரு கேலிக்குரிய பொருளாக மாறியிருக்கிறார். கேலிக்குரிய பொருளாக இருக்க வேண்டும் என்பது அவரின் விருப்பமாக இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
அவர் பல்டுமார்: மகாகத்பந்தன் கூட்டணியில் இருந்து வெளியேறி பாஜகவுடன் மீண்டும் நிதிஷ் குமார் இணைந்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரசாந்த் கிஷோர், "நிதிஷ் குமார் எப்போது வேண்டுமானாலும் அணி மாறலாம் என்று நான் ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறேன். இது அவரது அரசியல் வாழ்க்கையில் ஒரு அங்கமாகி விட்டது. அவர் ஒரு பல்டுமார். ஆனால் இது நிதிஷ் குமார் மட்டுமல்ல, பாஜகவில் உள்ள அனைவருமே பல்டுமார் என்று நிரூபித்துள்ளது. முன்பு நிதிஷை பல்வேறு பிரச்சினைகளுக்காக குற்றம்சாட்டிய பாஜகவினர் இன்று அவரை வரவேற்கின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.
ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியின் மிரிதுஞ்சய் திவாரி கூறுகையில், "தான் யாருக்கும் எந்த மக்களுக்கும், கட்சிக்கும் நம்பிக்கையில்லாதவன் என்று நிதிஷ் குமார் மீண்டும் நிரூபித்துள்ளார். அவர் என்டிஏ படகையும் கவிழ்ப்பார். பொதுமக்கள் அவரின் செயலை கவனித்துக்கொண்டிருக்கிறார்கள். அவரது செயலுக்கு அவர் பதில் சொல்லியே ஆக வேண்டும். அணி மாறுவதில் அவர் புதிய உலக சாதனையை புரிந்துள்ளார்" என்று கூறியுள்ளார்.
சிவ சேனா (உத்தவ் தாக்கரே அணி) ஆனந்த் துபே கூறுகையில், "இண்டியா கூட்டணியை உருவாக்கி அதன் முதல் கூட்டத்தை பாட்னாவில் நடத்திய நிதிஷ் குமாருக்கு இனி எங்களின் கதவுகள் எப்போதும் திறக்காது என்று முன்பு பாஜக கூறியது. ஆனால் இப்போது நாங்கள் வலுவடைந்ததும் பிஹாரில் தங்களால் வெற்றி பெற முடியாது என்று உணர்ந்த பாஜக, நிதிஷ் குமாரை தங்கள் பக்கம் இழுத்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
திமுகவின் டிகேஎஸ் இளங்கோவன் கூறுகையில், "மத்தியில் பாஜக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்று அனைத்து கட்சிகளும் விரும்புகின்றன. தற்போது பாஜகவுடன் இணைந்துள்ள நிதிஷ் குமாரைத் தவிர கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் இதில் உறுதியாக உள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை கூட்டணி வலுவாக உள்ளது. நாங்கள் 40 இடங்களிலும் வெற்றி பெறுவோம்" என்று தெரிவித்தார்.
விளையாட்டு இன்னும் தொடர்கிறது: நிதிஷ் குமாரின் விலகலுக்கு பின்னர் ஆர்ஜேடி தலைவரும் பிஹார் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "பாஜகவுக்கு தெரிவிக்க வாழ்த்துக்கள் மட்டுமே என்னிடம் உள்ளது. நிதிஷ் குமார் கட்சியைத் தங்களுடன் அழைத்துச் சென்றதற்காக நான் பாஜகவுக்கு நன்றியைத் தெரிவிக்கிறேன். அவர்கள் இன்று பதவி ஏற்கிறார்கள். பிஹாரில் இன்னும் ஆட்டம் முடியவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT