Published : 25 Jan 2024 11:49 AM
Last Updated : 25 Jan 2024 11:49 AM
குவாஹாட்டி: இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையின் போது காங்கிரஸ் தொண்டர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக ராகுல் காந்தி, காங்கிரஸ் பிரமுகர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு மாநில சிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து அசாம் மாநில டிஜிபி, ஜிபி சிங் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஜன.23-ம் தேதி குவாஹாட்டியில் இந்திய தேசிய காங்கிரஸின் சார்பில் நடைபெற்ற ஊர்வலத்தில் நிகழ்ந்த பல்வேறு சட்ட மீறல்கள் தொடர்பான வழக்குகள், சிறப்பு விசாரணை குழு மூலம் ஆழமான விசாரணைக்காக அசாம் சிஐடிக்கு மாற்றப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் பிரமுகர்கள் மீது கலவரம், சட்டவிரோதமாக கூடுதல், குற்றச்சதி உள்ளிட்ட இந்திய தண்டனைச் சட்டத்தின் 9 பிரிவுகள் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ராகுல் காந்தி நடத்தி வரும் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை அதன் 10-வது நாளான ஜன.23ம் தேதி செவ்வாய்க்கிழமை அசாமின் குவாஹாட்டி நகருக்கு சென்றது. சுமார் 5,000-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்களும் அவருடன் சென்றனர். அப்போது குவாஹாட்டி நகருக்குள் ராகுல் காந்தி நுழைய அசாம் போலீஸார் அனுமதி வழங்கவில்லை. இதன் காரணமாக போலீஸாருக்கும் காங்கிரஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீஸார் அமைத்திருந்த தடுப்புகளை காங்கிரஸார் அகற்றினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டது.
இதுகுறித்து அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "அசாம் மிகவும் அமைதியான மாநிலம். நக்சலைட் அணுகுமுறை எங்கள் கலாச்சாரத்துக்கு எதிரானது. ராகுல் காந்தி மக்களை தூண்டி விடுகிறார். வன்முறை தொடர்பான வீடியோவை காங்கிரஸாரே வெளியிட்டு உள்ளனர். இந்த வீடியோ ஆதாரத்தை வைத்து ராகுல் மீது வழக்கு பதிவு செய்ய அசாம் போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளேன். காங்கிரஸாரின் வன்முறையால் குவாஹாட்டியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது" என்று தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து ராகுல் காந்தி கூறும்போது, “குவாஹாட்டியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் பஜ்ரங்தளம் பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டது. எங்களது பாத யாத்திரைக்கு மட்டும் அனுமதி மறுப்பது ஏன்? நாங்கள் சட்டத்தை மீறவில்லை. சாலை தடுப்புகளை மட்டுமே அகற்றினோம்" என்று தெரிவித்திருந்தார்.
கடந்த 2022ம் ஆண்டு நடந்த இந்திய ஒற்றுமை யாத்திரையைத் தொடர்ந்து, காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி அதன் இரண்டாவது கட்டமான இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையை ஜன.14ம் தேதி மணிப்பூரின் தவ்பால் நகரில் இருந்து தொடங்கினார். இந்த யாத்திரை மொத்தம் 67 நாட்களில், 100 மக்களவைத் தொகுதிகள், 337 சட்டப்பேரவைத் தொகுதிகள், 110 மாவட்டங்கள் வழியாக 6,713 கி.மீ., தூரம் பயணித்து மார்ச் 20ல் மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் நிறைவடைகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT