Published : 24 Jan 2024 02:27 PM
Last Updated : 24 Jan 2024 02:27 PM
கொல்கத்தா: மக்களவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி மேற்கு வங்கத்தில் தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவரும், மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இந்த நகர்வு, ‘இண்டியா’ கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புதன்கிழமை கூறுகையில், "காங்கிரஸ் கட்சியுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. நான் ஏற்கனவே மேற்கு வங்கத்தில் நாங்கள் தனித்து போட்டியிடுவோம் என்று கூறி வந்தேன். நாட்டில் என்ன நடக்கும் என்பது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. நாங்கள் மதசார்பற்ற கட்சி. மேற்கு வங்கத்தில் பாஜகவை நாங்கள் தோற்கடிப்போம்.
நாங்கள் அவர்களுக்கு (காங்கிரஸ்) கொடுத்த அனைத்து முன்மொழிவுகளையும் அவர்கள் நிராகரித்தார்கள். அதனைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் தனித்து போட்டியிடும் முடிவை நாங்கள் எடுத்தோம். நாங்கள் இண்டியா கூட்டணியில் இருக்கும் நிலையிலும், ராகுல் காந்தியின் யாத்திரை மேற்கு வங்கம் வழியாக செல்வதை மரியாதைக்காக கூட எங்களுக்குத் தெரிவிக்கவில்லை. அவர்களுக்கு எங்களுடன் எந்த உறவும் இல்லை.
மாநிலக் கட்சிகள் பலமாக உள்ள மாநிலங்களில் அவை தனித்துப் போட்டியிட வேண்டும். காங்கிரஸ் கட்சி மற்ற இடங்களில் போட்டியிடலாம் என்று நாங்கள் ஏற்கெனவே தெரிவித்திருந்தோம்" என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
முன்னதாக, செவ்வாய்க்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் மேற்கு வங்க மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆதி ரஞ்சன் சவுத்ரி கூறும்போது, "மம்தா பானர்ஜியின் தயவில் இந்த முறை தேர்தல் நடக்காது. மம்தா பானர்ஜி கொடுத்த இரண்டு இடங்களில் காங்கிரஸ் கட்சி பாஜகவையும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியையும் தோற்கடித்துள்ளது. தேர்தலை எவ்வாறு சந்திக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சிக்குத் தெரியும். மம்தா பானர்ஜி ஒரு சந்தர்ப்பவாதி. கடந்த 2011-ம் ஆண்டு காங்கிரஸின் கருணையால் அவர் ஆட்சிக்கு வந்தார்" என்று தெரிவித்திருந்தார்.
இதனிடையே, சவுத்ரியின் இந்தக் கருத்தை இது ஒரு பொருட்டு இல்லை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அசாமில் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையில் பங்கேற்று வரும் ராகுல் கூறுகையில், "தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருக்கிறது. அதுபற்றி இங்கு கருத்து தெரிவிக்க நான் விரும்பவில்லை. ஆனால், மம்தா பானர்ஜி என்னுடனும், காங்கிரஸுடனும் மிகவும் நெருக்கமாக உள்ளார். சில நேரங்களில் அவர்களுடைய தலைவர்கள் சில விஷயங்களைச் சொல்கிறார்கள். அவை எல்லாம் ஒரு பொருட்டே இல்லை" என்று கூறினார்.
மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையின்போது, மேற்கு வங்கத்தில் உள்ள 42 தொகுதிகளில் காங்கிரஸுக்கு 3 இடங்களை மட்டுமே திரிணமூல் காங்கிரஸ் ஒதுக்கியதாக கூறப்படுகிறது. முன்னதாக, கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சி 2 தொகுதிகளிலும், திரிணமூல் காங்கிரஸ் கட்சி 22 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தது நினைவுகூரத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT