Published : 27 Jan 2024 06:14 AM
Last Updated : 27 Jan 2024 06:14 AM
புதுடெல்லி: கலை, சமூகப் பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப் பணி போன்ற பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு மத்திய அரசால் பத்ம விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு 2024-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் மொத்தம் 123 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த வைஜெயந்தி மாலா, பத்மா சுப்ரமண்யம், விஜயகாந்த், பத்திரப்பன், ஜோஷ்னா சின்னப்பா, ஜோ டி குரூஸ், ஜி. நாச்சியார், சேசம்பட்டி டி.சிவலிங்கம் ஆகியோருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்த விருதுகள் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 5 பேருக்கு பத்ம விபூஷணும், 17 பேருக்கு பத்ம பூஷணும், 101 பேருக்கு பத்ம விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
நடிகை வைஜெயந்தி மாலா, நடிகர் சிரஞ்சீவி, முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிஹாரைச் சேர்ந்த சமூக சேவகர் பிந்தேஷ்வர் பதக், தமிழகத்தைச் சேர்ந்த நாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமண்யம் ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் தமிழக ஆளுநர் எம்.பாத்திமா பீவி, நடிகர் மிதுன் சக்கரவர்த்தி, மறைந்த நடிகர்விஜயகாந்த், பாடகி உஷா உதூப், முன்னாள் மத்திய அமைச்சர் ராம் நாயக் உள்ளிட்ட 17 பேருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட உள்ளது.
மேலும் பத்மஸ்ரீ விருதுக்கு இந்தியாவின் முதல் பெண் யானை பராமரிப்பாளர் பர்பதி பருவா (அசாம்), பழங்குடி சுற்றுச்சூழல் ஆர்வலர் சாமி முர்மு, மிசோரமைச் சேர்ந்த சமூக சேவகர் சங்க் தங்கிமா, சத்தீஸ்கரைச் சேர்ந்த பழங்குடியினர் நல பணியாளர் ஜாகேஷ்வர் யாதவ்,
கோவையைச் சேர்ந்த 87 வயதான வள்ளி ஒயில் கும்மி நடனக் கலைஞர் பத்திரப்பன், ஸ்குவாஷ் விளையாட்டு வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா, எழுத்தாளர் ஜோ டி குரூஸ், மருத்துவத்துறை சேவைக்காக ஜி. நாச்சியார், நாகஸ்வர வித்துவான் சேசம்பட்டி டி. சிவலிங்கம் உள்ளிட்ட 101 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...