Published : 24 Jan 2024 04:00 PM
Last Updated : 24 Jan 2024 04:00 PM

“மம்தா இல்லாமல் இண்டியா கூட்டணியை யோசிக்க முடியவில்லை” - பேச்சு தொடர்வதாக காங்கிரஸ் விளக்கம்

அசாம்: மக்களவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி மேற்கு வங்கத்தில் தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவரும், மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி அறிவித்துள்ள நிலையில், “இண்டியா கூட்டணியின் முக்கியமான தூணாக திரிணமூல் காங்கிரஸ் இருக்கிறது. மம்தா பானர்ஜி இல்லாத இண்டியா கூட்டணியை யோசித்து கூட பார்க்க முடியாது” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

முன்னதாக மம்தா பானர்ஜி, “காங்கிரஸ் கட்சியுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. மேற்கு வங்கத்தில் நாங்கள் தனித்து போட்டியிடுவோம் என்று நான் ஏற்கெனவே கூறி வந்தேன். மேற்கு வங்கத்தில் பாஜகவை நாங்கள் தோற்கடிப்போம். நாங்கள் காங்கிரஸுக்குக் கொடுத்த அனைத்து யோசனைகளையும் அவர்கள் நிராகரித்தார்கள். அதனைத் தொடர்ந்தே மேற்கு வங்கத்தில் தனித்துப் போட்டியிடும் முடிவை நாங்கள் எடுத்தோம். நாங்கள் இண்டியா கூட்டணியில் இருக்கும் நிலையிலும், ராகுல் காந்தியின் யாத்திரை மேற்கு வங்கம் வழியாக செல்வதை மரியாதைக்காக கூட எங்களுக்குத் தெரிவிக்கவில்லை. அவர்களுக்கு எங்களுடன் எந்த உறவும் இல்லை” எனக் காத்திரமாகத் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்.

அசாம் மாநிலத்தில் பாரத ஒற்றுமை நியாய யாத்திரை நடைபெறுவதை ஒட்டி அங்கு முகாமிட்டுள்ள ஜெய்ராம் ரமேஷ் பார்பேட்டாவில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “நீங்கள் எல்லோரும் மம்தா பானர்ஜியின் கருத்தை சரியாக உள்வாங்கிக் கொள்ளவில்லை. பாஜகவை தோற்கடிக்க வேண்டும். அதற்காக நாங்கள் எதையும் செய்வோம் என்று மம்தா கூறியுள்ளார். இண்டியா கூட்டணியை அவர் புறக்கணிக்கவில்லை. திரிணமூல் காங்கிரஸ் கட்சியும், மம்தா பானர்ஜியும் இண்டியா கூட்டணியின் இரு வலுவான தூண்கள் என்று ஏற்கெனவே ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். அதை அனைவரும் அறிவர்.

இண்டியா கூட்டணியை மம்தா இல்லாமல் யோசிக்க முடியவில்லை. இந்தக் கூட்டணி மேற்கு வங்கத்திலும் ஒரே அணியாக போட்டியிடும். அதில் எங்களுக்குப் பூரண நம்பிக்கை இருக்கிறது. பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன. தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை பலன் தரும் என்று நம்புகிறோம்.

நாம் ஒரு நீண்ட பயணத்தை மேற்கொள்ளும்போது சில வேகத் தடைகள் வரும், சில சிவப்பு விளக்குகளும் எரியும். அப்பாடியான தருணம் இது. பாஜகவை வீழ்த்த எந்த ஒரு வாய்ப்பையும் இண்டியா கூட்டணி நழுவ விடாது. இதே எண்ணத்தோடுதான் பாரத ஒற்றுமை நியாய யாத்திரை மேற்கு வங்கத்திலும் நுழையும். யாத்திரையில் கலந்து கொள்ளுமாறு மம்தா பானர்ஜிக்கு மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி என இருவருமே தனித்தனியாக கடிதம் அனுப்பியுள்ளனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இண்டியா கூட்டணிக் கட்சிகள் அனைத்துமே பாரத ஒற்றுமை நியாய யாத்திரையில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்திருக்கிறார்” என்றார்.

சர்ச்சைக்கு வழிவகுத்த ஆதிர் ரஞ்சனின் கருத்து: முன்னதாக நேற்று காங்கிரஸ் கட்சியின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மம்தா பானர்ஜியை கடுமையாக விமர்சித்திருந்தார். மம்தா ஒரு சந்தர்ப்பவாதி என்று அவர் குறிப்பிட்டிருந்தார். அவரது தயவு இல்லாமலேயே காங்கிரஸ் மேற்கு வங்கத் தேர்தலை எதிர்கொள்ளும். அதற்கு எத்தகை வலிமை தேவை என்பதை காங்கிரஸ் அறிந்திருக்கிறது என்றும் கூறியிருந்தார். அந்தக் கருத்தே மம்தாவை ஆத்திரமூட்டி இந்த முடிவுக்கு இட்டுச் சென்றுள்ளது.

இந்த சர்ச்சை குறித்து இண்டியா கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் சவுரவ் பரத்வாஜ் கூறுகையில், “மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி மிகவும் வலிமையானது. காங்கிரஸும், இடதுசாரிகளும் எப்போதும் அவர்களை எதிர்த்தே களம் கண்டுள்ளனர். அதனால் இப்போது தொகுதிப் பங்கீடு என்பது அவ்வளவு எளிதாக அமைந்துவிடாது. இந்தப் பிரச்சினையை அவர்களே சுமுகமாகத் தீர்த்துக் கொள்வார்கள்” என்றார்.

இதனிடையே, வரும் மக்களவைத் தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடும் என்றும், இதில் சமரசம் செய்துகொள்ள மாட்டோம் என்றும் அம்மாநில முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார். அதன் விவரம் > பஞ்சாப் மாநிலத்தில் 13 மக்களவைத் தொகுதிகளிலும் ஆம் ஆத்மி தனித்துப் போட்டி: முதல்வர் பகவந்த் மான்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x