Published : 25 Jan 2024 07:37 PM
Last Updated : 25 Jan 2024 07:37 PM

முழுமையின்றி வெறும் 1.17 நிமிடத்தில் உரையை ‘முடித்த’ ஆளுநர் ஆரிஃப் முகமது கான் - கேரள பேரவையில் சலசலப்பு

திருவனந்தபுரம்: கேரள சட்டப்பேரவை கூட்டத் தொடரில் முழுமையாக அல்லாமல், வெறும் 1.17 நிமிடங்களில் ஆளுநர் ஆரிஃப் முகமது கான் தனது உரையை நிறைவு செய்தது பேசுபொருளாகி உள்ளது.

கேரள சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. வழக்கமாக ஆண்டின் தொடக்கத்தில் கூடும் சட்டப்பேரவைத் தொடரானது ஆளுநர் உரையுடன் தொடங்கும். அதன்படி, இந்த ஆண்டும் ஆளுநர் உரை நிகழ்த்த கேரள சட்டப்பேரவையில் ஏற்பாடு செய்யப்பட்டது. காலை 9 மணியளவில் சட்டமன்றத்துக்கு கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் வந்தார். அவரை கேரள முதல்வர் பினராயி விஜயன், சபாநாயகர் ஏஎன் ஷம்சீர், அமைச்சர் கே ராதாகிருஷ்ணன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

பின்னர், சபையில் இருந்த அனைவருக்கும் வாழ்த்துக் கூறி வழக்கமான கொள்கை உரையைத் தொடங்கிய ஆளுநர் ஆரிஃப் முகமது கான், "நான் இப்போது கடைசி பாராவைப் படிக்கிறேன்" என்றார். மொத்தம் 62 பக்கக் கொள்கை உரையில் 136 பத்திகள் இருந்த நிலையில், அவற்றில் கடைசி பத்தியை மட்டும் படித்துவிட்டு சட்டப்பேரவையை விட்டு வெளியேறினார்.

வெறும் 1.17 நிமிடத்தில் தனது உரையை முடித்த ஆளுநர் ஆரிப் முகமது கான், சரியாக 9.04 மணிக்கெல்லாம் சபையை விட்டு வெளியேறினார். மொத்தமாக, 5 நிமிடங்களுக்கும் உள்ளாகவே சட்டசபையில் ஆளுநர் இருந்திருப்பார். ஆளுநரின் செயல் கேரள அரசியலில் விவாதங்களை தூண்டியுள்ளது.

ஏற்கெனவே கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசுக்கும் மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கானுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. கண்ணுர் பல்கலைக்கழக துணைவேந்தராக கோபிநாத் ரவீந்திரனின் மறு நியமனத்தை உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு ரத்து செய்தது. இந்த விவகாரத்தில் ஆளுநர் தனது அதிகாரத்தை கைவிட்டுவிட்டதாக உச்ச நீதிமன்றம் விமர்சனம் செய்தது.

இதைத் தொடர்ந்து கேரள பல்கலைக்கழகத்தின் செனட் அவைக்கு 4 மாணவர்களை ஆளுநர் நியமனம் செய்தார். ஆனால், இவர்கள் வலதுசாரி ஆதரவாளர்கள் என ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியும் அதன் மாணவர் அமைப்பும் (எஸ்டிஎப்) எதிர்ப்பு தெரிவித்தன. இந்த விவகாரத்தில் ஆளுநரை மாநில அமைச்சர்கள் விமர்சனம் செய்தனர்.

மேலும், கேரள சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களில், ஆளுநர் ஆரிப் முகமது கான் கையெழுத்திடாததால், உச்ச நீதிமன்றத்தில் அவர் மீது கேரள அரசு வழக்கு தொடர்ந்தது. கேரள அரசு அனுப்பிய மசோத்தாக்களில் 8 நிலுவையில் உள்ளன. அவற்றில் 3 இரண்டு ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. அதில் ஒன்று ஆளுநர் முகமது ஆரிஃப் கானை மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருந்து நீக்கும் மசோதா என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x