Published : 24 Jan 2024 03:41 PM
Last Updated : 24 Jan 2024 03:41 PM

பஞ்சாப் மாநிலத்தில் 13 மக்களவைத் தொகுதிகளிலும் ஆம் ஆத்மி தனித்துப் போட்டி: முதல்வர் பகவந்த் மான்

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் உடன் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் | கோப்புப் படம்

புதுடெல்லி: வரும் மக்களவைத் தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடும் என்றும், இதில் சமரசம் செய்துகொள்ள மாட்டோம் என்றும் அம்மாநில முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் ஆளும் பாஜகவை தோற்கடிக்கும் நோக்கில் நிதிஷ் குமார், மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி, கேஜ்ரிவால் உட்பட 26 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து 'இண்டியா’ கூட்டணியை உருவாக்கினார்கள். ஆனால், காங்கிரஸ் கட்சியுடனான தொகுதிப் பங்கீடு விவகாரம் பல்வேறு கூட்டணி கட்சிகளுக்கும் பெரிய தலைவலியாக மாறியுள்ளது. இந்நிலையில், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் புதன்கிழமை அளித்தப் பேட்டியில், “வரும் மக்களவைத் தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடும். இதில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம்.

பஞ்சாப் மக்கள் ஆம் ஆத்மி கட்சியை நேசிக்கிறார்கள். அவர்கள் ஆம் ஆத்மிக்கு 92 சட்டசபை இடங்களை வழங்கியுள்ளனர். பஞ்சாபில் காங்கிரஸுடன் கூட்டணி கிடையாது” எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியுடனான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் ஆம் ஆத்மி கட்சி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த முன்மொழிவுக்கு கேஜ்ரிவால் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இண்டியா கூட்டணி ஜெயிக்குமா என்பதைவிட, இது எத்தனை நாள் நீடிக்கும் என்பதுதான் எதிர்க்கட்சிகளின் கேள்வியாக இருந்தது. இந்நிலையில், இரண்டு மாநில முதல்வர்களின் இந்த நகர்வு, ‘இண்டியா’ கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

முன்னதாக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், "காங்கிரஸ் கட்சியுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. நான் ஏற்கெனவே மேற்கு வங்கத்தில் நாங்கள் தனித்து போட்டியிடுவோம் என்று கூறி வந்தேன். நாட்டில் என்ன நடக்கும் என்பது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. நாங்கள் மதசார்பற்ற கட்சி. மேற்கு வங்கத்தில் பாஜகவை நாங்கள் தோற்கடிப்போம். நாங்கள் அவர்களுக்கு (காங்கிரஸ்) கொடுத்த அனைத்து முன்மொழிவுகளையும் அவர்கள் நிராகரித்தார்கள். அதனைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் தனித்து போட்டியிடும் முடிவை நாங்கள் எடுத்தோம்” எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x