Last Updated : 25 Jan, 2024 07:53 AM

 

Published : 25 Jan 2024 07:53 AM
Last Updated : 25 Jan 2024 07:53 AM

அயோத்தி ராமர் கோயிலுக்கு வருகை தரும் பாஜக ஆளும் மாநில முதல்வர்கள்: பக்தர்கள் தரிசனத்தில் செல்போன், கேமராவுக்கு தடை

கோப்புப்படம்

புதுடெல்லி: அயோத்தி ராமரை தரிசிக்க பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் தங்கள் அமைச்சரவை சகாக்களுடன் வரவுள்ளனர். ராமர் கோயில் தரிசனத்தில் பொதுமக்கள் செல்போன், கேமரா போன்ற பொருட்களை கொண்டுவர நேற்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயில் கடந்த திங்கட்கிழமை வழிபாட்டுக்கு திறக்கப்பட்டது. அப்போது முதல் தரிசனத்திற்கு வந்தவர்கள் தங்கள் செல்போன், கேமராக்களில் பால ராமரையும், கோயிலையும் படம் பிடித்து மகிழ்ந்தனர். இவற்றை சமூக வலைதளங்களிலும் பகிர்ந்து கொண்டனர். இந்நிலையில் நேற்று முதல் ராமர் கோயிலுக்குள் செல்போன், கேமரா, பர்ஸ் உள்ளிட்டவற்றை கொண்டுசெல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இவற்றை கோயில் வளாகத்தில் உள்ள பாதுகாப்பு பிரிவில் வைத்துச் செல்கின்றனர்.

இதனிடையே ராமர் கோயில் விழாவில் பிரதமர் நரேந்திர மோடியுடன் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் மட்டுமே கலந்து கொண்டார். பிற மாநில முதல்வர்கள், மத்திய, மாநில அமைச்சர்களும் விழாவில் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது பாஜக ஆளும் மாநில முதல்வர்களுக்கு தரிசன தேதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நாட்களில் பாஜக முதல்வர்கள் தங்கள் அமைச்சரவை சகாக்களுடன் மற்றும் குடும்பத்தினருடன் வந்து பால ராமரை தரிசிக்க உள்ளனர்.

இதில் முதலாவதாக, ஜனவரி 31-ல் திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா தரிசனம் செய்ய உள்ளார். பிப்ரவரி 1-ல் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் மீண்டும் தரிசனத்திற்கு வருகிறார். இவருடன் மாநில அமைச்சர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வரவுள்ளனர்.

பிப்ரவரி 2-ல் உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர்சிங் தாமி, பிப். 5-ல் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, பிப். 6-ல் அருணாச்சல முதல்வர் பெமா கண்டு வருகை தருகின்றனர். இதையடுத்து ஹரியாணா முதல்வர் மோகன்லால் கட்டார் (பிப்.9), ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா (பிப்.12), கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் (பிப். 15) ஆகியோர் வரவுள்ளனர்.

இவர்களை தொடர்ந்து அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா (பிப்.22), குஜராத் முதல்வர் பூபேந்தர் பட்டேல் (பிப்.24), ம.பி. முதல்வர் மோகன் யாதவ் (மார்ச் 4) ஆகியோர் வருகை தருகின்றனர்.

ஜே.பி.நட்டா 29-ல் தரிசனம்: பாஜக தலைவர் ஜே.பி.நட்டா கட்சியின் தேசிய நிர்வாகிகளுடன் ஜனவரி 29-ல் பால ராமரை தரிசிக்க உள்ளார். மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு பிப்ரவரி 4-ல் தரிசன வாய்ப்பு கிடைத்துள்ளது. இதையடுத்து அனைத்து மத்திய அமைச்சர்களும் ஒருவர் பின் ஒருவராக அயோத்திக்கு வர உள்ளனர்.

இவர்கள் தங்கள் மக்களவை தொகுதியிலிருந்து பொதுமக்களுடன் ரயிலில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x