Published : 24 Jan 2024 08:21 PM
Last Updated : 24 Jan 2024 08:21 PM
“மம்தா இல்லாமல் இண்டியா கூட்டணியை யோசிக்கவே முடியவில்லை” என்று எதிர்வினையாற்றியுள்ளது காங்கிரஸ். இண்டியா கூட்டணியில் எவ்வித உரசல் ஏற்பட்டதாக வெளிப்படையாக காங்கிரஸ் காட்டிக் கொள்ளாவிட்டாலும் இண்டியா கூட்டணியின் தூணாக திரிணமூல் காங்கிரஸ் இருக்கிறது என்றும், மம்தா இல்லாமல் அந்தக் கூட்டணியை யோசிக்கவே இயல முடியவில்லை என்றும் உதிர்க்கப்பட்ட சிலாகிப்புகள், மம்தாவின் அறிவிப்பு ‘இண்டியா’ கூட்டணியில் நிச்சயமாக தாக்கங்களை ஏற்படுத்தலாம் என்பதை உணர்ந்து கூறப்பட்டதாகவே இருக்கிறது.
இத்தனைக்கும் அடித்தளமாக இருந்தது காங்கிரஸின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் சில தடித்த வார்த்தைகள். அரசியல் வரலாற்றில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஒரு தீவிர திரிணமூல் எதிர்ப்பாளராகவே அறியப்படுகிறார். அவரது இத்தகைய விமர்சனங்கள் புதிதல்ல என்றாலும் கூட, அவை உதிர்க்கப்பட்ட தருணம் முக்கியத்துவம் வாய்ந்தது. மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில், பாஜகவுக்கு எதிராகப் பார்த்து, பார்த்து கட்டமைக்கப்பட்ட இண்டியா கூட்டணியை சிதைக்கும் வகையில் வழக்கம்போல் போகிற போக்கில் விளைவறியாது பேசிச் சென்றிருக்கிறார் ஆதிர் ரஞ்சன் என்பது அரசியல் நோக்கர்களின் பார்வை.
மேற்கு வங்கத்தின் பெண் சிங்கம்: உண்மையில் மம்தா ஏன் இண்டியா கூட்டணிக்கு அவ்வளவு முக்கியம் என்று பார்த்தால், பாஜகவை துணிச்சலுடன் வலிமையுடன் எதிர்கொள்ளும் பிராந்தியத் தலைவராக இருக்கிறார் என்பதே சாமானியரின் புரிதலாக இருக்கும். ஆனால், அவர் அதற்கும் மேலாக மேற்கு வங்கத்தின் பெண் சிங்கமாக இருக்கிறார் என்பதே இண்டியா கூட்டணியில் அவரின் தேவையை இன்றியமையாததாக மாற்றுகிறது.
மேற்கு வங்கத்தின் பெண் சிங்கம் என்றுதான் மம்தா பானர்ஜி பரவலான அடைமொழி பெற்றிருக்க, அவர் கடந்து வந்த அரசியல் பாதையில் சந்தித்த சவால்களும் அவற்றை சமாளித்து சாதித்த திறனுமே காரணம் என்றால் அது மிகையாகாது.
1970-ல் இந்திரா காங்கிரஸில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார் மம்தா. 1984-ல் மக்களவைத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சியின் வலிமைமிகு தலைவரான சோம்நாத் சாட்டர்ஜியை தெற்கு கொல்கத்தாவின் ஜாதவ்பூர் தொகுதியில் வீழ்த்தினார். நாடாளுமன்றத்தின் இளம் உறுப்பினர்களில் ஒருவரானார். 1984-ல் அகில இந்திய இளைஞர் காங்கிரஸின் பொதுச் செயலாளரானார். 1991-ல் மத்திய அமைச்சரானார்.
1997-ல் அவர் திரிணமூல் காங்கிரஸ் கட்சியை நிறுவினார். 2000-ல் மத்தியில் ரயில்வே அமைச்சரானார். அப்போது ஆட்சி செய்தது பாஜக. 2008-ல் சிங்கூரில் டாடா மோட்டார்ஸ் நிலம் கையகப்படுத்தும் முயற்சியை எதிர்த்து அவர் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டம் அரசியலில் அவரை மிகப் பெரிய ஆளுமையாக உறுதிப்படுத்தியது. அதன் பின்னர் மாநில அரசியலில் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றார்.
மேற்கு வங்கம் என்றாலே இடதுசாரிகள் என்ற நிலையை மெல்ல மெல்ல அசைக்க ஆரம்பித்தார் மம்தா. 2011 மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் அதற்கான பலன் கிட்டியது. 34 ஆண்டுகள் ஆட்சி செய்த இடதுசாரி அரசுக்கு முடிவு கட்டி அரியணையில் அமர்ந்தார். அப்போதிருந்தே அவர் மேற்கு வங்கத்தின் பெண் சிங்கமாகத்தான் அறியப்படுகிறார். அதனால்தான் மம்தா இல்லாத இண்டியா கூட்டணியை யோசிப்பது காங்கிரஸுக்கு மட்டுமல்ல வாக்களிக்கக் கூடிய மக்களுக்குமே கசப்பானதாகவே இருக்கும் எனக் கூறுகின்றனர் அரசியல் நிபுணர்கள்.
பிராந்திய அரசியலில் வேரூன்றியத் தலைவர், நாடாளுமன்றத் தேர்தலின்போது வளைக்கப் பார்ப்பது சரியான அரசியலாக இருக்காது என்பதும் அவர்களின் கருத்தாக இருக்கிறது. இந்தக் காரணத்தை சுட்டிக்காட்டியே பாஜகவும் அதன் சார்பு கட்சிகளும் இண்டியா கூட்டணி தேர்தல் வரை தாக்குப் பிடிக்காது என்ற விமர்சனத்தை முன்வைத்தது.
எதிர்பார்க்கப்பட்ட சர்ச்சை: எதிர்க்கட்சிகளின் விமர்சனம் ஒருபுறம் இருக்க, இண்டியா கூட்டணி ஆரம்பித்தபோதே இந்தக் கூட்டணி பாஜகவை மத்தியில் வீழ்த்துவதற்கான கொள்கையுடன் இணைந்த கூட்டணி பிராந்திய அரசியலில் கொள்கைகள் மாறும் என்றே கட்சிகள் தெளிவுபடுத்தின.
அதற்குக் காரணம், ஒவ்வொரு மாநிலத்தின் அரசியலும் வித்தியாசனமானதாக இருக்கும். அதுவும் மேற்கு வங்க மாநில அரசியல் மிகவும் சிக்கலானது. அங்கே உள்ளாட்சித் தேர்தல்கள் கூட வன்முறை இல்லாமல் நடந்ததில்லை. அனல் பறக்கும் அரசியல் என்பதை உண்மையாகவே உணரக் கூடிய களம்தான் மேற்கு வங்க அரசியல் களம். அதனை சமாளிக்க மம்தா பானர்ஜியின் ஆவேசம் அங்கு தேவைப்படுகிறது. மேற்கு வங்கத்தில் காங்கிரஸும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கூட்டணியில் இருக்க கம்யூனிஸ்டுகளில் ஒரு சில முக்கியப் புள்ளிகள் திரிணமூல் காங்கிரஸுடன் எந்தத் தொடர்பையும் விரும்பவில்லை. தேசிய அரசியலுக்காக சமரசங்களை மேற்கொள்வது மாநில அரசியலில் மாற்றங்களைக் கொண்டுவரக் கூடும் என்பதை அறியாதவர் இல்லை மம்தா.
இத்தகைய சிக்கலான களத்தில் பிராந்திய அரசியலுக்கென்று தனிக் கவனம் கொடுக்க வேண்டிய சூழலில் “நாட்டில் என்ன நடக்கும் என்பது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. நாங்கள் மதசார்பற்ற கட்சி. மேற்கு வங்கத்தில் பாஜகவை நாங்கள் தோற்கடிப்போம்” என்ற மம்தாவின் முழக்கம் திரிணமூல் தொண்டர்களுக்கு 2024 மக்களவைத் தேர்தலுக்கு களப்பணியாற்றத் தேவையான ஊக்கத்தை கொடுத்துவிட்டது. இனி இதில் சேதாரம் இல்லாமல் ஆதாயம் தேடுவதை மட்டும்தான் காங்கிரஸ் கட்சியால் இண்டியா கூட்டணிக்காக மேற்கொள்ள முடியும்.
“பாஜகவை வீழ்த்த எந்த வாய்ப்பையும் நழுவவிடமாட்டோம்” என்பதை காங்கிரஸ் வார்த்தையாக அல்லாது கொள்கையாகக் கொண்டிருந்தால் இண்டியா கூட்டணி உயிர்ப்புடன் இருக்க மேற்கு வங்கத்தில் மட்டுமல்ல பஞ்சாப், டெல்லி, தமிழகம் என சில, பல மாநிலங்களில் சமரசம் செய்து கொள்ள வேண்டும் எனக் கூறுகின்றனர் தேர்தல் அரசியல் பார்வையாளர்கள்.
மம்தாவின் அறிவிப்பு இண்டியா கூட்டணிக்கு பின்னடைவா, இல்லையா என்பதை கணிப்பதற்கான காலம் இன்னும் முதிர்ந்துவிடவில்லை. அது பின்னடைவை ஏற்படுத்துவது மம்தாவின் அறிவிப்பு சார்ந்தது அல்ல’ காங்கிரஸின் அடுத்தடுத்த நகர்வுகளைச் சார்ந்ததாக அமையும். அது மட்டுமல்லாமல், மேற்கு வங்கத்தைத் தொடர்ந்து பஞ்சாப், பிஹார் என எங்கு உரசல்கள் வந்தாலும் பொருத்திக் கொள்ள ஓர் அளவுகோலாகவும் அமையும் என்றே தேர்தல் அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT