Published : 25 Jan 2024 06:03 PM
Last Updated : 25 Jan 2024 06:03 PM
சிலிகுரி (மேற்கு வங்கம்): திரிணமூல் காங்கிரஸ் உடனான தொகுதிப் பங்கீடு சிக்கலுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சிலிகுரி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயராம் ரமேஷ், "இண்டியா கூட்டணியில் உள்ள கட்சிகளின் நோக்கம் ஒன்றே. அந்த வகையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி நடத்தும் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்க வேண்டும் என்று நாங்கள் எல்லோருமே விரும்புகிறோம். மேற்கு வங்கத்திலும், நாடு முழுவதிலும் பாஜக தோற்கடிக்கப்பட மம்தா பானர்ஜி மிகவும் தேவை. எங்கள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோர் அனைவருமே மம்தா பானர்ஜி மீது மிகப் பெரிய மரியாதை வைத்துள்ளனர்.
திரிணமூல் காங்கிரஸ் உடனான தொகுதி பங்கீடு குறித்த ஒவ்வொன்றுக்கும் நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. ஆனால், காங்கிரஸ் - திரிணமூல் காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீட்டு சிக்கலுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று நம்புகிறேன். மம்தா பானர்ஜி இல்லாத இண்டயா கூட்டணியை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. பாஜகவுக்கு எதிரான போராட்டத்தில் அவர் இன்றியமையாதவர்" என தெரிவித்தார்.
முன்னதாக, இந்த விவகாரம் குறித்துப் பேசிய திரிணமூல் காங்கிரஸ் எம்.பி டெரிக் ஓ பிரையன், “மேற்கு வங்கத்தில் கூட்டணி அமையாததற்கு அம்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரிதான் காரணம். இண்டியா கூட்டணியின் பெயரைக் கெடுக்க விரும்புபவர்கள் பலர் உள்ளனர். ஆனால் பாஜகவினரும், ஆதிர் ரஞ்சன் சவுத்ரியும்தான் அடிக்கடி கூட்டணிக்கு எதிராக பேசி வருகின்றனர். வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பாஜகவை கணிசமான இடங்களில் தோற்கடித்தால், அதன்பின்னர் கூட்டணியில் அங்கம் வகிப்போம். அரசியல் சாசனத்துக்காக போராடும் கூட்டணியின் அங்கமாக நாங்கள் இருப்போம்” என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT