Published : 27 Jan 2024 03:34 PM
Last Updated : 27 Jan 2024 03:34 PM

உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸுக்கு 11 தொகுதி - சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் அறிவிப்பு

அகிலேஷ் யாதவ் | கோப்புப் படம்

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸுக்கு 11 தொகுதிகள் வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதாக சமாஜ்வாதி கட்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “காங்கிரஸ் உடனான எங்கள் நல்லுறவு கூட்டணி 11 வலிமையான தொகுதிகளுடன் நல்ல தொடக்கத்தில் உள்ளது. வெற்றி சமன்பாட்டுடன் எங்கள் கூட்டணி முன்னேறும். இண்டியா கூட்டணியின் வியூகம் வரலாற்றை மாற்றும்” என தெரிவித்துள்ளார். பிஹாரில் இண்டியா கூட்டணி உடையும் அபாயத்தில் உள்ளதாக செய்திகள் வெளியாகும் நிலையில், இந்த அறிவிப்பு வந்துள்ளது. இது இண்டியா கூட்டணிக்கு நல்ல தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது.

உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 80 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில், பாஜக 78 தொகுதிகளில் போட்டியிட்டு 62 இடங்களைக் கைப்பற்றியது. பாஜக கூட்டணியில் 2 தொகுதிகளில் போட்டியிட்ட அப்னா தள் (சோனிலால்) கட்சி 2 இடங்களில் வெற்றி பெற்றது. பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாதி கட்சி, ராஷ்ட்ரிய லோக் தள் ஆகிய கட்சிகள் ஒரு கூட்டணியாக போட்டியிட்டன.

பகுஜன் சமாஜ் கட்சி 38 தொகுதிகளில் போட்டியிட்டு 10 தொகுதிகளில் வெற்றி பெற்றது. சமாஜ்வாதி கட்சி 37 தொகுதிகளில் போட்டியிட்டு 5 இடங்களில் வெற்றி பெற்றது. ராஷ்ட்ரிய லோக் தள் கட்சி 3 தொகுதிகளில் போட்டியிட்டது. எனினும், எதிலும் வெற்றி பெறவில்லை. காங்கிரஸ் கட்சி 67 தொகுதிகளில் போட்டியிட்டது. எனினும், ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த தேர்தலில், பாஜக கூட்டணி 50.76 சதவீத வாக்குகளையும், பகுஜன் சமாஜ் கூட்டணி 38.89 சதவீத வாக்குகளையும், காங்கிரஸ் 6.31 சதவீத வாக்குகளையும் பெற்றிருந்தன. இந்நிலையில், இம்முறை சமாஜ்வாதி கட்சியும், காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன. பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பாஜக, இம்முறையும் அப்னா தள்(சோனிலால்) கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் என தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x