Published : 26 Jan 2024 06:13 AM
Last Updated : 26 Jan 2024 06:13 AM

நாடு முழுவதும் இன்று குடியரசு தின விழா: பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீஸார் குவிப்பு

புதுடெல்லி: நாடு முழுவதும் இன்று குடியரசு தின விழா நடைபெறுகிறது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டெல்லியில் நடைபெறும் விழாவில். பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

நாடு முழுவதும் இன்று 75-வதுகுடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பலத்தபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏராளமான போலீஸார்பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தலைநகர் டெல்லியில் இன்று குடியரசு தின விழா நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்றிரவு 10 மணி முதல் டெல்லியின் அனைத்து எல்லைகளும் சீல் வைக்கப்பட்டன. அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் வாகனங்கள் மட்டுமே டெல்லியில் நுழைய அனுமதிக்கப்படுகிறது. தலைநகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

இதுகுறித்து டெல்லி காவல் சிறப்பு ஆணையர் மதூப் திவாரி கூறியதாவது:

குடியரசு தின விழாவையொட்டி டெல்லியில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. புதுடெல்லி 28 பகுதிகளாக பிரிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அணிவகுப்பு நடைபெறும் கடமைப் பாதைமற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும் 14,000-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். டெல்லி முழுவதும் 70 ஆயிரம் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

குடியரசு தின விழாவில் சுமார்77,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு சோதனைகளுக்காக காலை 8 மணிக்கே விழா நடைபெறும் இடத்துக்கு அவர்கள் வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அவர்களுக்கு உதவ ஆங்காங்கே சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

டெல்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நாள்தோறும் 1,300 விமானங்கள் இயக்கப்படுகின்றன. குடியரசு தின விழா நடைபெறும் காலை 10.20 முதல் 12.45 மணி வரைவிமானங்கள் புறப்பட, தரையிறங்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. விமானப் படை விமானங்கள், ஆளுநர், முதல்வர் பயணம் செய்யும் விமானங்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

முன்னெச்சரிக்கையாக டெல்லிவான் பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது. டெல்லி ரயில் நிலையங்கள், பேருந்து முனையங்களில் இருஅடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. டெல்லி முழுவதும் உள்ள ஓட்டல்கள், விடுதிகளில் சோதனை நடத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

குடியரசு தினத்தை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி இந்தியா கேட்டில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் இன்று அஞ்சலி செலுத்திவிட்டு கடமை பாதைக்கு செல்வார். அங்கு நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசிய கொடியேற்றுவார்.

இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். இதற்காக இரு நாட்கள் பயணமாக அவர் நேற்று இந்தியாவுக்கு வருகை தந்தார்.

விமானப் படை சார்பில் 51 விமானங்கள், ஹெலிகாப்டர்கள் சாகசங்களில் ஈடுபட உள்ளன. இதில் ரஃபேல், சுகோய், மிக் ரகங்களை சேர்ந்த 29 போர் விமானங்களும் இடம்பெற்றுள்ளன. 13 பெண் விமானிகள், விமானங்களை இயக்க உள்ளனர்.

25 அலங்கார ஊர்திகள்

டெல்லி குடியரசு தின விழாவில் தமிழ்நாடு, அருணாச்சல பிரதேசம், ஹரியாணா, மணிப்பூர், மத்திய பிரதேசம், ஒடிசா, சத்தீஸ்கர், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஆந்திரா, குஜராத், மேகாலயா, ஜார்க்கண்ட், உத்தர பிரதேசம், தெலங்கானா என 16 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் பங்கேற்க உள்ளன.

மத்திய உள்துறை, தகவல் தொழில்நுட்பம், வெளியுறவுத் துறை, விமான போக்குவரத்து, கலாச்சார துறை, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), மத்திய அறிவியல்- தொழில் ஆராய்ச்சி கழகம், தேர்தல் ஆணையம், பொதுப்பணித் துறை என 9 மத்திய அரசு துறைகள் சார்பில் அலங்கார ஊர்திகள் அணிவகுக்க உள்ளன.

இஸ்ரோ சார்பில் சந்திரயான்-3 திட்டம் தொடர்பான அலங்கார ஊர்தி இடம் பெற உள்ளது. உத்தர பிரதேச அரசு சார்பில் பகவான் ராமரின் அலங்கார ஊர்தி, மத்திய பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் பிரம்மோஸ் ஏவுகணை சார்ந்த அலங்கார ஊர்தி அணிவகுப்பில் இடம்பெற உள்ளன.

முப்படைகளை சேர்ந்த வீரர்கள், பல்வேறு பாதுகாப்பு படைகளை சேர்ந்த வீரர்கள் அணிவகுப்பில் பங்கேற்க உள்ளனர். அக்னி வீரர்கள் திட்டத்தில் முப்படைகளில் இணைந்த 144 வீராங்கனைகள் அணிவகுப்பில் மிடுக்காக நடைபயில உள்ளனர்.

இந்தியாவின் ராணுவ வலிமையை பறைசாற்றும் வகையில் அதிநவீன ஏவுகணைகள், போர்க்கப்பல்களின் மாதிரிகள், கவச வாகனங்கள், ரேடார் கருவிகள் உள்ளிட்டவையும் அணிவகுப்பில் இடம்பெற உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x