Published : 24 Jan 2024 12:03 PM
Last Updated : 24 Jan 2024 12:03 PM

“அமித் ஷா கட்டுப்பாட்டில் இருக்கும் கைப்பாவை” - அசாம் முதல்வர் குறித்து ராகுல் காந்தி விமர்சனம்

குவாஹாட்டி: அசாம் முதல்வர் ஹேமந்த பிஸ்வா மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கட்டுப்பாட்டில் ஒரு கைப்பாவையாக இருப்பதாகவும், அமித் ஷாவுக்கு எதிராக ஏதாவது பேசினால், அடுத்த நிமிடமே பிஸ்வா கட்சியில், முதல்வர் பதவியில் இருந்து தூக்கி எறியப்படுவார் என்றும் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். தன் மீதும், கட்சியினர் மீதும் குவாஹாட்டி போலீஸார் வழக்கு பதிந்துள்ள நிலையில் அசாம் முதல்வரை ராகுல் இவ்வாறு விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை அதன் 11-வது நாளில் அசாமின் பார்பேட்டாவில் இருந்து புதன்கிழமை மீண்டும் தொடங்கியது. யாத்திரையின் போது பேசிய ராகுல் காந்தி, அசாம் முதல்வர் ஹேமந்த பிஸ்வா சர்மாவை அமித் ஷாவின் கைப்பாவை என்று கடுமையாக விமர்சித்தார்.

ராகுல் பேசுகையில், “உங்களிடம் வெற்றிலை இருக்கலாம். அதில் நீங்கள் சேர்க்கும் பாக்கு விற்பனை தொழில் முதல்வர் கையில் உள்ளது. மாலையில் நீங்கள் வெற்றிலை போட எண்ணும் போது, அதில் உள்ள பாக்கு முதல்வர் நிறுவனத்திலிருந்து வந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

உங்கள் முதல்வர் ஒவ்வொரு நாளும் பயத்தையும் வெறுப்பையும் பரப்புகிறார். அசாமில் வெறுப்பும் பயமும் பரப்பப்படும் போதெல்லாம் உங்கள் நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன. அவர் வெறுப்பை பரப்பி நீங்கள் அதை கவனித்துக்கொண்டிருக்கும் போது உங்கள் பைகளில் இருந்து அனைத்தையும் எடுத்துக்கொள்கிறார். இதுதான் அவரின் வேலை. அதனால் தான் அவர் நாட்டின் ஊழல் மிகுந்த முதல்வராக இருக்கிறார்.

காசிரங்காவில் இருந்தும் அவர் (ஹேமந்த பிஸ்வா) நிலத்தை எடுத்துள்ளார். நீங்கள் காண்டாமிருகங்களை பார்க்க காசிரங்கா தேசிய பூங்காவுக்கு போகும்போது, அங்கும் முதல்வருக்கு நிலம் இருப்பதைப் பார்க்கலாம். நீங்கள் எப்போது தொலைக்காட்சியை பார்த்தாலும் அதில் ஹேமந்த பிஸ்வா தான் தோன்றுவார். ஊடகங்கள் உங்களிடம் சொல்லும் அனைத்தும் உங்கள் முதல்வரால் அவர்களுக்கு சொல்லப்பட்டவையே. அசாம் முதல்வர் ஹேமந்த பிஸ்வாவின் அனைத்து கட்டுப்பாடுகளும் அமித் ஷாவின் கைகளில் உள்ளன. அவர் அமித் ஷாவுக்கு எதிராக எதாவது பேசினால் அடுத்த நிமிடம் கட்சியில் இருந்து தூக்கி எறியப்படுவார்” என்றார்.

ராகுல் மீது வழக்குப்பதிவு: கடந்த 14-ம் தேதி வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் தவுபல் நகரில் இருந்து பாரத ஒற்றுமை நியாய யாத்திரையை ராகுல் காந்தி தொடங்கினார். யாத்திரையின் 10-வது நாளான செவ்வாய்க்கிழமை அசாமின் குவாஹாட்டி நகருக்கு ராகுல் பாத யாத்திரையாக சென்றார். சுமார் 5,000-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்களும் அவருடன் சென்றனர்.

அப்போது குவாஹாட்டி நகருக்குள் ராகுல் காந்தி நுழைய அசாம் போலீஸார் அனுமதி வழங்கவில்லை. இதன் காரணமாக போலீஸாருக்கும் காங்கிரஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீஸார் அமைத்திருந்த தடுப்புகளை காங்கிரஸார் அகற்றினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "அசாம் மிகவும் அமைதியான மாநிலம். நக்சலைட் அணுகுமுறை எங்கள் கலாச்சாரத்துக்கு எதிரானது. ராகுல் காந்தி மக்களை தூண்டி விடுகிறார். வன்முறை தொடர்பான வீடியோவை காங்கிரஸாரே வெளியிட்டு உள்ளனர்.

இந்த வீடியோ ஆதாரத்தை வைத்து ராகுல் மீது வழக்கு பதிவு செய்ய அசாம் போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளேன். காங்கிரஸாரின் வன்முறையால் குவாஹாட்டியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது" என்று தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து குவாஹாட்டி போலீஸார் ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x