Published : 25 Jan 2024 03:53 PM
Last Updated : 25 Jan 2024 03:53 PM
புதுடெல்லி: “மேற்கு வங்கத்தில் கூட்டணி அமையாததற்கு அம்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரிதான் காரணம்” என திரிணமூல் காங்கிரஸ் எம்.பி டெரிக் ஓ பிரையன் தெரிவித்துள்ளது மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து திரிணமூல் காங்கிரஸ் எம்.பி டெரெக் ஓ பிரையன் இன்று கூறும்போது, “மேற்கு வங்கத்தில் கூட்டணி அமையாததற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரிதான் காரணம். இண்டியா கூட்டணியின் பெயரைக் கெடுக்க விரும்புபவர்கள் பலர் உள்ளனர். ஆனால் பாஜகவினரும், ஆதிர் ரஞ்சன் சவுத்ரியும்தான் அடிக்கடி கூட்டணிக்கு எதிராக பேசி வருகின்றனர். வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பாஜகவை கணிசமான இடங்களில் தோற்கடித்தால், அதன்பின்னர் கூட்டணியில் அங்கம் வகிப்போம். அரசியல் சாசனத்துக்காக போராடும் கூட்டணியின் அங்கமாக நாங்கள் இருப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
இண்டியா கூட்டணியில் விரிசல் ஏன்? - மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று மம்தா பானர்ஜி, பகவந்த் மான் ஆகியோர் அறிவித்துள்ளனர். மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் என்று அவர்கள் அறிவித்திருப்பது, இண்டியா கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் கூட்டணி இல்லை என்று மாநில முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். அவர், “கடந்த 2014-ம் ஆண்டு மக்களவை தேர்தலின்போது, மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் 4 தொகுதிகளில் வென்றது. 2019-ம் ஆண்டு தேர்தலில் 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அதனால், காங்கிரஸுக்கு 2 தொகுதிகள் கொடுக்க முன்வந்தேன். ஆனால், 10 முதல்12 தொகுதிகள் வேண்டும் என்று காங்கிரஸ் கேட்பது நியாயமற்றது. குறிப்பிட்ட பகுதிகளை மாநிலக்கட்சிகளுக்கு விட்டுக் கொடுப்பதுதான் சரியாக இருக்கும்.
நாடு முழுவதும் 300 தொகுதிகளில் காங்கிரஸ் தாராளமாக போட்டியிடட்டும். அதற்கு நான் உதவுகிறேன். அங்கு திரிணமூல் போட்டியிடாது. அதேநேரம், விரும்பியதை செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் பிடிவாதமாக இருக்கின்றனர். நாங்கள் பாஜகவை தோற்கடிக்க விரும்புகிறோம். பாஜகவை வீழ்த்தஎதையும் செய்வோம். அதற்கான சக்தியும் எங்களிடம் உள்ளது. ஆனால், தொகுதி பங்கீடு விஷயத்தில், நாங்கள் சொல்வதை கேட்க சிலர் விரும்பவில்லை. பாஜகவை எதிர்த்து போராட நீங்கள் விரும்பவில்லை என்றால், அவர்கள் வெற்றி பெரும் வாய்ப்பையாவது கொடுக்காமல் இருங்கள்.
மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளிலும் திரிணமூல் காங்கிரஸ் தனித்து போட்டியிடும். தேர்தல் முடிவுகள் வந்த பிறகு, தேசிய அளவில் இண்டியா கூட்டணி பற்றி பரிசீலிப்போம். எனது மாநிலத்துக்குள் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 25-ம் தேதி (இன்று) நடைபயணம் வருகிறார். இண்டியா கூட்டணியில் நான் அங்கம் வகித்தும், மரியாதைக்குகூட எனக்கு அவர்கள் இதுபற்றி தகவல் தெரிவிக்கவில்லை.
மேற்கு வங்கத்தை பொருத்தவரை, காங்கிரஸுக்கும், திரிணமூல் கட்சிக்கும் எந்த உறவும் இல்லை. இண்டியா கூட்டணி இந்தியாவில் இருக்கும். ஆனால், மேற்கு வங்கத்தில் பாஜகவை எதிர்த்து திரிணமூல் காங்கிரஸ் போராடும். பாஜகவுக்கு எங்களால் மட்டுமே பாடம் கற்பிக்க முடியும்” என்று மம்தா கூறினார்.
இதனிடையே, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கூறும்போது, “பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியுடன் ஆம் ஆத்மி எந்த கூட்டணியும் அமைக்காது. பஞ்சாபில் உள்ள 13 மக்களவை தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்று, நாட்டில் ஹீரோவாக உருவெடுக்கும். ஆம் ஆத்மி கட்சியின் 40 வேட்பாளர்கள் பட்டியல் தயாராக உள்ளது. அதில் இருந்து வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள 13 பேரை தேர்வு செய்து தேர்தலில் நிறுத்துவோம்” என்றார்.
அதேவேளையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறும்போது, “மம்தா பானர்ஜியும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் இண்டியா கூட்டணியின் வலுவான தூண்கள் என்று ராகுல் காந்தி தெளிவுபட கூறியுள்ளார். மம்தா இல்லாமல் இண்டியா கூட்டணியை காங்கிரஸ் கட்சியால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. மேற்கு வங்கத்தில் மக்களவை தேர்தலில் இண்டியா கூட்டணி கட்சிகள் ஒன்றிணைந்து போராட வேண்டும்” என்றது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...