Published : 26 Jan 2024 02:00 PM
Last Updated : 26 Jan 2024 02:00 PM
புதுடெல்லி: 75வது குடியரசு தின விழாவில் பிரான்ஸ் நாட்டு ராணுவ வீரர்களின் அணிவகுப்பு அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.
75வது குடியரசு தின விழா நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி தலைநகர் டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். 21 குண்டுகள் முழங்க, தேசிய கீதம் இசைக்கப்பட தேசியக் கொடியை ஏற்றிவைத்தார் திரவுபதி முர்மு. அதன் பின்னர் கண்கவர் அணிவகுப்பு தொடங்கியது. குதிரைப் படை, பீரங்கிப் படை அணிவகுப்பு மரியாதையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றார். அதன் பின்னர் மற்ற அணிவகுப்புகள் தொடங்கின. அந்த வரிசையில் பிரான்ஸ் நாட்டு ராணுவ வீரர்களின் அணிவகுப்பு அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.
பிரான்ஸ் நாட்டு ராணுவத்தில் இருந்து 95 பேர் கொண்ட அணிவகுப்புக் குழுவும், 33 பேர் கொண்ட இசைக்குழுவும் டெல்லியில் நடைபெற்ற 75வது குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்றன. பிரான்சில் இருந்து வந்த இசைக் குழுவுக்கு கேப்டன் குர்தா தலைமை தாங்கினார். அதேபோல் அணி வகுப்பு குழுவுக்கு கேப்டன் நோயல் தலைமை வகித்தார். கேப்டன் நோயல் தலைமையில் 90 லெஜியோனேயர்களைக் கொண்ட பிரெஞ்சு வெளிநாட்டு படையணியின் இரண்டாவது காலாட்படை படைப்பிரிவானது இன்றைய அணிவகுப்பில் பங்கேற்றது.
லெஜியோனேயர்கள் தங்களுக்கே உரித்தான பிரபலமான வெள்ளை தொப்பியை அணிந்துகொண்டு அணிவகுப்பு செய்தனர். பிரெஞ்சு படைகளில் கவுரவுமிக்க இந்த வெள்ளை தொப்பியை அணிய லெஜியோனேயர்கள் கடினமான நான்கு மாத பயிற்சியை முடித்தால் மட்டுமே அனுமதி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூலை 2023ல் பிரான்ஸின் தேசிய தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸுக்கு சென்று தேசிய தினத்தில் கலந்துகொண்டார். மேலும் பாஸ்டில் தினத்திற்காக பாரிஸில் நடந்த விழாவில் இந்திய துருப்புக்கள் மற்றும் விமானங்கள் அணிவகுத்துச் சென்றன. இதன் தொடர்ச்சியாக பிரான்ஸ் அதிபர் இந்திய குடியரசு தின விழாவில் கலந்துகொண்டும், பிரான்ஸ் படைகள் அணிவகுப்பு நடத்தியும் உள்ளன.
இதனிடையே, பிரான்ஸ் அணிவகுப்பு குறித்து விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்ற பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், "பிரான்ஸுக்கு ஒரு பெரிய மரியாதை. நன்றி, இந்தியா,” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment