Published : 24 Jan 2024 06:12 AM
Last Updated : 24 Jan 2024 06:12 AM
ஸ்ரீகாகுளம்: காங்கிரஸ் கட்சியின் ஆந்திர மாநில தலைவரான ஒய்.எஸ். ஷர்மிளா ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் இச்சாபுரத்தில் கட்சி தொண்டர்களிடையே பேசியதாவது:
எனது தந்தை மறைந்த ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் பாதயாத்திரை இச்சாபுரத்தில்தான் நிறைவடைந்தது. மக்களின் கஷ்டங்களை புரிந்து கொண்ட அவர், தனக்கு ஒரு வாய்ப்பு வழங்குமாறு மக்களை கேட்டுக் கொண்டார். முதல்வரான பின்னர், ஏழைகளுக்கு 46 லட்சம் வீடுகளை இலவசமாக கட்டிக் கொடுத்தார். எனது ஆந்திர அரசியல் பயணமும் இதே இச்சாபுரத்தில்தான் தொடங்குகிறது.
ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி உயிரோடு இருந்த வரை, அவர் பாஜவிற்கு எதிரிதான். ஆனால், இப்போது ஆந்திர மாநில நிலைமையை பார்த்தால் கவலையாக உள்ளது. பாஜக விற்கு இங்குள்ள சில கட்சிகள் ஆதரவாக செயல்பட்டு வருகின்றன.
அவர்களுக்கு ஒரு எம்.எல்.ஏ. கூட ஆந்திராவில் இல்லை. ஆனால், இங்குள்ள அரசு பாஜகவின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறது. ஒரு முறை கூட ஜெகன்மோகன் ஆந்திர மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து விவகாரம் குறித்து பாஜகவிடம் பேசவில்லை.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து கண்டிப்பாக வரும். அதற்கான உறுதியை ராகுல்காந்தி அளித் துள்ளார். மக்களின் நலன் குறித்து ஆலோசிக்கும் கட்சி காங்கிரஸ் மட்டுமே. இவ்வாறு ஒய்.எஸ். ஷர்மிளா பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT