Published : 03 Feb 2018 08:38 AM
Last Updated : 03 Feb 2018 08:38 AM

பிரம்மோற்சவத்தில் ‘பஞ்ச வாத்திய இசை’: திருப்பதி தேவஸ்தான அதிகாரி தகவல்

திருப்பதி ஏழுமலையான் பிரம்மோற்சவத்தில் வாகன சேவையின் முன்பு, நமது நாட்டு பாரம்பரிய மேளமான ‘பஞ்ச வாத்திய இசை’யும் சேர்க்கப்படுமென தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால் தெரிவித்தார்.

திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் நேற்று பக்தர்களிடம் தொலைபேசி மூலம் குறைகளை கேட்டறியும் ‘டயல் யுவர் இ.ஓ’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதுகுறித்து அனில் குமார் சிங்கால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ரத சப்தமி விழா மிக அற்புத மாக நடைபெற்றது. இதற்காக ஒத்துழைத்த அனைத்து துறையினருக்கு வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். சென்னை பக்தர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, இனி வரும் பிரம்மோற்சவங்களில் நமது பாரம்பரிய இசையான ‘பஞ்ச வாத்திய இசை’ வாகன சேவையின்போது உபயோகிக்கப்பட உள்ளது. திமிலை, மத்தளம், இந்தளம், உடுக்கை, கொம்பு ஆகிய இசைக்கருவிகளின் கூட்டு இசையே பஞ்ச வாத்திய இசையாகும். இது போன்ற நமது நாட்டு பாரம்பரிய இசைக்கருவிகளை வாசிக்கும் கலைஞர்களும் பிரம்மோற்சவத்தில் ஊக்குவிக்கப்படுவர்.

இம்மாதம் 6 முதல் 14-ம் தேதி வரை ஸ்ரீநிவாசமங்காபுரத்தில் கல்யாண வெங்கடேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவமும், 6 முதல் 15-ம் தேதி வரை கபிலேஸ்வரர் சுவாமி கோயில் பிரம்மோற்சவமும் நடைபெறுகிறது.. பிப்ரவரி 13 மற்றும் 20-ம் தேதிகளில் முதியோர் மற்றும் மாற்று திறனாளி பக்தர்கள் 4,000 பேருக்கும், பிப்ரவரி 12 மற்றும் 21-ம் தேதிகளில் 5 வயதுக்குட்பட்ட கைக்குழந்தைகள் மற்றும் அவர்களின் தாயார்களுக்கும் ஏழுமலையானைத் தரிசிக்க சிறப்பு அனுமதி வழங்கப்படும். ஆன்லைன் மூலம் தேவஸ்தான திருமண மண்டபங்களைப் பதிவு செய்ய சோதனை அடிப்படையில் சித்தூர் மாவட்டத்தில் உள்ள 39 திருமண மண்டபங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து மற்ற ஊர்களிலும் இது அமல்படுத்தப்படும்.

இவ்வாறு தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால் தெரிவித்தார். மேலும், திருப்பதி ஏழுமலையானை வரும் மே மாதத்தில் ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் பெற்று தரிசிக்க ஆன்லைனில் 61,858 டிக்கெட்டுகளை தேவஸ்தானம் வெளியிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x