Published : 24 Jan 2024 06:10 AM
Last Updated : 24 Jan 2024 06:10 AM

ஆன்மிக சொற்பொழிவாற்றியதன் மூலம் கிடைத்த ரூ.52 லட்சத்தை ராமர் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கிய சிறுமி

அமராவதி: அயோத்தி ஸ்ரீராமர் கோயிலுக்கு ராமாயணம், பகவத் கீதை சொற்பொழிவாளரான 11 வயது குஜராத் சிறுமி பாவிகா மகேஸ்வரி ரூ. 52 லட்சம் நன்கொடை வழங்கி உள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரை சொந்த ஊராக கொண்டவர் பாவிகா மகேஸ்வரி (11). இவரது தந்தை ராஜேஷ் மகேஸ்வரி ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன், இவர்களின் குடும்பம் வியாபாரத்திற்காக குஜராத் மாநிலம், சூரத்திற்கு இடம் பெயர்ந்தது. சிறு வயது முதலே பாவிகா மகேஸ்வரி ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்டு ஆன்மிக நூல்களை படிக்கத் தொடங்கினார். ராமாயணம் மற்றும் பகவத் கீதையில் நல்ல தேர்ச்சி பெற்ற இவர் பல ஊர்களுக்கு சென்று ஆன்மிக சொற்பொழிவாற்றத் தொடங்கினார். சமூக வலைதளங்களிலும் பிரபலம் ஆன இவருக்கு பரிசுகளும் பாராட்டுகளும் குவிந்தன.

இவர் மொபைல் போன்களுக்கு மக்கள் அடிமையாவதை தடுக்கும் ஒரு நிறுவனத்தின் துணை நிறுவனராக உள்ளார். மேலும் உலக திறன் தொடக்க நிறுவன மேலாண் இயக்குநராகவும் ஒரு புதிய நிறுவனத்தின் இளம் சிஇஓ ஆகவும் பணியாற்றி வருகிறார். இந்த இளம் வயதில் பலருக்கு முன்னோடியாகவும், வழிகாட்டியாகவும் உள்ள பாவிகா மகேஸ்வரி, குஜராத்தில் உள்ள சூரத் சிறையில் 3,000 கைதிகளுக்கு தினமும் ஆன்மிக சொற்பொழிவாற்றி அவர்களை நல்வழிக்கு மாற்றியுள்ளார்.

பாவிகா மகேஸ்வரிக்கு கடந்த 2021-ல் மத்திய அரசு நாரி சேத்னா விருது வழங்கி பாராட்டியது. இதனை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். மேலும், ரத்தன் டாட்டா, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் பாவிகாவை பாராட்டியுள்ளனர். பல சொற்பொழிவுகள் மூலம் பாவிகா இதுவரை ரூ. 52 லட்சம் வரை நன்கொடை பெற்றுள்ளார். அதனை அவர் அயோத்தி ஸ்ரீ ராமர் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x